Sunday, December 31, 2017

நிழல் போலவே நின்றாய்!


SS பப்ளிகேஷன்ஸின் மற்றுமொரு பெருமைமிகு வெளியீடு
நிழல் போலவே நின்றாய்! - ஹமீதா
விரைவில்...

Happy New Year Friends!


தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


Friday, November 17, 2017

எனது படைப்புகள் மின்னிதழ் வடிவத்தில்...

வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்புடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த  "யாரைக்கேட்டது இதயம்?" "பேசும் மொழியிலெல்லாம்..." ஆகிய இரு நாவல்களும் e book வடிவில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

e book ஆக download செய்தும், Kindle lending libraries மூலமும் வாசித்து மகிழ கீழ்கண்ட லிங்கில் க்ளிக் செய்யவும்.



Yaaraikkettadhu Idhayam யாரைக்கேட்டது இதயம்: Romantic Novel (Tamil Edition) eBook: Hameeda: Amazon.in: Kindle Store



Pesum Mozhiyilellam பேசும் மொழியிலெல்லாம்...: Romantic Novel (Tamil Edition) eBook: Hameeda: Amazon.in: Kindle Store

எனது முதல் மூன்று படைப்புகளும் மிக விரைவில் மின்னிதழ் வடிவத்தில் வெளியிடப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 

எனது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் எனது கணவருக்கும், அனைத்து தோழமைகளுக்கும், அன்பு வாசகர்களுக்கும் நன்றிகள் பல!  தனது அனுபவம் வாய்ந்த நல் யோசனைகளால் உடனிருந்து வழிநடத்தும் நண்பர் சிபி அவர்களுக்கு என்னுடைய அன்பும் நன்றியும்!

ஏக இறைவனுக்கே புகழனைத்தும்!

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா

Monday, October 23, 2017

மெர்சல் - விமர்சனம்





பொதுவாக நான் அவ்வளவாக படங்கள் பார்ப்பதில்லை. விகடன் மற்றும் முகநூல் விமர்சனங்கள் வாசித்து அப்டேட் செய்து கொள்வதோடு சரி. எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்ட படங்களை அரைமணி நேரத்திற்கு மேல் பார்க்க முடியாமல் எழுந்து போன சம்பவங்களும் உண்டு. அனைவரும் கழுவி ஊற்றிய படங்களை ‘ஏன் இப்படி? நன்றாகத் தானே இருக்கிறது...’ என்ற எண்ணப்போக்குடன் முழுமையாக பார்த்த சம்பவங்களும் உண்டு. என் பிள்ளைகள் இருவரும், அவர்களுடன் நான் படம் பார்க்க அமர்ந்தால், என்னைக் கிளப்பி விட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். ஏனென்றால், அந்தளவுக்கு படத்தின் ஓட்டைகளைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பேன். நான் இவ்வளவு சொன்ன பிறகும் தொடர்ந்து இவ்விமர்சனத்தை வாசிக்கவிருப்பவர்களுக்கு என்னுடைய வந்தனங்கள்.

‘மெர்சல்” படத்தின் நாயகன் பெயர் ‘வெற்றிமாறன்’ என்பது என்னைப் இப்படம் நோக்கி உந்தித் தள்ளிய காரணங்களில் ஒன்று என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். (பண மதிப்பிழப்பு நிகழ்ந்த காலகட்டத்தின் பின்னணியில் நான் படைத்த நாவல் ‘பேசும் மொழியிலெல்லாம்...’ கதையின் நாயகன் பெயரும் வெற்றிமாறன் என்பது நினைவுகூறத் தக்கது)   

“சுயபுராணம் போதும்! நீ விமர்சனத்துக்கு வா!” என்ற உங்களின் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது நட்புகளே!

இந்தியாவில் இன்றைய தேதியில் மருத்துவத் துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சீர்கேடுகளையும்... ஆளும் அரசாங்கங்களின் தவறான கொள்கை முடிவுகளால் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் பேசிய துணிவிற்கு முதற்கண் என்னுடைய சல்யூட்.

பள்ளி மாணவி விபத்தில் அடிபட்ட காட்சியும் அதைத் தொடர்ந்த அக்குழந்தையின் மரணமும் மனதை வெகுவாக பாதித்தது. மருத்துவம் என்பது வியாபாரமாகிப் போயிருப்பது உண்மை தானென்றாலும், ஆம்புலன்ஸ் டிரைவரின் செயல்... ஏற்க முடியவில்லை... நம்பவும் முடியவில்லை!

