அதிதி - சம்யுக்தா
அர்ஜுன்.....ரேசிங் மலையேற்றம் பாரா க்ளைடிங் என்று
மேல்தட்டு வர்கத்தின் பிரதிநிதி.
ஷாம்பெயின் பிரியன். படிப்பில் சராசரி. மாதம் சில லட்சங்களை பொழுது போக்குக்காகவே
செலவு செய்யும் பொறுப்பான பிள்ளை. வீட்டில் இரண்டு அண்ணன் ஒரு அக்காவுக்கு பிறகு
பிறந்த கடைக்குட்டி.
இப்படியான அர்ஜுனை பொறுப்பானவனாக... புலம் பெயர்ந்த மக்களின்
துயரம் உணர்ந்தவனாக... அவர்களுக்கான மாற்றத்தை அரசாங்கத்திடம் தேடாமல்
தன்னிலிருந்து தொடங்குபவனாக மாற்றுகிறது ஒரு பெண்ணின் மீதான காதல். அவள் சஞ்சனா...
பிறப்பதற்கு முன்பே தந்தை மற்றும் தமையனைத் தொலைத்து அகதிகள்
முகாமில் பிறந்த சஞ்சனா... அவளுக்கு எது கிடைக்கின்றதோ அதை ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்துடன் விளங்குவது வெகு இயல்பாக சொல்லப் பட்டிருக்கு. அவளுடைய தேடல்
அனைத்தும் கல்வியிலும் அதைத் தொடர்ந்த குடும்ப முன்னேற்றதிலுமே இருப்பது சிறப்பு.
இலங்கைக் குடியுரிமையும் இல்லாமல் இந்தியாவிலும் அகதியாக வாழும் அவளின் வலி அவளின்
வார்த்தைகளால் அல்லாமல் அவளின் கதாபாத்திரத்தின் வாயிலாக உணர்த்தி இருப்பது
அதனினும் சிறப்பு.
மிக நன்றாகப் படிக்கும் மாணவியான அவளுடைய மேற்படிப்பு செலவை
அர்ஜுன் ஏற்பதும் அதற்காக அவன் உழைக்கத் தொடங்குவதும் வாழ்க்கையைப் புரிந்து
கொண்டு தெளிவதும் அருமை.
இருவருக்கும் இடையேயான காதல் பகிரப்படாமலே புரிந்துகொள்ளப்
படுவது கவிதை. அவளுடைய அக்கா நிரஞ்சனா மூலம் அவளின் தன்மைகள் அவன் அறிவதும்
அவனுடைய கடிதங்கள் மூலம் அவள் அவனை அறிவதுமான அவர்களின் புரிதல் கொள்ளை அழகு.
காதல் பகிரப் பட்ட பிறகும் கட்டுப்பாட்டுடன் லட்சியம் நோக்கி பயணிப்பது இன்றைய கால
கட்டத்தில் அபூர்வம் தான். அந்த அபூர்வம் தான் இக்கதையின் சிறப்பம்சம்.
அர்ஜுனின் குடும்பம் அவர்களின் காதலுக்கு எதிராக இருப்பதும்
பிறகு தாத்தாவின் முயற்சியால் அவளின் உயர்வுகளை அக்குடும்பம் உணர்ந்து அவனின்
சந்தோஷத்துக்காக மட்டுமின்றி அவளின் தன்மைகளுக்காகவும் ஏற்பது போல சொல்லி இருப்பது
நிறைவு.
அர்ஜுனின் பார்வை வாயிலாக ஈழத் தமிழ் அகதிகள் வாழ்க்கை தொடங்கி
திபெத்திய அகதிகள்... ரோகிஞ்சா அகதிகள் வரை அனைத்தும் அலசி ஆராயப் பட்டிருப்பது
உயர்வு. அகதிகளுக்கேனும் உதவித் தொகை கிடைக்கிறது... அது கூடக் கிடைக்காத வறுமைக்
கோட்டுக்கு கீழே வாழும் இந்திய மக்களின் நிலை... கழிப்பறை வசிதியில்லாத வடநாட்டு
கிராம மக்களின் நிலை... முகத்தில் அறையும் நிதர்சனம்.
அகதிகளின் நிலையை தங்களுக்கு சாதகமாக அரசியலாக்கி ஆதாயம்
தேடும் அரசியல்வாதிகள்... அவர்கள் மீதான
கண்காணிப்புக்கு காரணமான அரசாங்கத்தின் நிலை என்று எல்லா நிலைகளில் இருந்தும்
இப்பிரச்சனை அலசப் பட்டிருப்பது வெகு சிறப்பு.
சஞ்சனாவின் சகோதரி நிரஞ்சனா... எட்டு வயது வரை சிறப்பான
வாழ்க்கை வாழ்ந்த இந்தப் பெண்... அகதி வாழ்வில் பொருந்த முடியாமல் படும்
துயரங்கள்... கள்ளத்தோணி ஏறி ஆஸ்த்ரேலியா செல்ல அவள் எடுக்கும் முயற்சிகள்... உழைப்பைக்
கொட்டத் தயாராக இருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானம்... அந்த சொற்பத்
தொகையை சிறுக சிறுக சேர்த்து வைத்து ஏஜென்டிடம் ஏமாறும் பரிதாபம் என்று அகதிகளின்
வாழ்கை படம் பிடித்துக் காட்டப் பட்டிருப்பது நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது.
தமிழை தமிழாகப் பேசாமல் தங்க்ளிஷாக பேசுபவர்கள் நிறைந்த தமிழ்
நாட்டில் தூய தமிழ் பேசும் ஈழத் தமிழர்கள் அவர்களின் மொழியாலேயே கண்டுகொள்ளப்
படுவதும் கண்காணிக்கப் படுவதும் ஒதுக்கி வைக்கப் படுவதும் வேதனையிலும் வேதனை தான்
ஆனாலும் வேறு வழியும் இல்லை என்பது தானே உண்மையான நிலவரம்.
அகதி... அதிதி..... நடுவில் ஒரே ஒரு எழுத்து மாறினால் மிக
அழகான ‘விருந்தினர்’ எனும் சொல் பிறப்பது தமிழின் சிறப்பு. மாற்றத்தை
உன்னிலிருந்து தொடங்கு எனும் கருத்தை ஒருசிலரே ஏற்றாலும் போதும்... அகதிகள்
அதிதிகளாகும் நாள் வெகு தொலைவில் இல்லை எனும் நம்பிக்கையை கதை மூலம்
விதைத்திருக்கும் நேர்த்தி... hats off சம்யுக்தா... பாராட்ட வார்த்தைகளைத் தேடிக்
கொண்டே இருக்கிறேன்...
No comments:
Post a Comment