Sunday, May 22, 2022

விதியே கதை எழுது - அப்சல்



 விதியே கதை எழுது! – அப்சல்

முகநூல் நண்பர் எழுத்தாளர் அப்சல் அவர்கள், ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ எனும் தன்னுடைய நூலிலிருந்து அவ்வப்போது சில பகுதிகளை முகநூலில் பதிவிடுவது வழக்கம். ஆரம்பத்தில் அசிரத்தையாகவே அப்பதிவுகளை நான் வாசிக்கத் துவங்கினேன். ஒருசில தினங்களுக்குள்ளாகவே, தவற விடக்கூடாத பதிவுகள் அவை என்பதை நான் அனுமானித்து விட்டேன். சில எழுத்துகளை பாராட்டாமல் என்னால் கடந்து செல்ல முடிவதில்லை. அவ்வாறு கடந்து செல்வது அந்த எழுத்துக்குச் செய்யும் அவமரியாதை என்றெனக்குத் தோன்றுவதுண்டு. அத்தகைய எழுத்துக்குச் சொந்தக்காரர் அப்சல் பாய். அப்படி அவரது பதிவுகளில் பல முறை எனது பாராட்டுதல்களை நான் தெரிவித்திருக்கிறேன். இந்த வருட புத்தகக் கண்காட்சியில் நான் வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் அவருடைய புத்தகத் தலைப்புகளை, மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். என்னுடைய புத்தகங்கள் சிலவற்றை அவருக்கு அளிக்க வேண்டும் என்கிற அவாவும் எனக்கு ஏற்பட்டது.
சில நாள்களுக்கு முன்பாக மெசஞ்சரில் தொடர்பு கொண்டவர், தன்னுடைய நாவலை எனக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்தார். புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் என்றதற்கு, ‘கண்காட்சி நடக்கும் நேரத்தில் உங்களுடைய விமர்சனம் கிடைத்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும்’ என்றார்.
“இன்ஷா அல்லாஹ், நிச்சயம் செய்கிறேன்” என்றதற்கு மேல் அப்போது நான் எதுவும் பேசவில்லை.
“யாருக்கு யார் உதவி செய்வது அப்சல் பாய்! நாமனைவருமே இறைவனின் உதவியைக் கொண்டு தானே அவரவர் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்! உண்மையில், உங்களுடனான அறிமுகத்தையும், உங்களுடைய படைப்பை வாசிப்பதற்கான வாய்ப்பையும் இறைவனின் உதவியாகவே நான் பார்க்கிறேன்! நல்ல படைப்புகள் மக்களின் இதயங்களைச் சென்றடைய எவருடைய உதவியும் அவசியமில்லை. இறைவனின் பெருங்கருணையே போதுமானது. அதைக் கொண்டு அவை தாமாகவே தனக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொள்ளும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை,” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அவருடைய புத்தகம் எனக்கு கூரியரில் வந்து சேர்ந்ததும், Dunzo வில் நான் அனுப்பிய என்னுடைய புத்தகங்கள், முகவரி கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் எனக்கே திரும்பி வந்ததும் தனிக்கதை.
நான் கொண்ட நம்பிக்கை இன்று உண்மையாகிக் கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த மனநிறைவுடன் இக்கதை குறித்த என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.
இது, விதி எழுதிய கதை!