பிரான்ஸ் காட்சிகள் அனைத்தும் காதில் பூ சுற்றல்! வெளிநாட்டில்... பலர் கூடியிருக்கும் பொது நிகழ்வில் கொலையை அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்புவதென்பது அத்தனை எளிதா? என்ற கேள்வி எழுகிறது. இதில், அக்கொலையை அரங்கேற்றியது டாக்டர் மாறன் என்று நாம் நினைத்திருக்க, அது மேஜிஷியன் வெற்றி என்று பின்னர் தெரிய வருகிறது. அங்கு ஏற்கனவே மேஜிக் ஷோ நடத்துவதாக இருந்தவர், தேர்ந்த anesthetist-ஆல் எட்டு மணி நேரம் மயங்கியிருக்கும் வகையில் மயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி சத்யராஜ் சொல்கிறார். வெற்றி எப்படி அனஸ்தீஷியா கொடுத்தார் என்பதை அட்லீயை சந்தித்தால் கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன் மக்களே!

இம்மிக்ரேஷனில் அதிகாரிகளை அடித்துப் போட்டு விட்டு எகிறிக் குதித்து ஓடி, உயிரைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே நிகழக் கூடியவை!

ஐந்து ரூபாய் டாக்டர் மாறன்... அவருக்கு பிரான்ஸில் விருது கொடுக்கிறார்கள்... சரி! அவர் பூவாக்கு என்ன செய்கிறார் என்ற கேள்வி என்னுள் எழுந்து விட்டது. வேறு மருத்துவமனையில் வேலை செய்வது போலவும் காண்பிக்கவில்லை... சற்று வசதியானவர் போலவும் காண்பிக்கவில்லை. ஒருவரை பேட்டி எடுக்கப் போகிறோம் என்றால், முதலில் அவரைப் பற்றிய தகவல்களை கூகுளில் தானே தேடுவோம்... சமந்தா நேரே சென்று ரோஸ்மில்க் வாங்கிக் கொடுத்து....??????? (சுவற்றில் மண்டையை டொம்ம் டொம்ம் என்று முட்டிக்கொண்ட மொமன்ட்...)

அப்பா விஜய்(வெற்றிமாறன்) நித்யா மேனன் ஜோடி ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது. குறிப்பாக நித்யா மேனன் கவனம் ஈர்க்கிறார். பஞ்சாபில் வெட்டவெளியில் சுகப் பிரசவம்... தமிழகத்தில் மருத்துவமனையில் சிசேரியன்... தாயும் குழந்தையும் மரணம்... ‘வாட் எ மெடிகல் மிராகிள்’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. மதுரை திருவிழா... தீ... நகைகளைக் கழற்றிக் கொடுத்து மருத்துவமனை கட்டச் சொல்லும் பெண்கள் என்று டிபிகல் தமிழ் சினிமா...

தாய் தந்தை இறந்த பிறகு வடிவேலு இருபிள்ளைகளையும் அழைத்து வருகிறார். சிசேரியனில் இறந்ததாக சொல்லப்படும் குழந்தை எப்படி உயிர்பிழைத்தது என்று தெரியவில்லை... வெற்றி... இஸ்லாமிய மேஜிஷியனால் வளர்க்கப் படுகிறார் என்பதை எப்படியோ புரிந்து கொண்டேன்... மாறன் எப்படி கோவை சரளாவிடம் சென்று சேர்ந்தார் என்பது நிஜமாகவே புரியவில்லை!

காஜல் அகர்வால் பாவம்...

சமந்தாவிற்கு அந்த நேர்காணல் நிகழ்ச்சி பெரிய ஆறுதல்...

விஜய்... அனைத்துக் காட்சிகளிலும் முழு அற்பணிப்பைக் கொடுத்திருக்கிறார்...

விஜய்... சமாந்தா பாடல் காட்சி இனிமை...

எஸ்.ஜே. சூர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆசம்! பிரகாஷ்ராஜ் ரகுவரன் வரிசையில் தமிழ் திரையுலகில் வித்தியாசமான வில்லனாக வலம் வர எல்லா தகுதிகளும் உள்ளது.

