Saturday, November 5, 2016

உயிரோவியம்... உனக்காகத்தான்...


எழுத்தாளர் ஆர்த்தி ரவி அவர்களின் விமர்சனம்...

💖 ஹமீதாவின் 🌹"உயிரோவியம் 💑 உனக்காகத்தான்" 🌹 💖

தோழி ஹமீதாவின் கைவண்ணத்தில் உருவான படைப்புகளில் நான் வாசித்த முதல் கதை இதுவே. கதைக்கருவிற்கு ஏற்ப தலைப்பு என்று சொல்வதை விட, இக்கதையே ஓர் உயிரோவியமாக உருவாகி இருக்கிறது என சொல்வது தான் மிகப் பொருத்தம். ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர்ப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள்.. இல்லை அப்படி நாம் உணரும் அளவு எழுத்தாளர் அவர்களை படைத்திருக்கார். 👏👏👏👌🏻

முஸ்லிம் இனத்தில் கடைபிடிக்கப்படும் சில பழக்கவழக்கங்கள், அவர்களின் பண்டிகை காலங்கள், நோன்பு முறை, இறைபக்தி, சில புதிய வார்த்தைகள் என நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி ஹமீதா!

அழுத்தமான கதைக்களம். ஊடே மென்மையான காதல். 🌹💑🌹
அழகான நட்பு! நட்பினால் கிடைக்கும் மன நிம்மதி..
மெல்ல ஊடுருவும் காதல் உணர்வுகள்..

அம்மா!!! இச்சொல் வெறும் வார்த்தையாக யாரிடம் இருந்தும் வெளிப்படாது. அம்மா என்பது உணர்வு.. உயிர் கொடுத்த உறவு! அப்படி உதிரத்திலிருந்து உதித்திருக்காவிடினும், தன் உயிருக்கு உயிராக.. ஏன் உயிருக்கும் மேலாகவும் ஒரு குழந்தையை பொத்தி வைத்து பாதுகாப்பாய் அன்புடன் வளர்த்து அக்குழந்தைக்கு உறவாகிப் போகும் அன்னைமார்கள் எத்தனை? இவர்களுள் வித்தியாசமாய்.. ஓர் அன்னை, "அம்மா" என்ற சொல்லிற்கு அவமதிப்பாய்!!! ஆனால், அவளுக்கு பிறந்திருக்கும் மகள்... ஒரு பொக்கிஷம்!

அந்த பொக்கிஷம் தான் சாரா ஃபாத்திமா, கதையின் நாயகி. சாதாரணமாக ஒவ்வொருவரும் வாழ்வில் ஏதோ ஒரு கால கட்டத்தில் சில போராட்டங்களை சந்திக்க நேரிடுவது சகஜம். வெகு சிலரே பிரச்சனைகளற்று இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார்கள். நம் நாயகியும் ஒரு விதிவிலக்கு தான்.. ஆனால் எப்படிப்பட்ட விதிவிலக்கு? இவள் பிறப்பே போராட்டம் ஆகிப் போகிறதும்.. உருவான சில நாட்களிலேயே தாயின் சாபத்தால் ஒடுங்கிப் போகும் சிசு.. பிறந்தும் வளர்ந்தும் அனுபவிப்பது வெறும் வேதனையே! எந்த சூழ்நிலையிலும் தன் கஷ்டத்தை வெளிக்காட்டி விடாமல் அன்பும் பாசமும் கொண்டு இன்முகம் காட்டி வளைய வருபவளுள் உயரிய கோட்பாடுகள் நிறைய..

சாரா எனும் பொக்கிஷத்தை பொத்தி வைத்து பாதுகாக்கவென காவலனாக வருபவன் தன்வீர், கதையின் நாயகன். அன்பு அக்கறை மட்டுமின்றி கோபமும் பிடிவாதமும் நிறைந்தவன். அருமையான தாய், பாசம் மிகுந்த தங்கை, வெடுக்வெடுக்கென பேசும் கோபக்கார அப்பா. பல இன்னல்களை சந்தித்து முடிவில் காதலை வெல்கிறான்.

இருவருள் உருவாகும் ஆழமான நேசம். காதல் சொட்டும் தருணங்கள் யாவும் அருமை. வெளிப்படையாக இல்லாமல் மென்மையாக உணர்வுப்பூர்வமான காதல்!

இக்கதையின் மற்ற கதாபாத்திரங்களில் மூவர் எனக்கு உயிராகிப் போனார்கள். அவர்களை உங்களுக்கும் மிகவும் பிடிக்கும். நானா, நானி, தன்வீரின் அம்மா.

நிறைய இடங்களில் கண் கலங்கினேன். அதே போல புன்சிரிப்பும் தவழ்ந்தது. கவி வரிகள் அழகு!

சென்னை ரெயின்ஸ்- ஸில் கதை கொஞ்சம் பயணிக்கிறது. உண்மையில் அந்நேரம் ஏற்பட்ட சிரமங்களை கதையில் அழகாக கொண்டு வந்து இருக்கிறார் ஹமீதா.

தளபதி படப்பாடல் பற்றி ஒரு இடத்தில் கேலியாக வரும். பின்னால் அதன் தொடர்பான ஒரு நிகழ்வு. விளக்கம் என வரும். வாசிக்கும் போது அறியாமல் வந்து ஒட்டிக்கொண்டு விடும் புன்னகை. 😊👍🏻

ஹாஸ்பிடலில் தன் அம்மாவைப் பார்க்க போகும் போதும் அவர் மறைவிற்குப் பின்பும் சாராவின் மனநிலையில் உதிக்கும் போராட்டம். 👏👏 அருமையான எழுத்து வடிவம்.

வாசித்து சில நாட்களான போதிலும் காட்சிகள் கண் முன் விரிகிறது.

இன்னும் நிறைய எழுத வேண்டியது இருக்கிறது. நீங்கள் வாசிக்கும் போது சுவாரசியமும் குறைய கூடாது அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

அழகோவியமான கதையை தந்ததற்கு மிக்க நன்றி ஹமீதா! 👌🏻😀❤️

அன்புடன்,

ஆர்த்தி ரவி.

No comments:

Post a Comment