Monday, October 23, 2017

மெர்சல் - விமர்சனம்





பொதுவாக நான் அவ்வளவாக படங்கள் பார்ப்பதில்லை. விகடன் மற்றும் முகநூல் விமர்சனங்கள் வாசித்து அப்டேட் செய்து கொள்வதோடு சரி. எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்ட படங்களை அரைமணி நேரத்திற்கு மேல் பார்க்க முடியாமல் எழுந்து போன சம்பவங்களும் உண்டு. அனைவரும் கழுவி ஊற்றிய படங்களை ‘ஏன் இப்படி? நன்றாகத் தானே இருக்கிறது...’ என்ற எண்ணப்போக்குடன் முழுமையாக பார்த்த சம்பவங்களும் உண்டு. என் பிள்ளைகள் இருவரும், அவர்களுடன் நான் படம் பார்க்க அமர்ந்தால், என்னைக் கிளப்பி விட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். ஏனென்றால், அந்தளவுக்கு படத்தின் ஓட்டைகளைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பேன். நான் இவ்வளவு சொன்ன பிறகும் தொடர்ந்து இவ்விமர்சனத்தை வாசிக்கவிருப்பவர்களுக்கு என்னுடைய வந்தனங்கள்.

‘மெர்சல்” படத்தின் நாயகன் பெயர் ‘வெற்றிமாறன்’ என்பது என்னைப் இப்படம் நோக்கி உந்தித் தள்ளிய காரணங்களில் ஒன்று என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். (பண மதிப்பிழப்பு நிகழ்ந்த காலகட்டத்தின் பின்னணியில் நான் படைத்த நாவல் ‘பேசும் மொழியிலெல்லாம்...’ கதையின் நாயகன் பெயரும் வெற்றிமாறன் என்பது நினைவுகூறத் தக்கது)   

“சுயபுராணம் போதும்! நீ விமர்சனத்துக்கு வா!” என்ற உங்களின் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது நட்புகளே!

இந்தியாவில் இன்றைய தேதியில் மருத்துவத் துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சீர்கேடுகளையும்... ஆளும் அரசாங்கங்களின் தவறான கொள்கை முடிவுகளால் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் பேசிய துணிவிற்கு முதற்கண் என்னுடைய சல்யூட்.

பள்ளி மாணவி விபத்தில் அடிபட்ட காட்சியும் அதைத் தொடர்ந்த அக்குழந்தையின் மரணமும் மனதை வெகுவாக பாதித்தது. மருத்துவம் என்பது வியாபாரமாகிப் போயிருப்பது உண்மை தானென்றாலும், ஆம்புலன்ஸ் டிரைவரின் செயல்... ஏற்க முடியவில்லை... நம்பவும் முடியவில்லை!

பிரான்ஸ் காட்சிகள் அனைத்தும் காதில் பூ சுற்றல்! வெளிநாட்டில்... பலர் கூடியிருக்கும் பொது நிகழ்வில் கொலையை அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்புவதென்பது அத்தனை எளிதா? என்ற கேள்வி எழுகிறது. இதில், அக்கொலையை அரங்கேற்றியது டாக்டர் மாறன் என்று நாம் நினைத்திருக்க, அது மேஜிஷியன் வெற்றி என்று பின்னர் தெரிய வருகிறது. அங்கு ஏற்கனவே மேஜிக் ஷோ நடத்துவதாக இருந்தவர், தேர்ந்த anesthetist-ஆல் எட்டு மணி நேரம் மயங்கியிருக்கும் வகையில் மயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரி சத்யராஜ் சொல்கிறார். வெற்றி எப்படி அனஸ்தீஷியா கொடுத்தார் என்பதை அட்லீயை சந்தித்தால் கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன் மக்களே!

இம்மிக்ரேஷனில் அதிகாரிகளை அடித்துப் போட்டு விட்டு எகிறிக் குதித்து ஓடி, உயிரைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே நிகழக் கூடியவை!

ஐந்து ரூபாய் டாக்டர் மாறன்... அவருக்கு பிரான்ஸில் விருது கொடுக்கிறார்கள்... சரி! அவர் பூவாக்கு என்ன செய்கிறார் என்ற கேள்வி என்னுள் எழுந்து விட்டது. வேறு மருத்துவமனையில் வேலை செய்வது போலவும் காண்பிக்கவில்லை... சற்று வசதியானவர் போலவும் காண்பிக்கவில்லை. ஒருவரை பேட்டி எடுக்கப் போகிறோம் என்றால், முதலில் அவரைப் பற்றிய தகவல்களை கூகுளில் தானே தேடுவோம்... சமந்தா நேரே சென்று ரோஸ்மில்க் வாங்கிக் கொடுத்து....??????? (சுவற்றில் மண்டையை டொம்ம் டொம்ம் என்று முட்டிக்கொண்ட மொமன்ட்...)

அப்பா விஜய்(வெற்றிமாறன்) நித்யா மேனன் ஜோடி ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது. குறிப்பாக நித்யா மேனன் கவனம் ஈர்க்கிறார். பஞ்சாபில் வெட்டவெளியில் சுகப் பிரசவம்... தமிழகத்தில் மருத்துவமனையில் சிசேரியன்... தாயும் குழந்தையும் மரணம்... ‘வாட் எ மெடிகல் மிராகிள்’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. மதுரை திருவிழா... தீ... நகைகளைக் கழற்றிக் கொடுத்து மருத்துவமனை கட்டச் சொல்லும் பெண்கள் என்று டிபிகல் தமிழ் சினிமா...