இறுதிக்காட்சியில் விஜய் மாயமாய் மறைவது... அந்நியன் விக்ரமை நினைவு படுத்தியதை தவிர்க்க இயலவில்லை...  

விஜய் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் கொண்டாட்டம்...

சாமானியர்களுக்கு...??? அந்த கடைசி மூன்று நிமிட வசனம் பெரிய ஆறுதல்.

அந்த மூன்று நிமிடங்கள், மத்தியில் ஆள்பவர்களை மெர்சலாக்கியதன் காரணம்... யஷ்வந்த் சின்ஹாவின் குரல் பாமரனை சென்றடைய சாத்தியமில்லை; எதிர்கட்சிகள்... மேடைப் பேச்சாளர்கள்... டிவி விவாதங்கள் அனைத்தையும் விட சக்தி வாய்ந்த வெகுஜன ஊடகம் வாயிலாக இக்கருத்து பதிவு செய்யப் பட்டு விட்டது என்ற பதற்றத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்.

திரைக்கதையில் சொதப்பினாலும்... மேற்சொன்ன ஒரு காரணத்திற்காக மட்டுமே... நன்றி அட்லீ & விஜய்!

திரைப்படங்கள் மீது அவ்வளவு நாட்டமில்லாத எனக்கும்... ‘இப்படத்தை பார்த்தே தீர வேண்டும்’ என்ற உந்துதலை ஏற்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும், இந்த விமர்சனத்தை எழுதி முடித்த பிறகு... குழப்பமே இல்லாமல் அவருக்கும் என்னுடைய நன்றிகள்!

Tuesday, October 3, 2017

வால்டர் வெற்றிவேல் - சுதா ரவி

மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெருசு என்பதற்கு சான்றாக ஒரு கதை...

மூன்றே நாட்கள்... ஐம்பத்திமூன்று பக்கங்கள்... ஏழே அத்தியாயங்கள்...

ஆனால் ஒவ்வொரு எபியும் நச் நச்சென்று கதைக்குள் நம்மைக் கட்டிப் போட்டது நிஜம்.

வால்டர் வெற்றிவேலாக மகனை உருவாக்கத் துடிக்கும் ரிடயர்ட் கான்ஸ்டபிள் சுந்தரவடிவேலு... அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் தண்ணி காட்டும் மகன் வெற்றிவேல் என்று அதகள ஆரம்பம்.


பார்த்துக் கொண்டிருக்கும் கான்ஸ்டபில் வேலையிலிருந்து கழண்டு கொள்ள வெற்றி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வயிற்றைப் பதம் பார்கின்றன. ஆனால், அவ்வளவும் வெற்றிக்கு ஆண்ட்டி கிளைமேக்ஸாக உருமாறுவது சூப்பர்.

சத்தியவாணி ஐ பிஎஸ் ஸின் தடாலடி அறிமுகமும் அவர்களுக்கிடையேயான ஒரு குட்டி பிளாஷ் பேக்கும் அசத்தல். இளநீர் ரொமான்ஸ்... ரசனை... (வெற்றி ன்னு பேர் வெச்சாலே இப்படி கோக்கு மாக்கா தான் பேசுவாய்ங்க போல)

தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கும் பெற்றோருக்கும்... வீட்டுக்குள் இருக்கும் மனைவிக்கு ஒன்றும் தெரியாது  என்பது போன்ற இயல்பான ஆணாதிக்கத்துக்கும் நகைச்சுவை எனும் வாழைப்பழத்தில் சாமர்த்தியமாக ஊசியை மறைத்து வைத்து ஏற்றிய சுதாவின் எழுத்தாற்றலுக்கும் ஹியூமர் சென்சுக்கும் hats off!


ஐபி எஸ் என்ற பதவிக்காக அல்லாமல் வெற்றியை அவனுக்காகவே நேசிக்கும் சத்யா, காதலனின்... கணவனின்... உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் கதாநாயகி... ரியல் ஹீரோயின்!

கான்ஸ்டபிளாக அறிமுகமாகும் வெற்றிவேல் தந்தையின் ஆசைப்படி ஐபிஎஸ் ஆகிறானா இல்லையா என்பதை கதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிரிக்க சிரிக்க சிந்திக்க வைத்த வித்தியாசமான முயற்சி... வாழ்த்துகள் சுதா ரவி!

