Tuesday, July 25, 2017

தோழி எழுத்தாளர் சுதா ரவி அவர்களின் விமர்சனம்

“பேசும் மொழியிலெல்லாம்” – ஹமீதா

குணாதிசயங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அவன் வாழும் சூழலும், வளர்க்கப்படும் சூழலும் அவனது எண்ணங்களை, குணத்தை நிர்ணயிக்கும். ஒரே தாயின் வயிற்றில் பிறந்தாலும் நல்ல மனிதர்களை சுற்றி வளர்ந்தாலும் கூட சிலரின் குணங்கள் வேறாக இருப்பதுண்டு. இப்படிப்பட்ட பல முகங்களை தனது கதையில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு இன்றைய பிரச்சனையான டீ-மானிட்டைசேஷேன் பற்றியும் மக்களின் குரலாக பதிவு செய்திருக்கிறார்.

வெற்றி தஞ்சாவூரை பிறப்பிடமாக கொண்டவன். ஒரு சராசரி ஆணாக படிப்பு கிடைத்த வேலை என்றில்லாமல் தன் மனதிற்கு பிடித்த வேலை செய்ய வேண்டும் என்று காத்திருந்து, அதன் காரணமாக தந்தையின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவன்.

வெறும் காத்திருப்பு மட்டுமன்றி முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவியதால், தன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன். வேலையில்லாத ஒரு ஆண்மகன் தன் வீட்டில் எவ்வாறெல்லாம் நடத்தபடுவானோ அவ்வாறே தனது வீட்டில் நடத்தப்படுகிறான் வெற்றி.

நயனி ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா மோகன்ராம் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் வேறு கிளையில் வேலை பார்க்கிறாள். கார்த்திகா சுயநலத்தின் தலைவி. நயனியின் தமக்கை. தன் குடும்பத்தை பற்றியோ, குடும்ப சூழ்நிலையை பற்றியோ கவலைபடாமல் தன்னலத்திற்காக அவர்களை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு திருமணம் முடித்து செல்கிறாள்.

கார்த்திகாவின் திருமணத்திற்காக தனது படிப்பை பாதியில் விட்டு தந்தை வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள் நயனி. அவளின் திருமண செலவிற்காக வாங்கிய கடன் முழுவதும் நயனியின் சம்பளத்தில் அடைபடுகிறது. தனது கனவுகள், ஆசைகள் அனைத்தையும் மனதிற்குள் புதைத்துக் கொண்டு வலம் வருகிறாள்.

குடும்ப சூழலை கருதி தந்தையின் நண்பரின் நிறுவனத்தில் வேலைக்கு சேர வெற்றி சென்னைக்கு வருகிறான். நயனி வேலை செய்யும் கிளையில் அவளுக்கு கீழே பணியில் அமர்கிறான். இதுவரை தனது வாழ்க்கையின் குறிக்கோளாக மனதிற்கு பிடித்த வேலையை மட்டுமே எண்ணி இருந்தவனுக்கு நயனியின் மீது ஈடுபாடு வருகிறது.

அவன் சென்னைக்கு வந்து சேரும் போது அரசாங்கத்தில் நடக்கும் சில குளறுபடிகளால் பிரச்சனை ஏற்பட்டு நயனியின் தந்தை மூலம் உதவி கிட்டி அவர்களின் அபார்ட்மென்ட் வளாகத்திலேயே வீடு எடுத்து தங்குகிறான்.
அந்த குடியிருப்பு வளாகத்தின் சாபக்கேடாக லிப்ட் இருக்கிறது. எந்த நேரமும் வேலை செய்யாமல் அனைவரையும் படுத்தி எடுக்கிறது. ஆரம்ப நாட்களில் இருவருக்குள்ளும் நல்ல நட்பாக இருப்பது, காதலாக மலரத் தொடங்குகிறது.
இருவரும் மனதை திறக்கவில்லை என்றாலும் ஒருவரின் மனதை ஒருவர் நன்றாக அறிவர்.

இதன் நடுவே நயனியின் குடும்பத்திலும் பல்வேறு குழப்பங்கள், நிறுவனத்திலும் ஓனரின் மகனான ப்ரமோத் பொறுப்பை ஏற்க வருகிறான். ப்ரமோத் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாக வளர்ந்தவன் .அவனது நடத்தையால் அவனை அறிந்த இடங்களில் எல்லாம் பெண் கொடுக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

விருப்பமில்லாமல் முதலில் பொறுப்பேற்கும் ப்ரமோத், சிறு வயது தோழனான வெற்றியுடன் இணைந்து நிர்வாகத்தை சீராக கொண்டு செல்கிறான்.முதலில் நயனியின் மீது ஆர்வம் ஏற்படாமல் இருந்தவன், மெல்ல அவளின் இயல்புகளில் தொலைந்து போகிறான்.
வெற்றி நயனிடம் காதல் சொல்லும் இடம் சும்மா ஸ்கோரை அள்ளுரடா...அதை ஹமீதாக்கா சும்மா கவிதை நயமா சொல்லி இருப்பாங்க பாருங்க( அக்கான்னு சொன்னது ரவுண்டு கட்ட கூடாது). காதல் ஒருபுறம் ப்ரமோதின் குறுக்கீடு ஒருபுறம் என அவர்களை சுற்றி பல்வேறு தடைகள் எழ..கடந்தார்களா அவற்றை? வென்றார்களா தங்களின் காதலில்? படித்து பாருங்கள்....

எந்த லிப்ட்டை கரிச்சு கொட்டினானோ அந்த லிப்ட் தாசனாகவே மாறி போன வெற்றி...(அவனுக்கு அங்கே கிடைத்த பரிசுகள் அப்படி)...அடுத்து அந்த ட்ரைன் சீன்...ஹமீதா மேடம் சும்மா பின்றீங்க போங்க...

பணம் ஒன்றே வாழக்கையல்ல என்பதை நயனியின் வாழ்க்கை மூலமும், கார்த்திக்காக போன்ற அற்ப பிறவிகள் வாழும் இடத்தில் வெற்றி போன்று ஒரு சிலரும் இருக்க தான் செய்கிறார்கள் என்பதை தனது அழகான பாணியில் சொல்லியிருக்கிறார்..சமூக நோக்கோடு இன்றைய பிரச்சனைகளை பலவற்றையும் தொட்டு செல்கிறார்....வாழ்த்துக்கள் ஹமீதா!

1 comment:

  1. மிக மிக அழகிய விமர்சனம் வழங்கி என்னை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் சுதா. உங்களுடைய விமர்சனம் பார்த்த பிறகு, மிக மிக இலகுவாக உணர்கிறேன். என்னுடைய அனைத்து கதைகளுக்கும் உங்களுடைய விமர்சனம் தான் முதலில் வரும்... இக்கதைக்கும் அப்படியே நிகழ்ந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு. இந்த அன்பும் நட்பும் என்றென்றும் தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!

    கதையின் சஸ்பென்ஸ் துளியும் உடையாமல் மிக அழகா எழுதிருக்கீங்க டியர். அனைவரும் வாசிக்கத் தூண்டும் விமர்சனம்... இதயம் நிறைந்த நன்றிகள் சுதா!

    ReplyDelete