தாய் தந்தை இறந்த பிறகு வடிவேலு இருபிள்ளைகளையும் அழைத்து வருகிறார். சிசேரியனில் இறந்ததாக சொல்லப்படும் குழந்தை எப்படி உயிர்பிழைத்தது என்று தெரியவில்லை... வெற்றி... இஸ்லாமிய மேஜிஷியனால் வளர்க்கப் படுகிறார் என்பதை எப்படியோ புரிந்து கொண்டேன்... மாறன் எப்படி கோவை சரளாவிடம் சென்று சேர்ந்தார் என்பது நிஜமாகவே புரியவில்லை!

காஜல் அகர்வால் பாவம்...

சமந்தாவிற்கு அந்த நேர்காணல் நிகழ்ச்சி பெரிய ஆறுதல்...

விஜய்... அனைத்துக் காட்சிகளிலும் முழு அற்பணிப்பைக் கொடுத்திருக்கிறார்...

விஜய்... சமாந்தா பாடல் காட்சி இனிமை...

எஸ்.ஜே. சூர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆசம்! பிரகாஷ்ராஜ் ரகுவரன் வரிசையில் தமிழ் திரையுலகில் வித்தியாசமான வில்லனாக வலம் வர எல்லா தகுதிகளும் உள்ளது.

இறுதிக்காட்சியில் விஜய் மாயமாய் மறைவது... அந்நியன் விக்ரமை நினைவு படுத்தியதை தவிர்க்க இயலவில்லை...  

விஜய் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் கொண்டாட்டம்...

சாமானியர்களுக்கு...??? அந்த கடைசி மூன்று நிமிட வசனம் பெரிய ஆறுதல்.

அந்த மூன்று நிமிடங்கள், மத்தியில் ஆள்பவர்களை மெர்சலாக்கியதன் காரணம்... யஷ்வந்த் சின்ஹாவின் குரல் பாமரனை சென்றடைய சாத்தியமில்லை; எதிர்கட்சிகள்... மேடைப் பேச்சாளர்கள்... டிவி விவாதங்கள் அனைத்தையும் விட சக்தி வாய்ந்த வெகுஜன ஊடகம் வாயிலாக இக்கருத்து பதிவு செய்யப் பட்டு விட்டது என்ற பதற்றத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்.

திரைக்கதையில் சொதப்பினாலும்... மேற்சொன்ன ஒரு காரணத்திற்காக மட்டுமே... நன்றி அட்லீ & விஜய்!

திரைப்படங்கள் மீது அவ்வளவு நாட்டமில்லாத எனக்கும்... ‘இப்படத்தை பார்த்தே தீர வேண்டும்’ என்ற உந்துதலை ஏற்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும், இந்த விமர்சனத்தை எழுதி முடித்த பிறகு... குழப்பமே இல்லாமல் அவருக்கும் என்னுடைய நன்றிகள்!

Tuesday, October 3, 2017

வால்டர் வெற்றிவேல் - சுதா ரவி

மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெருசு என்பதற்கு சான்றாக ஒரு கதை...

மூன்றே நாட்கள்... ஐம்பத்திமூன்று பக்கங்கள்... ஏழே அத்தியாயங்கள்...

ஆனால் ஒவ்வொரு எபியும் நச் நச்சென்று கதைக்குள் நம்மைக் கட்டிப் போட்டது நிஜம்.

வால்டர் வெற்றிவேலாக மகனை உருவாக்கத் துடிக்கும் ரிடயர்ட் கான்ஸ்டபிள் சுந்தரவடிவேலு... அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் தண்ணி காட்டும் மகன் வெற்றிவேல் என்று அதகள ஆரம்பம்.


பார்த்துக் கொண்டிருக்கும் கான்ஸ்டபில் வேலையிலிருந்து கழண்டு கொள்ள வெற்றி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வயிற்றைப் பதம் பார்கின்றன. ஆனால், அவ்வளவும் வெற்றிக்கு ஆண்ட்டி கிளைமேக்ஸாக உருமாறுவது சூப்பர்.

சத்தியவாணி ஐ பிஎஸ் ஸின் தடாலடி அறிமுகமும் அவர்களுக்கிடையேயான ஒரு குட்டி பிளாஷ் பேக்கும் அசத்தல். இளநீர் ரொமான்ஸ்... ரசனை... (வெற்றி ன்னு பேர் வெச்சாலே இப்படி கோக்கு மாக்கா தான் பேசுவாய்ங்க போல)

தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கும் பெற்றோருக்கும்... வீட்டுக்குள் இருக்கும் மனைவிக்கு ஒன்றும் தெரியாது  என்பது போன்ற இயல்பான ஆணாதிக்கத்துக்கும் நகைச்சுவை எனும் வாழைப்பழத்தில் சாமர்த்தியமாக ஊசியை மறைத்து வைத்து ஏற்றிய சுதாவின் எழுத்தாற்றலுக்கும் ஹியூமர் சென்சுக்கும் hats off!


ஐபி எஸ் என்ற பதவிக்காக அல்லாமல் வெற்றியை அவனுக்காகவே நேசிக்கும் சத்யா, காதலனின்... கணவனின்... உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் கதாநாயகி... ரியல் ஹீரோயின்!

கான்ஸ்டபிளாக அறிமுகமாகும் வெற்றிவேல் தந்தையின் ஆசைப்படி ஐபிஎஸ் ஆகிறானா இல்லையா என்பதை கதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிரிக்க சிரிக்க சிந்திக்க வைத்த வித்தியாசமான முயற்சி... வாழ்த்துகள் சுதா ரவி!