தன்னுடைய திறமைக்கான அங்கீகாரம் ஏதேனும் ஒரு திசையிலிருந்து கிடைத்துவிடாதா எனும் ஏக்கத்தில் தன்னுடைய படைப்பினை பலருக்கும் அனுப்பி, விமர்சனங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் எழுத்தாளரின் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களின் கோர்வை. ‘சொல்லப்படாத உண்மைகள் நஞ்சாகிவிடும்’ எனும் நீட்ஷேவின் கூற்றை முன்னுரையில் மேற்கொள் காட்டும் ஆசிரியர், உண்மைகளை உள்ளது உள்ளபடி எவ்வித வார்த்தை ஜாலங்களுமின்றிப் பதிவு செய்து, தன்னுடைய உணர்வுகளை அமிர்தமாக்கிக் கொண்டுள்ளார். நூற்றி நான்கு பக்கங்கள் கொண்ட இந்நாவல் இரண்டு காட்சிகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல் பகுதி சமகாலத்தில், சராசரி குடும்பத் தலைவனான எழுத்தாளரின் அன்றாட வாழ்வியலை மிக மிக எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. தான் எழுதிய புத்தகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 38c யிலும் 42 லும் அவர் அலையும் காட்சிகள் தத்ரூபம். அடுத்தமுறை பெரியமேடு மசூதிப் பக்கம் செல்லும் போது, மனம் தானாக அந்த புத்தகக் கடையையும், புத்தகமாகவே காட்சியளிக்கும் அறிவு நிறைந்த ஆனால் அன்பற்ற ‘சொல்லு சலீமை’யும் தேடும் என்று தோன்றுகிறது.
“எப்பவும் இதே தானே! புக் எழுதறது போன்ல பேசறது... அவன பாக்கறேன் இவன பாக்கறேன்னு கிளம்பிப் போக வேண்டியது...” என்கிற மனைவியின் எதார்த்த குத்தலுக்குப் பதிலாக, ஐந்து நிமிடங்களில் கிளம்பி வருவதாகச் சொல்லி, அரை மணி நேரம் கழித்து அவர் கிளம்பியதை, சாதாரணம் போல பதிவு செய்து வைத்திருப்பது புன்னகையை வரவழைத்தது.
சென்னையிலேயே இருந்தாலும், பல ஆண்டுகள் கழித்து பீச்சுக்கு செல்லும் கணவன் மனைவி – சேலை மீது மனைவி அணிந்திருந்த புர்கா, அவர்களுடைய பேருந்துப் பயணம், புகைப்படம் எடுத்து பிள்ளைகளுக்கு அனுப்பி அவர்களுடன் சந்தோஷத்தைப் பகிர்தல் என்று மிக எளிய அரிய அழகிய காட்சிப் படுத்துதல்கள் அருமை.
தான் எழுதிய புத்தகம் பேசப்பட வேண்டுமெனும் நோக்கத்தில் எழுத்தாளர் மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வந்து விழுகிறது ஒரு நண்பரின் விமர்சனம். அதில் டேக் செய்யப்பட்டிருக்கிறது அபிராமி எனும் பெண்ணின் பெயர். அப்பெயரின் பால் அவருக்கு ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு... அதைத் தொடர்ந்து நட்பழைப்பு விடுத்தல்... நட்பழைப்பேற்றல்... இவருடைய கதைக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லி நண்பர் மூலமாக தூது விடுத்தல்... என்று சம்பவங்களின் நகர்வுகள் புருவம் உயர்த்தச் செய்கின்றது.
தன்னுடைய கதையின் சகல பரிமாணங்களையும் தொட்டு எழுதப்பட்ட முன்னுரை, அவருக்குப் பித்து பிடிக்கச் செய்கிறது. தன்னையறியாமல் வார்த்தைகளை வலையாக்கி அபிராமி வீசிவிட, அதில் மீனாகச் சிக்கித் தவிக்கிறது எழுத்தாளரின் மனம்.
“எனக்கு 20 அபிராமியை தெரியும். நீங்க யாரைச் சொல்றீங்க?” என்று நண்பரொருவர் கேட்க, “அடேய் எனக்கு ஒரு அபிராமியால இருபது விதமான அவஸ்த்தை... இதுல இவன் வேற!” என்று புலம்பும் அளவுக்குச் செல்கிறது.