Wednesday, September 6, 2017

பேசும் மொழியிலெல்லாம் - செல்வராணி ஜெகவீரபாண்டியன் அவர்களின் விமர்சனம்



பேசும் மொழியில் எல்லாம் ....

இந்த புத்தகம் கைக்கு வருவதட்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது! லைப்ரரியில் முன்னாடியே புக் பண்ணி வைத்து வாங்கினேன்!!

ஹமீதா இந்த கதையை ஆரம்பிக்கும்போதே எனக்கு இந்த கதையில் அவர்கள் சமீப கால நிகழ்வுகளை கோர்த்து எழுதுகிறார்கள் என்று பெரிய ஒரு ஆர்வம் இருந்தது.நாம் அனைவருமே அனுபவித்த பிரச்சினைகளை அவர்கள் தொடும்போதே நாம் கதைக்கு நெருக்கமாகி விட்டோம்!ரூபாய் நோட்டு செல்லாததில் தொடங்கி,முதல்வர் மரணம், சென்னையில் வந்த வெள்ளம் ,ஒரு புறம் மக்கள் பணம் எடுக்க வரிசையில் நிட்பது, அதே நேரம் சிலர் வேகம் வேகமாக நகைகளும் பொருட்களும் வாங்கி குவிப்பது , சாதாரண மக்கள் வீட்டில் சேமித்து வைத்து இருந்த சேமிப்புகள் எல்லாம் வெளியே எடுத்து கரைத்தது என்று
நம் மனதில் தோன்றிய அணைத்து விஷயங்களையும் அருமையாக கதையின் ஓட்டத்திலேயே உறுத்தாத வண்ணம் எழுதியதட்கே ஒரு பெரிய சபாஷ்!!!

கதை பற்றி .....நடுத்தர வர்க்கத்துக்கே உரிய கஷ்டங்கள் நிறைந்த குடும்பம்,சுயநலம் மிக்க கார்த்திகா ஒரு புறம் ,பெற்றவர்களின் நிலை அறிந்து தன தலை மேல் பாரம் சுமக்கும் நயனி,.படிக்கும்தம்பி, பரிதாப அப்பா பாவப்பட்ட அம்மா...இவர்களுடன் நம் நாயகன் வெற்றி!!எப்படிப்பட்ட ஒரு அருமையான கதா பாத்திரம்!! சொந்த முயட்சியில் ஒரு தொழில் ஆரம்பிச்சு அது சரியா போகாத விரக்தியில் இருக்கும்போது அப்பாவின் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அவனை சென்னை நோக்கி இழுத்து வருகிறது.அங்கு அவன் இறங்கும்போதே பணம் செல்லாத செய்தியுடன் தான் இறங்குகிறான்!!நயனுக்கு போன் செய்ய வேண்டிய சூழ்நிலை,நிட்பதுவே நடப்பதுவே பாடல் ரிங் டோன்லயே அவன் பிளாட்!!!அன்றைய இரவில் அவளின் குடும்பம் செய்யும் உதவிகளை வேறு வழியின்றி அவன் ஏற்று கொள்கிறான்!!அவளின் தலையசைப்பில் விழுபவன்தான்!!! பின் எழவே இல்லை!!!

நயனியும் அவனின் ரிங் டோனில் ...காக்கை சிறகினிலே நந்தலாலா...கவரப்படுகிறாள்..அனால் ஹமீதா அதை எழுதல!!நானே அப்படி நினைச்சுக்கிறேன்!!இருவரும் சேர்ந்து வேலை பார்க்க நேரிடுகிறது..ப்ரமோதின் வருகை, அவன் ஒரு ஸ்பாயில்ட் சைல்டு ஆகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறான்!!தன மீது உள்ள ஒரு கர்வம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...நயனின் மீது ஆசைப்படுவதும் அது நடக்கவில்லை என்று அறிந்ததும் வெளியே இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே உடைந்து அழுவது...அசத்தலான கதாபாத்திரம்!!

அந்த லிஃப்ட் !! நான் கூட அதை ஒரு பொருட்டா நினைக்கவே இல்ல!!
அதில் இப்படி ஒரு காதல் பயணத்தை எதிர் பார்க்கல!! வாவ் ஹமீதா!!!கதையின் ஒரு பாத்திரமாகவே மாறி விட்டது!!என்ன ஒரு அழகான காதல் சிருங்காரங்கள்!! வெற்றியின் மைண்ட் வாய்ஸ் ...சான்ஸே இல்ல!! எனக்கு ரொம்ப பிடிச்சது...மாம்பழம் பார்த்திருக்கேன்,நல்ல அல்போன்சா மாம்பழத்தை ப்ரூட் கார்விங்க்ல ரோஜா பூவா செஞ்சு அதுக்கு கொஞ்சம் மல்லைகை பூவை வெச்சு விட்டா எப்படி இருக்கும்ன்னு இப்போதான் பார்க்கிறேன்!!!....சூப்பர் ஹமீதா...

கார்த்திகா மாதிரி பெண்களை என்ன சொல்றது??இன்னும் அவளுக்கு இவர்களின் காதல் புரியவே போவதில்லை..தான் தன சுய நலம் என்று இருக்கும் பெண்களையும் நாம் பார்க்கிறோமே!!யாருக்கும் தெரியாமல் அவர்களின் திருமணம் நடக்கும் வரை நம்மை ஒரு திகிலுடன் படிக்க வைக்கிறது கதை...பாவம் பிரமோத், காதல் சொல்ல நினைக்கும் போதே அவள் கர்ப்பம் பற்றி அறிய நேர்கிறது..அவன் அந்த சூழ்நிலையை கையாளும் விதம் அட சொல்ல வைக்கிறது!!வில்லன் என்று நாம் நினைத்த நேரத்தில் அவன் ஒரு அழகான மனிதனாக நம் கண்ணுக்கு தெரிகிறான்!!

ஆனாலும் அந்த கிட்சன் சீன இல்லேன்னா நாங்க உங்களை கும்மிதான் எடுத்துருப்போம்!!அதுக்கே உங்களுக்கு என் பாராட்டுக்கள் ..வாழ்த்துக்கள் ஹமீதா ...அடுத்த கதையுடன் வாங்க...நானும் இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டேன் என்பதை பெருமையாக கருதுகிறேன்!!

Monday, August 28, 2017

பேசும் மொழியிலெல்லாம் - எழுத்தாளர் அபிபாலா அவர்களின் அழகிய கருத்தாக்கம்


ஹாய் ஹமிதா மேடம் .

நீங்கள் 'பேசும் மொழியிலெல்லாம்' மில் பாரதியை.. நேசத்தை...காதலை.. நட்பை..குறையாமல் அள்ளி..அள்ளி..கொடுத்திருக்கிறீர்கள் ...

வெற்றி மாறன்...பாரதியின் வரிகளில் மெய்யுருகிப் போகும் மிஸ்டர். ரைட். இன்டீரியர் டிசைன் மேல் ஈடுபாடு கொண்டு வாழ்வில் அதற்கான மிகச்சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் துடிப்பான ரோஷக்கார இளைஞன்..
தந்தையின் சுடுசொற்களால் காயப்பட்டு...தன் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு.. தந்தையின் நண்பரின் பர்னிச்சர் ஷோரூமில் வேலைக்கு சேர அவன் எடுக்கும் முடிவே அவன் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..
தன் சீனியர் ஸ்டாஃபாக அறிமுகமாகும் நயனிகாவிடம் மனதை பறி கொடுக்கிறான்.. அவளைத் தன்னோடு இணைத்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றானா... என்பதுதான் ஹமிதா மேடமின் விரல்களின் வழியே இன்று நம் கைகளில் தவழும்...'பேசும் மொழியிலெல்லாம்'..😊😊
 

demonetisation என்ற சூறாவளி நம்மைப் போன்ற சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப் போட்டது..என்பதை இதைவிட யதார்த்தமான யாரும் சொல்ல முடியாது... கூடவே புயல்.. மழையின் பாதிப்புகளும் நம் கண் முன்னே பயம் காட்டுகிறது..
 

நயனிகாவின் ஹீரோ வெற்றிதான் என்றாலும்... பிக் பாஸாக.. வெளிநாட்டிலிருந்து அதிரடிப்புயலாக நுழைந்து... வெற்றி யிடம் நட்பையும்.. நயனிகாவிடம் காதலையும் ... பெற்றோரிடம் அன்பையும் வேண்டி நிற்கும் .. பிரமோத் தான் டைட்டில் வின்னர் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது..!!😉😉
 

சுயநலத்தின் மொத்த உருவமாக கார்த்திகா.. அப்பட்டமான மிடில் கிளாஸ் ஃபேமலி பெற்றோராக மோகன்ராம்..விஜயா..
 

கண்டிப்பும் சிடுசிடுப்புமாக வீரராகவன்.. சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு கயவர்களால் ஏற்படும் ஆபத்து.. என்று சுவாரஸ்யங்களுக்கு குறைவே இல்லை.. கதைக்கு சுவை கூட்ட ரொமான்ஸை மடியில் கட்டிக் கொண்டு லிஃப்டும் கூடவே பயணிப்பது ரசனை..
 

ஆனா இரண்டு சீன்ல வர்ற தியாகுவுக்கு கூட கலைச்செல்வியை ஜோடி சேர்த்து வச்சிருக்கீங்க.. !! பிரமோத்தை மட்டும் புலம்ப வெச்சு ஏமாற்றத்தை கொடுத்துட்டீங்களே.. இதெல்லாம் செல்லாது.. செல்லாது..!! அதனால இதோட செகண்ட் பார்ட் எழுதறீங்க.. !! சரியா.. இது எங்க ரிக்வெஸ்ட்.. அதுவும் சில பல ரொமான்ஸுடன் ஒரு சூப்பர் டூப்பர் பெண்ணை ஜோடியாக போடறீங்க..!!😁😁 சரி தானே ஃப்ரண்ட்ஸ்.. உங்க கிட்டயிருந்து விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
 

இந்தக் கதை நம் உள்ளத்தோடு ஒன்றி... உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து எங்கள் அனைவரின் இதயத்தையும் குளிர்விப்பது நிஜம்.. இதன் பிரமாண்ட வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷாஹி... 💖💖

பேசும் மொழியிலெல்லாம் - தோழி ஜென்சி ஜோஸ் மைக்கேல் அவர்களின் கருத்தாக்கம்

பேசும் மொழியிலெல்லாம்

முன்பாதி ஆன்லைனில் படித்தபோதே கவர்ந்த வித்தியாசமான கதா நாயகன் , கதா நாயகி....இன்று மீதியும் வாசித்து முடிக்க என்னில் கலவையான உணர்வலைகளை எழுப்பியது....அந்த உணர்வலைகளிலிருந்து மீளும் முன்பாக கருத்தை பதிவிடவும் தூண்டியது....

குறிப்பிட்ட காலச் சூழலை துளியளவும் பொய்மை கலக்காமல் கதையோட்டத்தோடு கொண்டுச் சென்றிருப்பது மறுபடி அவற்றை நினைவுக் கூறச் செய்து ஏற்படுத்தும் அதிர்வு உணர்வலைகள் ஒரு புறம்.

கார்த்திகாவெனும் எதிர்மறை உணர்வலைகள் ஒரு புறம்,

சூழ்னிலை கைதியான நயனி, கூடவே துன்புறும் அவள் பெற்றோர் , தம்பி இவர்களின் துயர உணர்வலைகள் ஒரு புறம்,

பெண் குழந்தை ஒன்று சிதிலமாக்கப்பட்டு விடுமோவென பயந்து அவ்வாறு நிகழாமலிருந்தமைக்கு கதாசிரியருக்கு நன்றிச் சொல்லத் தூண்டும் உணர்வுகள் ஒரு புறம்,

ப்ரமோதின் அதீத தன்னம்பிக்கை மற்றும் அவனது தந்தையின் அதீத புத்திசாலித்தனம் கொணர்ந்த எரிச்சல் உணர்வு ஒரு புறம்

நயனியின் கையறு நிலையை கண்டுக் கொள்ளாமல் அவளை பலியாக்க துணிந்த குடும்பத்தினர் மீதெழுந்த கோப உணர்வுகள் ஒரு புறம்

தன்னுடைய காதலை அடைய போராடுகின்றவனின் திட்டங்களை திகில் பரவ பார்த்திருந்தது ஒரு புறம்

அவர்கள் காதல் மழையில் நனைந்திருந்த நினைவுகள் ஒரு புறம்...

சிற்சில எதிர்பாரா துன்பங்கள் இக்கட்டுக்கள் தாண்டி சுபமாக கதை நிறைவுற்ற போதோ தித்திப்பான உணர்வலை பரவியது மனமெங்கிலும்...

மிக அருமையான கதை ஹமீதா சிஸ்...

