Friday, November 4, 2016

அம்மணி - வாஸந்தி





காதல்... மிக நுட்பமான உணர்வு. பதிமூன்றிலிருந்து பதினாறு வயது வரை வருவது ஒரு வகை என்றால்... மணமாகி மூன்று குழந்தைகளுக்கு பிறகு வருவது வேறு வகை. மனிதன் ஒரு சமூக விலங்கு... ஆனால் இக்கதை பொறுத்தவரை மனிதன் ஒரு சுயநல விலங்கு. 

 


குருமூர்த்தி... மனைவி சியாமளா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தில்லியில் வசிக்கும் சற்றே மேல் நடுத்தர வர்கத்து குடும்ப தலைவன். இவனின் மனைவி சியாமளா ஒருநாள் எந்த முன்னறிவிப்பும் இன்றி காற்றில் கரைந்து போனது போல இரண்டு வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள். சிலநாட்களாகவே இருந்து வந்த அலட்சிய போக்கு, அவள் சென்னையில் இருக்கும் தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தை அவனுக்கு கொடுக்கிறது.


 


பத்து வயது பெண்குழந்தை ராதிகாவுடனும் ஆறு வயது ஆண்குழந்தை ராஜாவுடனும் குருமூர்த்தி திண்டாடி போகிறான். சென்னைக்கும் அவள் போகவில்லை என்னும் தகவல் அறிந்து குழம்பிப் போகிறான். அவள் ஒரு ஆணுடன் தொலைபேசியில் அடிக்கடி பேசிய விபரத்தை மகள் மூலம் அறிந்து கொள்ளும் நிலையில் அவளிடமிருந்து கடிதம் வருகிறது... எனக்கு உன்மேல் காதலில்லை... என்னை காதலிப்பவனுடன் நான் செல்கிறேன் என்று...


  ..


குழந்தைகளை சமாதானப் படுத்தி... அலுவலகம் சென்று சமையல் செய்து அல்லாடும் குருவை பார்க்கும் போது... இப்படியும் ஒரு தாய் செய்வாளா என்று சியாமளா மீது ஏற்படும் கோபம்... அவள் அந்த சின்ன குழந்தை சுமதியை கொண்டு வந்து வராண்டாவில் விட்டுச் செயலும் போது பன்மடங்காகிறது.


 


இதற்கிடையே, வீட்டை பார்த்துக் கொள்ளவும் சமையல் செய்யவும் ஊரிலிருந்து அம்மணி என்ற முப்பதிரண்டு வயது பெண்மணி அனுப்பி வைக்கப் படுகிறாள். குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் அம்மணி அந்த வீட்டின் சகலமுமாகிறாள்.


 


மனைவியை தாஜா செய்து சரி கட்டி கொள்ளும் கடமை கூட இல்லாமல்... அம்மணியின் வரவு குருமூர்த்திக்கு ரொம்ப வசதியான ஏற்பாடாகி போகிறது. குழந்தைகளை மிக அன்புடன் அரவணைத்துக் கொள்ளும் அம்மணி ஒரு கட்டத்தில் குருவையும்... 'வாங்கோ' என்று அரவணைத்துக் கொள்வதும், இரண்டு மூன்று முறை கருகலைப்பு நடப்பதும் கொடுமை. இவ்வளவு நடந்த பிறகும்... அம்மணியை... 'நீ இந்த வீட்டு வேலைக்காரி' என்ற அளவில் நிறுத்துகிறான் குரு.


 


காலங்கள் உருண்டோட... மூத்த மகள் ராதிகா குருவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலை வைக்காமல் CA படித்த பையனை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட... இளைய மகன் ராஜா, மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றுவிட... கடைக்குட்டி சுமதி மட்டும் அம்மணியிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க... இந்த நிலையில் ரூபா கங்குலி என்ற வங்காளப் பெண் மீது குருவுக்கு ஒரு சபலம்... அவளை திருமணம் செய்து கொண்டால் சமூகத்தில் அந்தஸ்துடன் வலம் வரலாம் என்று கணக்கு போடுகிறான். அவள் இவனுக்கு மேல யோசிக்கறா.... அம்மணியை அனுப்பினா மட்டுமே திருமணம் என்று அவள் சொல்ல... அதற்கும் தயாராகிறான் குரு!


 


இதற்கிடையே... மாஜி மனைவி சியாமளா கோவாவில் நல்ல வசதியுடன் நாகரீகமாக வெட்டி விடப் பட்ட கூந்தலுடன் காட்சி கொடுக்க... இவனுக்குள் ஒரு தோற்றுப் போன உணர்வு தோன்றுகிறது 


இவன் அம்மணியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலும் நேரத்தில் அவளும் இவனை பிரிந்து சென்று விடுகிறாள்.


 


ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது எவ்வளவு உண்மையோ... அதே அளவுக்கு... ஒரு ஆணின் தவறுகளுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதும் உண்மையே. இங்கே குருவின் தவறுகளுக்கு பின்னால் அவன் மனைவி சியாமளா மற்றும் அம்மணி. என்ன தான் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ளத் தவறியவனாக இருந்தாலும்... மூன்று பிள்ளைகளை விட்டு வேறொருவனுடன் சென்றதை ஏற்க முடியவில்லை. அம்மணி உள்ளார்ந்த அன்புடன் அவனை அரவணைத்துக் கொண்டாலும் அங்கீகாரமற்ற உறவு என்பது என்றுமே ஏற்புடையது அல்ல. குருவின் நண்பர்கள் இருவரும் அவரவர் மனைவிக்கு துரோகம் செய்வது போலவே சொல்லப் பட்டிருப்பது... சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லா ஆண்களும் ஒன்று தான் என்று சொல்லாமல் சொல்கிறது. குருவிடம் பெரிதாக குறை ஒன்றும் இல்லாவிடினும்... அவனுடைய attitude... தன் சௌகர்யத்திற்காக அடுத்தவரை ஏய்க்கும் சுயநலம்... குறைகளில் பெரிய குறையாக தோன்றுகிறது. அம்மணி அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாலும்... வேறொரு நல்ல சமையற்காரி கிடைத்து விட்டால் அம்மணியை... அவளின் பாசத்தை... மறந்து விடக் கூடியவன் தான் குரு.


 


இப்படி பட்ட ஆணுடன் சியாமளா போன்ற சுயநலமான பெண்ணாக இருந்தாலும் அம்மணி போன்ற வாஞ்சையான பெண்ணாக இருந்தாலும்... பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் சகித்துக் கொள்ள முடியாது போலும்...

No comments:

Post a Comment