Friday, November 4, 2016

அன்பின் அடைமழைக் காலம்...


 நண்பர் சிபி அவர்களின் விமர்சனம்...



தோழமைகளுக்கும், அவர் தம் திறமைகளுக்கும்...


என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்...!!!


அத்திப்பூத்தாற்போல் அவ்வப்போது நிகழும் சிற்சிறு 'மரபு மீறல்களால்' தான் நம் மனித சமூகமே பற்பல பரிணாம வளர்ச்சிக் கண்டிருப்பதாய் நான் கண்டு, கேட்டு, படித்தறிந்த அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. நம் சமகாலத்திலேயே, என் தோழிகள் சிலர் உட்பட, கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் பலர், திறமையிருந்தும் குடத்தில் இட்ட விளக்காய் முடங்கிப்போவதைக் கண்டு பல சமயங்களில் மிகவும் மனம் வெதும்பியிருக்கிறேன்.

அதிசயிக்கும் வகையில், இங்கு lw-வில் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும் 'நான்காம் நடுவர்' விவாத மற்றும் விமர்சனக் குழுவில் இருந்து, ஆர்வத்துடன் இப்படைப்பாக்கக் களத்தில் தைரியமாகக் குதித்து, "அன்பின் அடைமழைக்காலம்" என்ற, தாம் எதிர்கொண்ட இம்முதல் பந்தையே அதிரடியாய் சிக்ஸருக்கு அனுப்பியிராவிட்டாலும், லாவகமாய் பவுண்டரிக்குத் திருப்பி பார்வையாளர்களான நம் சக வாசகத் தோழமைகளின் இதயத்தில் அழுத்தமானதொரு தடம்பதித்திருக்கும், எனதன்புத் தோழி ஷாஹிதா தங்களுக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்...

இக்கதையினை நான் வாசித்தபொழுது என்னை மிகவும் கவர்ந்தது, தங்களின் பாத்திரப் படைப்புகளும், அவற்றின் மூலம் வாசகர்களுக்கு உணர்த்தப்பட்ட செய்திகளும் தான். ஒரு படைப்பாளியைப் பற்றியதான சரியான மதிப்பீடுகளை நாம் அறியக்கூடிய செயலூக்கம் உடைய முறை, மிகச்சிறந்ததாக அறியப்படும் அவனது பாத்திரப்படைப்புகளுள் ஒன்றில் அவனை கண்டடைய முற்படுவதே. இக்கதையில் உலா வரும் 'ஷமீம்' என்ற கதாப்பாத்திரத்தின் குணக்கூறுகளை ஆராய்ந்ததின் மூலம் தங்களின் மீதான மதிப்பீடுகளை நான் அறிந்துக் கொண்டேன். மற்ற ஏனைய பிற பாத்திரங்களின் படைப்பிலும் தங்களுக்கு இருந்த ஈடுபாடு பாராட்டுக்குரியது.

கதையின் கருவினை ஆரம்பப்புள்ளியாகக் கொண்டு ஒரு கதாசிரியன் அக்கதையில் தன் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கையில், காட்சிகள் விரிகின்றன, கதாப்பாத்திரங்கள் வார்க்கப்படுகிறார்கள், அவர்களின் பெயர்சூட்டு விழாவும் கதையின் போக்கினூடே இனிதே நடந்தேறுகிறது, அவர்களின் குணாதிசியங்களும், அவர்களுக்கான பாத்திர வரையறைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன, காட்சிக்குக் காட்சி கதையின் நகர்வும், அதன் முடிவும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒரு படைப்பு என்னதான் நிஜக் கதையாகவோ, அல்லது புனைவுக் கதையாகவோ இருந்தாலும், அக்கதாசிரியனின் சிந்தனையில், அவன் ஆளுமைத்தனத்தோடு அக்கதாப்பாத்திரங்கள் கையாளப்படுகையில், ஒரு நிகழ்வைப் பற்றியதான தன் சுயக்கருத்துக்களையும், ஆழ்மனதின் ஆசைகளையும் ஏதாவதொரு கதாப்பாத்திரத்தின் வாயிலாகத் தக்கத் தருணங்களில் அவன் வெளிப்படுத்த முற்படுவான். அவ்வகையில், இக்கதையின் ஆசிரியையானத் தாங்கள் ஷமீம் என்ற கதாப்பாத்திரத்தினுள் ஆழமாய் ஊடுருவியிருந்ததை, அவள் சம்மந்தப்பட்ட பகுதிகளை வாசகர்கள் வாசிக்கையில், ஷமீம் அவர்களோடு நேரிடையாகவே உரையாடுவதைப் போன்ற உள்ளுணர்வு உண்டாவதின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஷமீம் மூலம் தாங்கள் வாசகர்களிடம் சேர்த்திருக்கும் நல்லொழுக்க இறை சிந்தனைகள், ஒரு குறிப்பிட்ட மத அடையாளங்களையேத் தாங்கி வந்திருந்தாலும், அவை மத பாகுபாடின்றி பொதுவாய் மனித குலத்தின் மேன்மைக்கே உதவுவதாய் இருக்கின்றன. அதற்காக என் மனமார்ந்த நன்றிகள் தோழி. மார்க்கங்கள் வெவ்வேறாயினும், நம் அனைவரது பயணத்தின் இலக்கும் ஒரே இடம் தானே...!!!

நல்லது, நட்புகளின் ஊக்கத்தோடு, தன் கன்னி முயற்சியின் பலனாய், இவ்விடம் வெளிப்பட்டிருக்கும் தோழி ஷாஹிதா அவர்களின் தனித்திறமைகளுக்கு கிடைக்கப்பெற்ற இவ்வெற்றியானது, இன்றும் நத்தைக்கூட்டிற்க்குள்ளாகவே தம்மை சுருக்கிக்கொண்டும், தமது திறமைகள் அனைத்தையும் முடக்கிக்கொண்டும், வெறும் பார்வையாளராகவே இவ்விடம் வலம் வரும் ஏனைய பிற என் சகோதர-தோழமைகளின் மனதில் ஓர் எழுச்சி விதையாய் விழுந்து, படைப்பு விருட்சங்கள் பலவாய் ஆகப் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்...!

'
அன்பின் அடைமழைக் காலம்' - சந்தோஷப் புன்னகைப்பூக்கள் பூக்கும் தருணம்..!!!

அன்புடன்...
சிபி

No comments:

Post a Comment