பிரமோத் கணிக்கப்பட இயலாதவன்....அவன் அழும் போது கஷ்டமாக இருந்தது...

அவனுக்காக நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே எனும் ஆதங்கம் தோன்றியது உண்மை.

சில இடங்களை quote செய்ய நினைத்தேன்...இப்போது மொத்த கதையுமே மனதிற்குள் வலம் வருவதால் நியாபகம் வரவில்லை... மறுபடி வாசித்து பின்னர் அவற்றை குறிப்பிடுவேன்... (y)

இன்று உங்கள் கதையை வாசித்ததில் பெரியதொரு விருந்து சாப்பிட்ட களிப்பை உணர்கின்றேன்....

மென்மேலும் பற்பல அழகான படைப்புக்கள் அளிக்க வாழ்த்துக்கள்

யாரைக்கேட்டது இதயம் - எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்களின் கல கல பதிவு



யாரைக்கேட்டது இதயம் – ஹமிதா aunty

ஒரு Stylish ஆன கதை…இதுவரை இவ்வளவு stylish ஆன கதை யாரும் எழுதல..அப்படியே எழுதியிருந்தாலும் நான் படிக்கல…..சுமந்த் – மை டியர் சுமன்….விக்ரம் கு ஈகுவளா எனக்குப் பிடிச்ச ஹீரோ.ஒன் ஐ சுமன் ஒன் ஐ விக்ரம்…சுமந்த் பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போகலாம்….ஹேண்ட்சம் stylish…..அண்ட் சோ ஆன்.சமத்தானவன் அதே நேர, சாமர்த்தியமானவன்..வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ள தெரிந்தவன்..அழகான வாழ்க்கையை வாழ்வது வேறு..இருக்கும் வாழ்க்கையை அழகாக்கி கொள்வது வேறு..பிறப்பினால் ஒருவனின் குணம் தீர்மானிக்க படுவதில்லை.ஒருவனின் குணத்தை அவன் தான் தீர்மானிக்கிறான் என்பதை இச்சமுகத்துக்கு உணர்த்துகிறான் சுமந்த் நாராயன்.அவனது பிஎன்ஏ கண்ணுக்கு முன் அழகாய்க் காட்சிப்படுத்திகிறார் ஆசிரியர்….சுமந்த் அவன் வாழ்க்கையை அவனே செதுக்கிய சிற்பி..அதுவும் அழகாய் செதுக்கியவன்/.
 

ஷ்ரேயா அவளது நுண்ணுணர்வுகளை நுணுக்கமாய் படைத்துள்ளார்.எனக்கு பிடித்த வித்த்தில் செதுக்கிய கதாபாத்திரம்.அவளது துணிச்சல் நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
 

அவர்களிடையே எப்படி வந்த்து என்று தெரியாமலே சாரலாய் வருடும் தென்றல்…
 

விவேக் – வினோ ஆத்ர்ச தம்பதி.ஆனா விவேக் பத்தி பேசினா நான் என்ன ஆவேன்னு உங்களுக்கே தெரியும் யுத் மதர்!!..(உங்களுக்கு மனசாட்சியே இல்ல)
 

சமூக கருத்துகளோடு சாரலாய் காதலும் stylish ஆன கதை…சுமந்த் என்னையும் கட்த்திட்டு போகவும்..உங்க கையால் ஜூஸ் குடிக்க ரெடி மை மேன்….
 

பாரதிம்மா-
 

“நான் என்பது உடலானால்
என் கணவர் என்னை காதலிக்கிறார்”
வலி வலி வலி மட்டுமே மிகுந்த வார்த்தைகள்…என்னால தாங்கிக்கொள்ளவே முடில….
 

புவனா- தவறு செய்யாமல் சிலுவை சுமக்கும் சராசரி பெண்.ஷ்ரவனின் மாற்றம் மகிழ்ச்சி.நட்ஸ் சூப்பர்..அச்சிட்டப்பட்ட ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது..ரெஜிஸ்தர் மேரேஜ் பத்தி ஹா ஹா உங்க சேவைக்கு நன்றி aunty..when I think of that ha ha ha ..உங்க க்டமை உணர்ச்சிக்கு அளவே இல்லை.அந்த வில்லங்கம் பிடிச்ச வில்லங்கள் பத்தி பேச விருப்பமில்லை.
 

