Friday, November 4, 2016

கலையாத கனவுகள் – சம்யுக்தா


 

பருவ வயதில் தோன்றும் முதல் காதல்.....அது வெறும் சலனமாக இருக்கலாம் அல்லது ஈர்ப்பாக...அல்லது தீவிரமான காதலாகவும்  இருக்கலாம். இவ்வுணர்வை அனுபவியாமல் கடந்து விட்ட ஆணோ பெண்ணோ இருப்பாரெனில்....ஒன்று அவர் பொய்யுரைக்கிறார், இல்லை அவருக்கு மன/உடல் ரீதியான பிரச்சனை இருக்கிறது என்று கொள்ளலாம்.


 

மேல்தட்டு பெண்ணான ரிதன்யா...தந்தையால் வளர்க்கப் பட்டவள். சுதந்திரமாக சிந்திக்கவும் நாகரீகமான வாழ்வியலுக்கும் பழகியவள். இவள் ஒரு ஆர்கிடெக்ட்.

 

கல்லூரி காலத்தில் சைத்தன்யனை ஒருதலையாக விரும்பும் ரிதன்யா....தொடர்ந்து அவனால் அவமானப் படுத்தப் படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். எல்லைமீறிய அவனின் சொற்களின் சூடு அவளின் மனதில் ஆறாத ரணமாக இருக்க, அவன் மீதான பாதிப்பு தனக்கு இன்னமும் இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்யும் முகமாக வேலை நிமித்தம் மீண்டும் மதுரை வருகிறாள்.

 

சைதன்யன்....தந்தை நோயுற்றிருக்க, தமையன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள, குருவி தலையில் பனங்காயை வைத்தது போல...மிக இளம் வயதில் குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலைக்கு தள்ளப் பட்டவன். அவனின் பார்வையில்...காதல் என்பது வெட்டி வேலை. அவனின் சூழ்நிலையை கணக்கில் கொண்டால் அவன் ரிதாவின் காதலை நிராகரித்ததில், கோபம் கொண்டதில் பிழை காண வழியில்லை.

 

பாண்டிச்சேரியின் பிரெஞ்சு காலனிகளை காலம் காலமாக வடிவமைத்த கட்டிடக் கலை நிபுணர் குடும்பத்தின் வாரிசான ஆங்கிலோ இந்தியன் ஹியுகோ லாரஸ். ரிதாவின் குடும்ப நண்பனும் மேலதிகாரியுமான லாராசுக்கு ரிதாவின் மீது காதல்.

 

வீடே உலகம் என்னும் எண்ணப்போக்குடைய சைதன்யனுக்கும் உலகமே வீடு என்னும் எண்ணப் போக்குடைய லாரசுக்கும் எல்லா விதத்திலும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

 

மூன்று ஆண்டுகள் லாரசுடன் ஒரே இடத்தில் தங்கி பணி புரிந்த போது...நண்பனாக மட்டுமே பார்க்க முடிந்தவளுக்கு, அவன் காதலை வெளிப்படுத்திய பிறகு அது முடியாமல் போகிறது. அவனின் இயல்பான தொடுகையும் வேறு செய்தி சொல்ல...மனதளவில் குழம்பி போகிறாள்.

 

லாரஸ் மீது தோன்றும் உணர்வை ஆராயவும் முற்படாமல்...பருவ வயதில் கொண்ட காதலும்....திருமணம் என்றவுடன் தோன்றும் சைதன்யனின் உருவமும்....அவளை குன்றிப் போக செய்கிறது.

 

ஆடை அணிகலன், கூந்தல் அலங்காரம் என்று மேலை நாடுகளின் தாக்கமிருந்தாலும்...மனதால் தமிழ் பெண்ணாக இருப்பதால் சைதன்யனை தேர்ந்தெடுத்தாளா???????

 

இல்லை....அவளுக்கு எல்லா விதத்திலும் மிகப் பொருத்தமான, அவள் மீது வைத்த காதல் கொடுத்த நம்பிக்கையில் தன்னுணர்வுகளை முகத்திலும் காட்டாமல் கண்ணியமாக, அவளின் மனக் குழப்பங்கள் தெளிய காத்திருக்கும் லாரசை தேர்ந்தெடுத்தாளா????

 

வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்......

 

காதல் சுயநலம் மிக்கது. தன் மனம் கவர்ந்தவளை தக்க வைத்துக் கொள்ள, எப்பேர்பட்ட கண்ணியவானும் சுயநலமாக செயல்படுவான் என்று சொன்ன விதம் அருமை.

 சராசரியான இந்திய ஆணின் மனநிலையை பிரதிபலிக்கும் சைதன்யன்....பருவ வயதில் உறுதியாக இருந்தாலும் பக்குவப்பட்ட வயதில், தன் தவறுணர்ந்து கொள்வது இயல்பு. வாழ்வின் அடிமட்டதிலிருந்து உயர்ந்த நிலையை அடையும் ஆண்மகன், காதல் என்னும் இளைப்பாறலுக்கு ஏங்கும் பருவத்தில்...ஒருகாலத்தில் தன்னை நேசித்தவள்...இன்னமும் தன் மீதான பாதிப்பில் இருப்பது போல தோற்றம் தந்தால்...தடுமாறிப் போவதும் இயல்பே. 

எந்த குடும்பத்துக்கு அவள் உகந்தவள் இல்லை என்று நிராகரித்தானோ..அதே குடும்பம் அவளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் போது....அவளுடைய சிறந்த வாழ்வுக்காக தன்னுணர்வுகளை மறைத்துக் கொள்வது சிறப்பிலும் சிறப்பு.

பருவ வயதின் உணர்வுகள், பெரும்பாலும் ஹார்மோன்களின் கேளிக்கை நடனம். அந்த வயதை கடந்துவிட்டால்...மேகக் கூடங்கள் கலைந்து சென்ற பிறகு தெளிவடையும் வானம் போல...மனம் நிர்மலமாகிவிடும். இக்கதை பொறுத்தவரை அவளின் அவமானங்களும் மனக் காயங்களும் கசடாக அவள் மனதில் தங்கிவிட்டதே அவளின் குழப்பங்களுக்கு காரணமாக அமைகிறது. கதை நெடுகிலும் நிலவிய குழப்பங்களுக்கு ஈடு செய்வது போல அமைந்த இறுதி மூன்று அத்தியாயங்களும் அருமை. நான் அந்த மகாவ் பறவையின் விசிறியாகவே ஆகிவிட்டேன்.

கனவு காண்பது இயல்பு தான். கனவில் தோன்றும் பிம்பங்கள் மாறினாலும் கனவு கலையாத அளவில் வாழ்வை வடிவமைத்துக் கொள்வதில் இருக்கிறது வாழ்வின் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment