தோழி Shameem Kஅவர்களின் விமர்சனம்...
கணவனுக்கு மட்டுமே தன் காதல் என்று உறுதியாக இருக்கும் ஒரு பெண்ணிற்கும்,அவளை கண்டவுடன் காதல் கொள்ளும் ஒரு பிடிவாதக்காரனுக்கும் இடையில் வரும் காதலும் அதன் பின்னான அவர்களின் திருமணமும், காதல் வாழ்க்கையுமே இந்த கதை.இது ஷாஹிதாவின் இரண்டாவது கதை.ஆனால் தேர்ந்த எழுத்தாளரின் கதைபோல் இருந்தது.
ஆடிட்டர் ராகவேந்திரன்,மாலினியின் ஒரே மகளான நேஹா கிரிக்கெட் பைத்தியம்.முக்கியமாக பேட்ஸ்மென் சந்தீப் ரத்தோட்டின் பரம விசிறி.சமீப காலமாக சரியாக விளையாடாத சந்தீப்பை நினைத்து கவலை கொள்கிறாள்.அவனுக்கு ஆறுதல் சொல்லி கடிதம் எழுதுகிறாள்.(தந்தையின் அனுமதியுடன்).நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் பெற்றோருடன் சென்று அவனை நேரில் சந்திக்கிறாள்.
இங்கே ஆரம்பிக்கிறது கதை.சந்தீப்பை பார்த்தபின்பு அவள் மனதில் சிறு சலனம்.அதனால் குழப்பமடைந்து சந்தீப் தான் இதற்கு காரணம் என நினைத்து அவனை தவிர்க்கிறாள்.பெற்றோர் பார்க்கும் ஒருவனைத்தான் திருமணம் செய்வேன்,அவனைத்தான் திருமணத்திற்கு பின் காதலிப்பேன் என்று முடிவெடுக்கிறாள்.தெளிந்த மனதுடன் திடமாக இருக்கும் நேஹாவை அசைக்க நம் நாயகன் நரேந்திரன் எனும் நரேன் அமெரிக்காவிலிருந்து வருகிறான்.மிகவும் பிடிவாதகாரனகிய நரேன்,நேஹாவை பார்த்தவுடனே கண்டதும் காதல் கொள்கிறான்.எனக்கு பிடிக்காவிட்டாலும்,அவளுக்கு என்னை பிடிக்கணும் என்று நினைத்து அவளை பார்க்க வருபவன் அவளை பார்த்ததும் நிலைமை தலை கீழானதை நினைத்து அதிர்கிறான்.அதே அதிரடியாய் தன் காதலை அவளிடம் சொல்கிறான்.அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை."ஓவர் கான்பிடன்ஸ்"என்ற பட்டபெயர்தான் கிடைத்தது.
பலவகையிலும் அவளை நெருங்க முயற்சித்தும் தோல்வியே பரிசாக கிடைத்தது.அவளோ முந்தைய நினைவில் சூடு கண்ட பூனையாக ஒதுங்குகிறாள்.தோல்வியுடன் அமெரிக்கா திரும்புகிறான்.நரேனை நினைக்க கூடாது என்று நினைத்து,நினைத்து அவன் நினைவாகவே நேஹா இருக்கிறாள். அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும்போதுதான் நரேன் தன் மனதில் வந்ததை உணர்ந்தாள்.பின் தாமதிக்காமல் அவனை தொடர்பு கொள்ள அவனோ அவளை “யார்? எந்த நேஹா? கம் கிளியர்...?”என்று கேட்கிறான். பின்பு அவளை வருத்தியதற்காக வருந்தவும் செய்கிறான்.இப்பொழுதும் நேஹா தன் காதல் கணவனுக்கு மட்டுமே என்ற நிலையில் உறுதியாக இருக்கிறாள்.ஆனால் அந்த கணவன் நரேன்தான் என்று முடிவெடுக்கிறாள்.நரேன் மேல் ராகவேந்தருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை.நரேன் அண்ணன் அவன் வரும்வரை காத்திருக்க வேண்டுகிறான்.நரேன் முதலில் நேஹாவை சந்திக்கிறான்.பின்னே வருவதெல்லாம் ஜாலி,ரோமன்ஸ்தான்.(ஷாஹி என்னை மன்னிக்கவும்).அந்த எனேர்ஜியில் நேஹாவின் அப்பாவை சந்திக்கிறான்.இந்த இடத்தில ஷாஹி பின்னிட்டீங்க.ஆண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த எபி ஒரு ப(பா)டம்.
சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு நரேனின் மூலம் சந்தீப்பை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கிறாள் நேஹா.சந்தீப் மனதில் நேஹாவின் இடம் என்ன என்பதை அந்த சந்திப்பின் மூலம் அறிகிறாள்.(இந்த இடத்தில் சந்தீப் நரேனை விட ஒரு படி உயர்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறான்).
பெற்றோர்களின் சரியான வழிகாட்டுதல் இருந்தால் பிள்ளைகள் எந்த அளவிற்கு சாதிப்பார்கள் என்பதை நரேன் என்னும் நாயகனே உதாரணம்.பெண்குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் கவனமும் அக்கறையும்,வழிகாட்டுதலும் தேவை,அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்பதை தெளிவு படுத்தியதற்கு தேங்க்ஸ் ஷாஹி.இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்............. மொத்தத்தில் கணவனுக்கான காதலுடன் காத்திருந்த நேஹா அவள் வாழ்வில் வந்த மேகத்தை கலைத்து தன் சூரியனை கண்டதுதான் இந்த"கலைந்து போன மேகங்கள் "
No comments:
Post a Comment