என் அண்ணாவே மாப்ள பார்க்கும்போது சுமந்த் தான் ஃப்ர்ஸ்ட் சாய்ஸ் சொல்லிட்டேன்…ஆமா உங்க மேனேஜர் தானே கவர் பிக் தீபிகாவை செலக்ட் செய்த்து..ஹா ஹா…

படிக்காதவங்களாம் கண்டிப்பா they have missed a must read story…kudos to ur work aunty.

இப்போ என் இதயம் யாரை கேட்குதுன்னு நான் சொல்லிட்டேன்…சீக்கிரமே ஸ்டார்ட் செய்யவும்.

வித் லவ்(சுமந்துக்கு)
பவித்ரா நாராயணன்

Wednesday, August 16, 2017

தோழி சூர்யமுகி அவர்களின் மின்னஞ்சல் பதிவு



ஹாய் ஹமீதா,             
             உங்கள் கற்பனை என்னும் சோலையில் உதித்த ஐந்தாம் மலரான `பேசும்  மொழியிலெல்லாம்' கதை புத்தகமாக வெளிவந்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
            
தளத்தில் பதிவிடப்பட்ட கதை பாதியில் நிறுத்தப்பட்டதும் சற்று  வருத்தம் ஏற்பட்டது உண்மை...ஆனால் புத்தகமாக  இதனை படிக்கும்  ஆர்வம் நாளுக்கு  நாள் அதிகரித்ததும் உண்மை.ஒருவழியாக புத்தகம் வாங்கி படித்து விட்டேன்.
             
ஹமீதா கதைகளின் நாயகர்களிடமிருந்து சற்று  வேறுபட்டு  வேலையில்லா இளைஞனாக தந்தையிடம் திட்டு வாங்கும் வெற்றிமாறன் .                             வேலைக்காக சென்னை வருமிடத்தில் கதாநாயகி நயனிகாவை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறான்.நாளடைவில் காதல் கொள்கிறான்....
            
நயனிகா...குடும்பத்துக்காக தன் கனவுகளைத் துறந்து மிகப்பெரிய பாரத்தை தன் தலையில் தாங்கி வேலைக்கு செல்லும் பெண்.
        
இவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முதளாளி மகனாக ப்ரமோத்...வெற்றியின் பால்ய  நண்பன்.
       
இவர்களின் முக்கோண காதல் கதையை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள்.
         
இதோடு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள்தமிழக அரசியல் சூழல், புயல் பாதிப்புகள் என அனைவரையும் ஒன்பது மாதங்கள் பின்னோக்கி பயணிக்க வைத்திருக்கிறீர்கள்....
           
பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பற்றிய பகுதியும் மனதை பதைபதைக்க வைத்தது.        
            
வெற்றி நயனியின் காதல் அத்தனை அழகு....கடன் பிரச்சனை தீர ப்ரமோதை மணக்க நிர்ப்பந்திக்கப்படும் நயனி என்ன ஆனாள்....காதலனாய் காவலனாய் வெற்றி அவளை காத்தானா அல்லது தன் காதலை ப்ரமோத்துக்கு தாரை வார்த்தானா என்பதை மிக எதார்த்தமாக கொண்டு சென்ற விதம் அருமை.
                
வெற்றியின் குறும்பு ரசிக்க வைத்தது...ப்ரமோத்தின் இன்னொரு பக்கம் தெரியும் போது சற்று அதிர்ந்தது உண்மை....நயனிக்கு இந்த வாழ்வே மிகப் பொருத்தம்...
               
நடுத்தர வர்க்க குடும்ப தலைவரான மோகன்ராமின் சில முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும் கடைசியில் தான் ஒரு பாசமான தந்தை என்பதை அவர் நிரூபிப்பது ஆறுதல்
             
வெற்றியின் தந்தை வீரராகவன், சுயநலத்தின் மொத்த உருவமாக நயனியின் அக்கா கார்த்திகா, அப்பாவி அன்னையாக விஜயா,நண்பர்களான ஆனந்தி தியாகு,ப்ரமோத்தின் தந்தை பத்மநாபன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ...
            
மொத்தத்தில் எதார்த்தமான அழகான காதல் கதையை தந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
                விரைவில் உங்கள் ஆறாம் படைப்போடு எங்களை சந்திக்க வாருங்கள்.