இடையிடையே உருவமில்லா அருவமான ஏதோவொன்றுடன் நிகழும் உரையாடல்கள் மிகச் சுவாரஸ்யம். சில சமயங்களில் நக்கலடித்தாலும் பல சமயங்களில் அது அவருக்கு வழி காட்டுகிறது... நல்வழிப்படுத்துகிறது... எச்சரிக்கை விடுக்கிறது... தத்துவமும் பேசுகிறது... மிக முக்கியமானதொரு தருணத்தில் நெஞ்சோடு அணைத்து தலை கோதி தாய்ப்பாலின் வாசனையைச் சுகிக்கச் செய்கிறது. அது எதுவென்பது இவ்விமர்சனத்தின் இறுதியில்.
ஒரு காலத்தில் ஜும்மா நமாஸ் வேளைகளில் மசூதிக்குச் செல்லாமல் பெரியார் திடலில் போய் மெளனமாக ஒரு மூலையில் அமர்ந்து கொள்ளும் பழக்கமுடையவர், தற்போது கடவுளை நம்பும் நாத்திகனாக... அவ்வப்போது மூன்று நாள் தப்லீக் ஜமாத் செல்லும் பழக்கத்திலிருக்க, அவ்வாறு சென்றிருந்த ஒரு மழை நாளில் நண்பர்களுடன் அபிராமியைச் சந்திக்கிறார்.
ஹி ஹி
இளிக்காதேடா, அசிங்கமா இருக்கு
அபிராமி வந்திருக்காங்க
வந்தால் வரட்டும். நீ போனா உன் நிலை குணா மாதிரி ஆயிடும்.
அப்படியெல்லாம் ஆகாது. நான் மெச்சியூர்ட் பெர்சன்.
எனக்குத் தெரியாதா? half boiled uncle நீ. உனக்கு வயசு தான் 55. மனசு இன்னும் பதினைஞ்சுல தான் நிக்குது. நீ போகாதே... இது உனக்கு ஆபத்து, ” எனும் உருவமில்லா அருவத்தின் அறிவுறுத்தலையும் மீறி அபிராமியைச் சந்திக்கிறார்.
மனைவியின் முகத்தைப் பார்த்தவுடன் குல்பி ஐஸ் போலக் கரைந்திடும் கதைசொல்லியின் மனம், ஓஷோவின் ஆசிரமமான முகநூல் எனும் மாய உலகினுள் நுழைந்து அதனுள் சஞ்சரிக்கையில் வேறாக மாறிப்போனதன் மர்மம் என்ன? எந்தத் துயரத்தை மறக்க அது அந்த முகமூடியை தன்போக்கில் எடுத்தணிந்து கொண்டது என்பதும் இரண்டாவது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
“தப்ப முடியாமையும் தவிர்க்க முடியாமையும் ஒரு முழுமையான தனித்தன்மையுடன் சேர்ந்து உருவாகிற போதுதான், இலக்கியம் பிறக்கிறது.” எனும் க.நா.சு வின் கூற்றை முன்னுரையில் மேற்கொள் காட்டியிருக்கும் ஆசிரியர், தப்ப முடியாமையாக மரணத்தையும் தவிர்க்க முடியாமையாக காதலையும் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.
மிகக் கனமான இந்தப் பகுதியில், அந்தந்த நிகழ்வுகளின் போது, தனது மனம் மீட்டிப் பார்த்த பழைய நினைவுகளை காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அனைத்தும் கொள்ளை அழகு.
தன்னுடைய மகனுக்கொரு மகன் பிறந்திருக்கும் வேளையில், தன் மகன் பிறந்த போது, தன் மனைவி தன்னை... “உன்னால தானடா எனக்கு இந்த நிலை...” என்று ஏசியதைக் குறிப்பிட்டிருப்பது மிக வேடிக்கை. நான்கு வயது மகன் முதன்முதலாகப் பள்ளிக்குச் சென்ற நாள் – அற்புதமான நினைவுகூறல்!
வாழவேண்டிய வயதில் நேர்ந்த இளங்குருத்தொன்றின் மரணத்தை விவரிக்கும் இப்பகுதியை வாசிக்கையில், கொரோனா இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் நெஞ்சிலறைகிறது. நோன்புக் காலத்தில் நிகழும் அம்மரணத்தின் அவலச்சுவையில் நெஞ்சம் உலர்ந்து போகிறது. அழுகையே பிரார்தனையாகவும் பிரார்த்தனையே அழுகையாகவும் மாறிய அவலம்! How are you dear! என்று மருமகளுக்கு அனுப்பிய இறுதி மெசேஜ்! – இக்கதை என்னில் ஏற்படுத்திய தாக்கம் மறைய நிறைய நாட்களாகும்!
