ஏ. ஆர். ரஹ்மான்
நவீன இந்திய திரையிசையின் அடையாளம் - விஜய் மகேந்திரன்
ஏ.ஆர். ரஹ்மான்... இளைஞர்களின் ஆதர்சம்! இசைத்துறை என்ற பெருவட்டம்
தாண்டி மற்ற ஏனைய துறைகளில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கும் அவரது வாழ்வின்
நிகழ்வுகள் சிறந்த உந்துசக்தியாக விளங்குகிறது. அவருடைய பேட்டிகளை
பத்திரிகைகளிலும் நேர்காணலை தொலைகாட்சியிலும் அனைவரும் வாசித்திருப்போம்;
பார்த்திருப்போம். அவருடைய சிறுவயது துயரங்கள்; கடின உழைப்பு; அதற்குப் பிறகான
அவருடைய திரைப்பிரவேசம்; அள்ளிக்குவித்த வெற்றிகள் இவையாவும் சரித்திரம்.
அப்படியிருக்க, ‘இந்நூலில் நாமறியாத புதிய விஷயங்கள் என்ன இருந்துவிடப் போகிறது?’
- என்ற ஐயப்பாடு எழுவது இயல்பானதே!
மேலோட்டமான தகவல்கள் என்பது வேறு; ஒரு விஷயத்தை ஆணிவேரிலிருந்து
கிரகிப்பது என்பது வேறல்லவா? ஏற்கனவே தெரிந்த தகவல்களை இன்னும் ஆழமாக
தெரியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையும், ரஹ்மானின் ரசிகனுக்கு தெரியாத
தகவல்களையும் அவனிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்ற நூலாசிரியரின் அவாவும்
இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.
பதின் பருவ நினைவுகள் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமே! தொண்ணூறுகளில்
கல்லூரிப் பருவத்தைக் கடந்த ஒவ்வொருவரின் இளமைக்கால நினைவுகளிலும் ரஹ்மானின் இசை
பின்னணியில் இழையோடும். ஆசிரியர், ரஹ்மானின் திரைப்ரவேசத்தையும் அதன் பிறகான
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் சொல்லும் இடங்களில் நாமும் சற்றே பின்னோக்கிப்
பயணித்து, அவருடைய இசையுடனான நம்முடைய பயணத்தில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம்.
ரஹ்மான் காலம், தமிழ் திரையிசையில் உலகமயமாக்கல் நிகழ்ந்த காலம் என்ற
எண்ணம் எனக்குண்டு. புத்தம்புது இளமை ததும்பும் குரல்களின் அறிமுகம், புதிய புதிய
இசைக்கலைஞர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக...
தேர்ந்த தொழில்நுட்பம்... எப்படி சாத்தியப் பட்டது? அவரின் இளமைக்காலம் பற்றி
அறிந்த எவருக்கும் இக்கேள்வி எழாமலிருக்க வாய்ப்புகள் வெகு குறைவு.
பதினொரு வயதில் தந்தையை இழந்த பாலகன், பொருளாதாரத் தேவைக்காக மறைந்த
தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அக்கருவிகளை இசைக்கக் கற்று, பல
இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் வாசித்து பிறகு படிப்படியாக விளம்பரங்களுக்கு
இசையமைக்கத் துவங்கியது நாமறிந்த விவரங்கள். ‘அக்காலகட்டங்களில் அவர் கற்றது இசையை
மட்டுமல்ல; வாழ்க்கையையும் தான்!’ என்பது இந்நூல் நமக்களிக்கும் தகவல்.
பன்னிரண்டு வயது பாலகனாக இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் வாசிக்க
வந்ததும், ராஜா அவர்கள் ரஹ்மானின் கரத்தின் மீது தனது கரத்தை வைத்து சில
திருத்தங்கள் கற்றுக்கொடுத்ததும், அகம் சிலிர்க்கச்செய்த புதுத் தகவல். ரஹ்மான்
என்றால் நம் நினைவுக்கு வருவது அவரது இசை மட்டுமல்ல... அவரது பணிவு, தன்னடக்கம்,
அகந்தையற்ற உடல்மொழி, அனைத்திற்கும் மேலாக அவரது இறைப்பற்று. தனது உறுதியான ஆன்மீக
ஈடுபாடு ராஜாவிடமிருந்து கற்றுக் கொண்டது என்பதை ரஹ்மான் பல இடங்களில் பெருமையுடன்
குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.
ஆரம்ப காலங்களில் அவர் விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் இசையமைத்தார்
என்பது தெரிந்திருந்தாலும், அவர் இசையமைத்த விளம்பரங்கள் எவை என்று அறிய
முற்பட்டதில்லை. லியோ காபி... நெரோலாக் பெயிண்ட்ஸ்... பூஸ்ட் என்பது தெரிய
வந்ததும், ஞாபக அடுக்குகளில் அவ்விளம்பரங்களின் பின்னணி இசை சட்டென்று ஒலிக்க,
உதடுகளில் புன்னகை உறைகிறது.
வைரமுத்து, மணிரத்னம், ரஹ்மான் கூட்டணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்;
பிரபுதேவாவின் நடனத்தை உச்சத்துக்கு கொண்டு நிறுத்தி, உலகையே திரும்பிப் பார்க்கச்
செய்த அவரது மாயாஜாலம்; ரங்கீலா படத்தின் மூலம் ஹிந்தி திரைப்பட உலகில் நுழைந்து
கலக்கிய தகவல்கள்; அதன் பிறகு பாலிவுட்டே சென்னைக்கு வந்து அவருக்காக காத்துக்
கிடந்த நிகழ்வுகள் என்று, அவர் ஏறிய படிகளை வாசிக்க வாசிக்க தமிழன் என்ற
உணர்வும் பெருமையும் நெஞ்சமெங்கும்
பொங்குவதை தவிர்க்க இயலவில்லை.
