Friday, January 4, 2019

முன்னோட்டம் - 2




மறப்பேன் என்றே நினைத்தயோ! - ஹமீதா
முன்னோட்டம் - 2
===========================================
இருவரும் கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக் பகுதியில், ஒருவர் மேல் மற்றவர் இழைந்தபடி நடந்து கொண்டிருந்தனர். யமுனா மிக அழகாக மாம்பழ வண்ண கிரேப் சில்க் புடவை அணிந்திருந்தாள். அடித்துக் கொண்டிருந்த இளம் வெயில், மிக மிக இதமாக இருக்க, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துவந்திருந்த பச்சை வண்ணச் சால்வை, அவளது தோளின் ஒரு புறமாகச் சரிந்திருந்தது. சுடச்சுட கையில் பிடித்திருந்த வேகவைத்த மசாலா கடலைப் பொட்டலத்திலிருந்தது கடலையை எடுத்து, ஊதி ஊதி வாயில் போட்டுக் கொண்டிருந்தாள்.
“அங்கே உட்காரலாமா?”
பேசியபடி பாறையோரமாக அமர்ந்து கொண்டனர்.
“நானே சாப்ட்டுட்டு இருக்கேன்! இந்தாங்க உங்களுக்குக் கொஞ்சம்!”
சிறிது கடலையை ஊதி, அவனுடைய வாயில் போடப் போனாள்.
“ரோட் சைட்ல விற்கிற ஐட்டமெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்!” சொல்லியபடி அவள் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், அவளது கையைத் தட்டிவிட்டான் கிஷோர்.
“ஓஹ் சாரி!”
அவளது உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன. ஆசையாய் உண்ட சுவையான மசாலா கடலை, நொடியில் வேப்பங்காயாய் கசந்து தொண்டை வழியே இறங்கியது. அவனுடன் மனசு விட்டுப் பேசும் தன்னுடைய முயற்சிகள் எல்லாம் இதுபோலக் கசப்பாகவே முடிவது, அவளுக்கு ஒரு வித நெருடலைத் தோற்றுவித்தது.
‘இது ரொம்ப சின்ன விஷயம்! இதுக்கெல்லாம் அசரக் கூடாது!’ அவள் சுதாரித்துக் கொண்டு கையிலிருந்த கடலைப் பொட்டலத்தை பள்ளத்தாக்கில் விட்டெறிந்தாள்.
“ஓஹ்! உங்களுக்குப் பிடிக்காதா? அப்ப இனிமே எனக்கும் பிடிக்காது. உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க... நானும் இனிமே அதை ஒதுக்கிடுவேன்!”
கணவனை நோக்கி உளப்பூர்வமாகச் சொன்னாள் யமுனா.
“அப்படியா!” என்று ஆச்சர்யம் போலக் கேட்டவன், “சொல்றேன் கேட்டுக்கோ!” என்றுவிட்டு, தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.
“நான் கூப்பிடும்போது மட்டும் வரணும்! பெர்மிஷன் கேட்காம ரூமுக்குள்ள வரக்கூடாது! அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! ‘தொண தொண’ன்னு பேசக் கூடாது! இங்கே கூட்டிட்டு போ அங்கே கூட்டிட்டு போன்னு இன்னைக்கு நச்சின மாதிரி நச்சக் கூடாது! முக்கியமா என்னோட ஃபோன் லேப்டாப் இதெல்லாம் தொட்டா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!” என்று பட்டியலிட்டான்.
“அப்புறம்... நீ இப்படி ஒல்லியா இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை... உங்கக்கா, உங்கம்மா மாதிரி நல்லா 'தள தள'ன்னு இருக்கா! உனக்கும் உங்கம்மா தானே சாப்பாடு போட்டு வளர்த்தாங்க! அப்புறம், நீ மட்டும் ஏன் இப்படி பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி இருக்க?” என்றவன், “அதோ அங்கே வர்றாங்க பாரு ஒரு ஆன்ட்டி... அந்த மாதிரி... அப்படிக் கொஞ்சம் பூசின மாதிரி...” என்று சொல்ல, அவன் கண்களைக் காட்டிய திசையில் பார்த்தாள்.
அங்கே சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க வட இந்தியப் பெண்மணி, ஒரு சிறுமியைக் கையில் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்.
யமுனாவைப் போலவே இளம் வெயிலை அனுபவிக்கும் பொருட்டு, சால்வையை மடித்துக் கைவளைவில் போட்டிருந்தார். புடவை தான் அணிந்திருந்தார். ஆனால், அதை அணிந்திருந்த விதம் அவரது உடலழகை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
“அந்த மாதிரி இருந்தா செம கிக்கா இருக்கும்!”
மிக ரசனையாகச் சொன்னான் கிஷோர்.
தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் பொருட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் யமுனா. அதே வேளையில் அப்பெண்மணி இவர்களைக் கடந்து செல்ல, அவருடைய இடப்புறப் பக்கவாட்டுத் தோற்றத்தை ஜூம் செய்து கிளிக்கினான் கிஷோர்.
=============================================
முன்னோட்டம் - 2, உங்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்!
இக்கதைக்களம் எதைப் பற்றியது என்ற சிறு அனுமானம்... எதிர்ப்பார்ப்பு... உங்களுக்குள் தோன்றியிருக்கக் கூடுமென்று எண்ணுகிறேன்!

அன்புடன்,
S. ஹமீதா.

No comments:

Post a Comment