இவை தவிர இக்கதையில் நான் இரசித்த சில வரிகள்:
work from home – முதலில் ஆரம்பித்தவன் நான் தான்.
மனிதர்களைப் பிடித்து விட்டால்... மனம் விட்டு மட்டுமல்ல மனதில் பட்டதையெல்லாம் பேசிவிடுவேன்.
மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொண்டிருந்தேன். நதிகளுக்கு நடுவே நான் நனைந்து கொண்டிருந்தேன்.
எங்கள் இருவரின் பேச்சிலும் அபிராமி இருந்ததைப் போலவே, அவர்கள் இருவரின் பேச்சிலும் நான் இருந்திருக்கிறேன்.
மழைத் தண்ணீரை விழுங்கிக் கொண்டேயிருக்கும் ஓட்டை விழுந்த குடத்தைப் போல என் மனசு எப்பவுமே காலியாக இருந்தது.
வாழ்க்கைக்கும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். நடந்த சம்பவங்களை ரீவைண்ட் பண்ணி அழிச்சிடலாமேன்னு! ஆனா, மனசோட ரிமோட் நடந்ததையே திரும்ப திரும்ப அசை போடும் ரீவைண்டாகத் தான் இருக்கிறது.
மொபைல் எனக்கு ஆலயமாகவும் மெயில் எனக்கு கன்பெஷன் அறையாகவும் மாறிப் போனது. அவள் பேசுவது எனக்கு அப்பம். அவளுடைய மௌனத்தை நான் திராட்சை ரசமாகப் பருகிக் கொண்டிருந்தேன்.
முகநூலின் பெரிய பிரச்சனை மனுஷ்யபுத்திரன். கடவுளைப் போல ஓய்வே இல்லாத ஆள் மனுஷ். கடவுள் சதா விதியை எழுதிக் கொண்டிருப்பதைப் போலவே மனுஷ் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பார்.
பேக் ஐடிக்களின் உலகம் கனவுக்குள் காணும் கனவைப் போலிருந்தது.
தனியார் ஆஸ்பத்திரி என்ற ஒன்றே இருக்கக் கூடாது.
இவையனைத்தையும் தாண்டி, “ஓ என்னைவிட பெரிய அழகியா அந்த அபிராமி... உன் மூஞ்சிக்கு கெழவனாகி இன்னும் லவ்வா?” என்று கேட்கும் அப்சல் பாயின் மனைவியின் அன்பின் பேரழகும், “நான் தான்டா நீ... நீ தான்டா நான்” எனும் உருவமற்ற அருவத்தின் அடையாளப்படுத்துதலும் Amazing!
கதையின் முடிவில் ‘முற்றும்’ போடாமல் ‘தொடரும்’ போட்டிருப்பதற்கான அர்த்தம் என்னவென்பதை எனக்கு மட்டும் சொன்னால் மிக மகிழ்வேன் பாய்!
உங்கள் வீடிருக்கும் தெரு முனையில் சிந்து பவன் வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கிறது. வீட்டிற்கு அருகே ஷியா மசூதி இருக்கிறது என்பதை வாசிக்கையில், உங்கள் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு என்னுடைய புத்தகங்களை அனுப்பியிருந்தால் நானே dunzo boy க்கு வழி சொல்லியிருக்கலாம் என்றெண்ணிக் கொண்டேன். நீங்கள் பகலில் உறங்கும் போது அலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்யும் தகவல் முன்பே தெரிந்திருந்தால் குறைந்தபட்சம், புத்தகங்களை பிற்பகல் வேளையில் அனுப்பியதையேனும் தவிர்த்திருந்திருக்கலாம். உங்களுக்காக பிரத்யேகமாக நான் கையெழுத்திட்ட ஐந்து புத்தகங்கள், உங்களுடைய வாசிப்பிற்காகக் காத்திருப்பதை நினைவில் கொள்ளவும்.
என்னுடைய வாசிப்பு உங்களுக்கு வேண்டுமானால் வாழ்த்தாக இருக்கலாம். ஆனால், எனது இப்பதிவு என் தரப்பிலிருந்து உங்களுடைய முயற்சிக்கான சிறியதொரு மரியாதை!
நன்றி!