வந்தேமாதரம் ஆல்பம் உருவான விதம் பற்றி அறிகையில்,
சிகை பறக்க பாலைவனத்தின் மணற்புழுதியில் ‘வந்தேமாதரம்’ என்று உணர்வு பொங்கப்
பாடும் ரஹ்மான் கண்முன்னே வந்து போகிறார்;
கூடவே, ‘இந்தியன்’ எனும் உணர்வையும் பெருமையையும் கிளறிவிட்டுப் போகிறார்!
கே. பாலச்சந்தர், எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் வாலி போன்ற மூத்த
திரைக்கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவும் மரியாதையும் வாசிப்போரை
நெகிழச்செய்கின்றன.
சேகர் கபூர் வாயிலாக ஆண்ட்ரூ லாயிட் வெப்பர் ரஹ்மானைத் தொடர்பு கொண்டு
‘பாம்பே ட்ரீம்ஸ்’ வாய்ப்பை வழங்கியும், அவ்வாய்ப்பை ஏற்றுக்கொள்வதில் ரஹ்மான்
காட்டிய நிதானம் கவனிக்கத் தகுந்தது. அதற்குப் பிறகான அவரின் உழைப்பு
அசுரத்தனமானது. சிகரம் ஏறி ஆஸ்கார் எனும் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டாலும்
இன்றளவிலும், அவரது இசை மீதான புதிய முயற்சிகள் தொடர்ந்தபடியே உள்ளன.
‘கே.பி அவர்களின் முதல் படமான நீர்குமிழியில் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.
சேகர் பணிபுரிந்திருக்கிறார். அதே கே.பி யின் நிறுவனமான கவிதாலயா தயாரித்த ‘ரோஜா’
படத்துக்கு முதன்முதலாக இசையமைத்து தேசிய விருது பெறுகிறார் ரஹ்மான்’ என்ற தகவலைச்
சொல்வதன் மூலம், வாழ்கை ஒரு வட்டம் என்று வாசகனின் மனத்தில் அழுத்தமாக பதிவு
செய்கிறார் ஆசிரியர்.
அவருடன் பணிபுரிந்த பாடலாசிர்யர்கள் தொடங்கி, இசைக்கலைஞர்கள் ட்ராக்
பாடகர்கள், கோரஸ் பாடகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் கண்ட அசாத்திய
உயரங்களை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறார்.
‘திறமைகளைத் தேடிக் கண்டறிந்து உற்சாகப்படுத்தி, அவர்களுக்குரிய அங்கீகாரம்
கிடைக்க வழி செய்வதில் ரஹ்மானுக்கு நிகர் அவர் மட்டுமே!’- நூலை வாசிக்கும்
அனைவருக்கும் இவ்வுணர்வு மேலோங்கும் என்றாலும், நூலாசிரியர் ஒரு இடத்திலும்
மிகைப்படுத்தியோ, தன்னுடைய சொல்வளத்தை அறிவிக்கும் வகையிலோ எழுதவில்லை என்பது
பாராட்டத்தக்கது. ரஹ்மானுடனான பலருடைய அனுபவங்களையும் நூலாசியர் வாசர்களுடன்
நேரடியாக உரையாடுவதைப் போல சொல்லிச் சென்றிருப்பது வெகு சிறப்பு. ரஹ்மானின்
கடைக்கோடி ரசிகனும் வாசிக்கும் அளவில் மிக எளிமையான வார்த்தைப் பிரயோகங்கள்
வசீகரிக்கின்றன.
தமிழிலும் ஹிந்தியிலும் அவர் அறிமுகப்படுத்திய எண்ணற்ற பல இளம்
பாடகர்கள் குறித்த தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன. பல பாடகர்கள் குறித்த தகவல்கள்
இடம்பெற்றிருப்பினும், ‘சிநேகிதனே’ ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப்
பாடிய சாதனா சர்கம் பற்றிய தகவல்களும் ‘என்னவளே அடி என்னவளே’ என்று உருகிய
உன்னிகிருஷ்ணன் குறித்த தகவல்களும் இல்லாதது என்னளவில் சற்றே ஏமாற்றமே!
நூலில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் அப்பகுதியில்
இடம்பெற்றிருக்கும் கருத்துக்களோடு தொடர்புடையதாக இருப்பின், இன்னமும் வெகு
சிறப்பாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட
நிகழ்வுகளின் சிறுகுறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் அவைகள் மேலும் கவனம்
ஈர்த்திருக்கக்கூடும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது. முப்பதியிரண்டாம் பக்கத்தில்
இடம்பெற்றிருக்கும் புகைப்படம் அறுபத்தியாறாம் பக்கத்திலும் இடம் பெற்றிருப்பது
இத்தனை அழகான படைப்புக்கு திரிஷ்டியாகக் கொள்ளலாம்.
நூலாசிரியர் திரு விஜய் மகேந்திரன் 2011ஆம்
ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதையும், ‘படி’ அமைப்பின் 2015 ஆம்
ஆண்டுக்கான சிறந்த விமர்சகர் விருதையும் பெற்றிருப்பதாக அறிகிறேன். எழுத்துலகில்
மேலும் பல விருதுகள் பெற்று வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இளைஞர்களுக்கு
முன்மாதிரியாக விளங்கும் ஆதர்சநாயகன் பற்றிய இப்புத்தகம் ரஹ்மான் ரசிகனுக்கானது
மட்டுமல்ல; ஒவ்வொரு தமிழனுக்குமானது. ஏனெனில், ஒவ்வொரு தமிழனும் ரஹ்மான் ரசிகன்
தானே!