Sunday, January 12, 2020

சென்னை புத்தகக் கண்காட்சி

வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் எஸ்.எஸ் பதிப்பக புத்தகங்கள் கீழ்க்கண்ட அரங்கங்களில் கிடைக்கும் என்பதை அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பிரியா நிலையம் அரங்கம் எண் 280
அருண் பதிப்பகம் அரங்கம் எண் 292
நியூ புக் லேண்ட்ஸ்
(நர்மதா பதிப்பகம்)அரங்கம் எண் 374/75
நாதம் கீதம் புக்ஸ்
எமது பதிப்பக புத்தகங்களுக்கு வாசகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நல்லாதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா
எஸ். எஸ். பப்ளிகேஷன்ஸ்



Friday, January 3, 2020

நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு! - ஹமீதா



தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
நலம் தானே நட்புகளே!
'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' - ஹமீதா
சென்னை புத்தகக் கண்காட்சியில்...
ஆதித்யன் அருணாச்சலம் அனாயாசமாகக் கையாளும் கூடைப்பந்தைப் போலவே, இக்கதையை வாசிக்கவிருக்கும் வாசகர்களும், மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல இக்கதையினுள் நுழைந்து வெளியே வர என்னுடைய அன்பான வாழ்த்துகள்!
===========================================
“ரோஜா! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு! கொஞ்ச நேரம் விளையாடினா தான் என் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். நாம பேசலாம்... ஜஸ்ட் டென் மினிட்ஸ்!” என்று சொல்லிவிட்டு கோர்ட்டை நோக்கி ஓடினான்.
மிகுந்த காதலுடன் அந்த ஆரஞ்சு வண்ணப் பந்தை கையில் எடுத்துக் கொண்டான். அவனுடலின் ஒவ்வொரு செல்லிலும் உற்சாகம் ததும்பி வழிந்ததை அவளால் தரிசிக்க முடிந்தது.
“ஜீசஸ்! ஹவ் மச் ஹி லவ்ஸ் தி கேம்!” அவளுடைய உதடுகள் தன் போக்கில் முணுமுணுத்தன.
அந்தப் பந்து அவனுடைய கைகளில், அவன் சொன்ன சொல்லைத் தட்டாமல், சமத்துக் குழந்தையைப் போல அடிபணிவதையும், கிட்டத்தட்ட ஒரு செப்பிடு வித்தைக்காரனைப் போல அவன் அதனை ஆட்டி வைப்பதையும் வழக்கமான ஆச்சர்யத்துடனே பார்த்திருந்தாள் மெலனி.
அனாயசமாக பாலை ட்ரிபிள் (dribble) செய்தபடியே தன்னுடைய நீளமான கால்களால் ஓடியவன், க்ஷண நேரத்தில் நூற்றெண்பது டிகிரி கோணத்தில் திரும்பி சட்டென்று பந்தை, கூடையை நோக்கி வீசினான். அது ஏதோ மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல கூடைக்குள் நுழைந்து வெளிவந்தது.
===============================================
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா