Sunday, May 22, 2022

விதியே கதை எழுது - அப்சல்



 விதியே கதை எழுது! – அப்சல்

முகநூல் நண்பர் எழுத்தாளர் அப்சல் அவர்கள், ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ எனும் தன்னுடைய நூலிலிருந்து அவ்வப்போது சில பகுதிகளை முகநூலில் பதிவிடுவது வழக்கம். ஆரம்பத்தில் அசிரத்தையாகவே அப்பதிவுகளை நான் வாசிக்கத் துவங்கினேன். ஒருசில தினங்களுக்குள்ளாகவே, தவற விடக்கூடாத பதிவுகள் அவை என்பதை நான் அனுமானித்து விட்டேன். சில எழுத்துகளை பாராட்டாமல் என்னால் கடந்து செல்ல முடிவதில்லை. அவ்வாறு கடந்து செல்வது அந்த எழுத்துக்குச் செய்யும் அவமரியாதை என்றெனக்குத் தோன்றுவதுண்டு. அத்தகைய எழுத்துக்குச் சொந்தக்காரர் அப்சல் பாய். அப்படி அவரது பதிவுகளில் பல முறை எனது பாராட்டுதல்களை நான் தெரிவித்திருக்கிறேன். இந்த வருட புத்தகக் கண்காட்சியில் நான் வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் அவருடைய புத்தகத் தலைப்புகளை, மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். என்னுடைய புத்தகங்கள் சிலவற்றை அவருக்கு அளிக்க வேண்டும் என்கிற அவாவும் எனக்கு ஏற்பட்டது.
சில நாள்களுக்கு முன்பாக மெசஞ்சரில் தொடர்பு கொண்டவர், தன்னுடைய நாவலை எனக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்தார். புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் என்றதற்கு, ‘கண்காட்சி நடக்கும் நேரத்தில் உங்களுடைய விமர்சனம் கிடைத்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும்’ என்றார்.
“இன்ஷா அல்லாஹ், நிச்சயம் செய்கிறேன்” என்றதற்கு மேல் அப்போது நான் எதுவும் பேசவில்லை.
“யாருக்கு யார் உதவி செய்வது அப்சல் பாய்! நாமனைவருமே இறைவனின் உதவியைக் கொண்டு தானே அவரவர் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்! உண்மையில், உங்களுடனான அறிமுகத்தையும், உங்களுடைய படைப்பை வாசிப்பதற்கான வாய்ப்பையும் இறைவனின் உதவியாகவே நான் பார்க்கிறேன்! நல்ல படைப்புகள் மக்களின் இதயங்களைச் சென்றடைய எவருடைய உதவியும் அவசியமில்லை. இறைவனின் பெருங்கருணையே போதுமானது. அதைக் கொண்டு அவை தாமாகவே தனக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொள்ளும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை,” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அவருடைய புத்தகம் எனக்கு கூரியரில் வந்து சேர்ந்ததும், Dunzo வில் நான் அனுப்பிய என்னுடைய புத்தகங்கள், முகவரி கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் எனக்கே திரும்பி வந்ததும் தனிக்கதை.
நான் கொண்ட நம்பிக்கை இன்று உண்மையாகிக் கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த மனநிறைவுடன் இக்கதை குறித்த என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்கிறேன்.
இது, விதி எழுதிய கதை!
தன்னுடைய திறமைக்கான அங்கீகாரம் ஏதேனும் ஒரு திசையிலிருந்து கிடைத்துவிடாதா எனும் ஏக்கத்தில் தன்னுடைய படைப்பினை பலருக்கும் அனுப்பி, விமர்சனங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திருக்கும் எழுத்தாளரின் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களின் கோர்வை. ‘சொல்லப்படாத உண்மைகள் நஞ்சாகிவிடும்’ எனும் நீட்ஷேவின் கூற்றை முன்னுரையில் மேற்கொள் காட்டும் ஆசிரியர், உண்மைகளை உள்ளது உள்ளபடி எவ்வித வார்த்தை ஜாலங்களுமின்றிப் பதிவு செய்து, தன்னுடைய உணர்வுகளை அமிர்தமாக்கிக் கொண்டுள்ளார். நூற்றி நான்கு பக்கங்கள் கொண்ட இந்நாவல் இரண்டு காட்சிகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல் பகுதி சமகாலத்தில், சராசரி குடும்பத் தலைவனான எழுத்தாளரின் அன்றாட வாழ்வியலை மிக மிக எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. தான் எழுதிய புத்தகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க 38c யிலும் 42 லும் அவர் அலையும் காட்சிகள் தத்ரூபம். அடுத்தமுறை பெரியமேடு மசூதிப் பக்கம் செல்லும் போது, மனம் தானாக அந்த புத்தகக் கடையையும், புத்தகமாகவே காட்சியளிக்கும் அறிவு நிறைந்த ஆனால் அன்பற்ற ‘சொல்லு சலீமை’யும் தேடும் என்று தோன்றுகிறது.
“எப்பவும் இதே தானே! புக் எழுதறது போன்ல பேசறது... அவன பாக்கறேன் இவன பாக்கறேன்னு கிளம்பிப் போக வேண்டியது...” என்கிற மனைவியின் எதார்த்த குத்தலுக்குப் பதிலாக, ஐந்து நிமிடங்களில் கிளம்பி வருவதாகச் சொல்லி, அரை மணி நேரம் கழித்து அவர் கிளம்பியதை, சாதாரணம் போல பதிவு செய்து வைத்திருப்பது புன்னகையை வரவழைத்தது.
சென்னையிலேயே இருந்தாலும், பல ஆண்டுகள் கழித்து பீச்சுக்கு செல்லும் கணவன் மனைவி – சேலை மீது மனைவி அணிந்திருந்த புர்கா, அவர்களுடைய பேருந்துப் பயணம், புகைப்படம் எடுத்து பிள்ளைகளுக்கு அனுப்பி அவர்களுடன் சந்தோஷத்தைப் பகிர்தல் என்று மிக எளிய அரிய அழகிய காட்சிப் படுத்துதல்கள் அருமை.
தான் எழுதிய புத்தகம் பேசப்பட வேண்டுமெனும் நோக்கத்தில் எழுத்தாளர் மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வந்து விழுகிறது ஒரு நண்பரின் விமர்சனம். அதில் டேக் செய்யப்பட்டிருக்கிறது அபிராமி எனும் பெண்ணின் பெயர். அப்பெயரின் பால் அவருக்கு ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு... அதைத் தொடர்ந்து நட்பழைப்பு விடுத்தல்... நட்பழைப்பேற்றல்... இவருடைய கதைக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லி நண்பர் மூலமாக தூது விடுத்தல்... என்று சம்பவங்களின் நகர்வுகள் புருவம் உயர்த்தச் செய்கின்றது.
தன்னுடைய கதையின் சகல பரிமாணங்களையும் தொட்டு எழுதப்பட்ட முன்னுரை, அவருக்குப் பித்து பிடிக்கச் செய்கிறது. தன்னையறியாமல் வார்த்தைகளை வலையாக்கி அபிராமி வீசிவிட, அதில் மீனாகச் சிக்கித் தவிக்கிறது எழுத்தாளரின் மனம்.
“எனக்கு 20 அபிராமியை தெரியும். நீங்க யாரைச் சொல்றீங்க?” என்று நண்பரொருவர் கேட்க, “அடேய் எனக்கு ஒரு அபிராமியால இருபது விதமான அவஸ்த்தை... இதுல இவன் வேற!” என்று புலம்பும் அளவுக்குச் செல்கிறது.
இடையிடையே உருவமில்லா அருவமான ஏதோவொன்றுடன் நிகழும் உரையாடல்கள் மிகச் சுவாரஸ்யம். சில சமயங்களில் நக்கலடித்தாலும் பல சமயங்களில் அது அவருக்கு வழி காட்டுகிறது... நல்வழிப்படுத்துகிறது... எச்சரிக்கை விடுக்கிறது... தத்துவமும் பேசுகிறது... மிக முக்கியமானதொரு தருணத்தில் நெஞ்சோடு அணைத்து தலை கோதி தாய்ப்பாலின் வாசனையைச் சுகிக்கச் செய்கிறது. அது எதுவென்பது இவ்விமர்சனத்தின் இறுதியில்.
ஒரு காலத்தில் ஜும்மா நமாஸ் வேளைகளில் மசூதிக்குச் செல்லாமல் பெரியார் திடலில் போய் மெளனமாக ஒரு மூலையில் அமர்ந்து கொள்ளும் பழக்கமுடையவர், தற்போது கடவுளை நம்பும் நாத்திகனாக... அவ்வப்போது மூன்று நாள் தப்லீக் ஜமாத் செல்லும் பழக்கத்திலிருக்க, அவ்வாறு சென்றிருந்த ஒரு மழை நாளில் நண்பர்களுடன் அபிராமியைச் சந்திக்கிறார்.
ஹி ஹி
இளிக்காதேடா, அசிங்கமா இருக்கு
அபிராமி வந்திருக்காங்க
வந்தால் வரட்டும். நீ போனா உன் நிலை குணா மாதிரி ஆயிடும்.
அப்படியெல்லாம் ஆகாது. நான் மெச்சியூர்ட் பெர்சன்.
எனக்குத் தெரியாதா? half boiled uncle நீ. உனக்கு வயசு தான் 55. மனசு இன்னும் பதினைஞ்சுல தான் நிக்குது. நீ போகாதே... இது உனக்கு ஆபத்து, ” எனும் உருவமில்லா அருவத்தின் அறிவுறுத்தலையும் மீறி அபிராமியைச் சந்திக்கிறார்.
மனைவியின் முகத்தைப் பார்த்தவுடன் குல்பி ஐஸ் போலக் கரைந்திடும் கதைசொல்லியின் மனம், ஓஷோவின் ஆசிரமமான முகநூல் எனும் மாய உலகினுள் நுழைந்து அதனுள் சஞ்சரிக்கையில் வேறாக மாறிப்போனதன் மர்மம் என்ன? எந்தத் துயரத்தை மறக்க அது அந்த முகமூடியை தன்போக்கில் எடுத்தணிந்து கொண்டது என்பதும் இரண்டாவது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
“தப்ப முடியாமையும் தவிர்க்க முடியாமையும் ஒரு முழுமையான தனித்தன்மையுடன் சேர்ந்து உருவாகிற போதுதான், இலக்கியம் பிறக்கிறது.” எனும் க.நா.சு வின் கூற்றை முன்னுரையில் மேற்கொள் காட்டியிருக்கும் ஆசிரியர், தப்ப முடியாமையாக மரணத்தையும் தவிர்க்க முடியாமையாக காதலையும் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.
மிகக் கனமான இந்தப் பகுதியில், அந்தந்த நிகழ்வுகளின் போது, தனது மனம் மீட்டிப் பார்த்த பழைய நினைவுகளை காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அனைத்தும் கொள்ளை அழகு.
தன்னுடைய மகனுக்கொரு மகன் பிறந்திருக்கும் வேளையில், தன் மகன் பிறந்த போது, தன் மனைவி தன்னை... “உன்னால தானடா எனக்கு இந்த நிலை...” என்று ஏசியதைக் குறிப்பிட்டிருப்பது மிக வேடிக்கை. நான்கு வயது மகன் முதன்முதலாகப் பள்ளிக்குச் சென்ற நாள் – அற்புதமான நினைவுகூறல்!
வாழவேண்டிய வயதில் நேர்ந்த இளங்குருத்தொன்றின் மரணத்தை விவரிக்கும் இப்பகுதியை வாசிக்கையில், கொரோனா இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் நெஞ்சிலறைகிறது. நோன்புக் காலத்தில் நிகழும் அம்மரணத்தின் அவலச்சுவையில் நெஞ்சம் உலர்ந்து போகிறது. அழுகையே பிரார்தனையாகவும் பிரார்த்தனையே அழுகையாகவும் மாறிய அவலம்! How are you dear! என்று மருமகளுக்கு அனுப்பிய இறுதி மெசேஜ்! – இக்கதை என்னில் ஏற்படுத்திய தாக்கம் மறைய நிறைய நாட்களாகும்!
இவை தவிர இக்கதையில் நான் இரசித்த சில வரிகள்:
work from home – முதலில் ஆரம்பித்தவன் நான் தான்.
மனிதர்களைப் பிடித்து விட்டால்... மனம் விட்டு மட்டுமல்ல மனதில் பட்டதையெல்லாம் பேசிவிடுவேன்.
மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொண்டிருந்தேன். நதிகளுக்கு நடுவே நான் நனைந்து கொண்டிருந்தேன்.
எங்கள் இருவரின் பேச்சிலும் அபிராமி இருந்ததைப் போலவே, அவர்கள் இருவரின் பேச்சிலும் நான் இருந்திருக்கிறேன்.
மழைத் தண்ணீரை விழுங்கிக் கொண்டேயிருக்கும் ஓட்டை விழுந்த குடத்தைப் போல என் மனசு எப்பவுமே காலியாக இருந்தது.
வாழ்க்கைக்கும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். நடந்த சம்பவங்களை ரீவைண்ட் பண்ணி அழிச்சிடலாமேன்னு! ஆனா, மனசோட ரிமோட் நடந்ததையே திரும்ப திரும்ப அசை போடும் ரீவைண்டாகத் தான் இருக்கிறது.
மொபைல் எனக்கு ஆலயமாகவும் மெயில் எனக்கு கன்பெஷன் அறையாகவும் மாறிப் போனது. அவள் பேசுவது எனக்கு அப்பம். அவளுடைய மௌனத்தை நான் திராட்சை ரசமாகப் பருகிக் கொண்டிருந்தேன்.
முகநூலின் பெரிய பிரச்சனை மனுஷ்யபுத்திரன். கடவுளைப் போல ஓய்வே இல்லாத ஆள் மனுஷ். கடவுள் சதா விதியை எழுதிக் கொண்டிருப்பதைப் போலவே மனுஷ் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பார்.
பேக் ஐடிக்களின் உலகம் கனவுக்குள் காணும் கனவைப் போலிருந்தது.
தனியார் ஆஸ்பத்திரி என்ற ஒன்றே இருக்கக் கூடாது.
இவையனைத்தையும் தாண்டி, “ஓ என்னைவிட பெரிய அழகியா அந்த அபிராமி... உன் மூஞ்சிக்கு கெழவனாகி இன்னும் லவ்வா?” என்று கேட்கும் அப்சல் பாயின் மனைவியின் அன்பின் பேரழகும், “நான் தான்டா நீ... நீ தான்டா நான்” எனும் உருவமற்ற அருவத்தின் அடையாளப்படுத்துதலும் Amazing!
கதையின் முடிவில் ‘முற்றும்’ போடாமல் ‘தொடரும்’ போட்டிருப்பதற்கான அர்த்தம் என்னவென்பதை எனக்கு மட்டும் சொன்னால் மிக மகிழ்வேன் பாய்!
உங்கள் வீடிருக்கும் தெரு முனையில் சிந்து பவன் வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கிறது. வீட்டிற்கு அருகே ஷியா மசூதி இருக்கிறது என்பதை வாசிக்கையில், உங்கள் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு என்னுடைய புத்தகங்களை அனுப்பியிருந்தால் நானே dunzo boy க்கு வழி சொல்லியிருக்கலாம் என்றெண்ணிக் கொண்டேன். நீங்கள் பகலில் உறங்கும் போது அலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்யும் தகவல் முன்பே தெரிந்திருந்தால் குறைந்தபட்சம், புத்தகங்களை பிற்பகல் வேளையில் அனுப்பியதையேனும் தவிர்த்திருந்திருக்கலாம். உங்களுக்காக பிரத்யேகமாக நான் கையெழுத்திட்ட ஐந்து புத்தகங்கள், உங்களுடைய வாசிப்பிற்காகக் காத்திருப்பதை நினைவில் கொள்ளவும்.
என்னுடைய வாசிப்பு உங்களுக்கு வேண்டுமானால் வாழ்த்தாக இருக்கலாம். ஆனால், எனது இப்பதிவு என் தரப்பிலிருந்து உங்களுடைய முயற்சிக்கான சிறியதொரு மரியாதை!
நன்றி!

Sunday, January 12, 2020

சென்னை புத்தகக் கண்காட்சி

வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் எஸ்.எஸ் பதிப்பக புத்தகங்கள் கீழ்க்கண்ட அரங்கங்களில் கிடைக்கும் என்பதை அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பிரியா நிலையம் அரங்கம் எண் 280
அருண் பதிப்பகம் அரங்கம் எண் 292
நியூ புக் லேண்ட்ஸ்
(நர்மதா பதிப்பகம்)அரங்கம் எண் 374/75
நாதம் கீதம் புக்ஸ்
எமது பதிப்பக புத்தகங்களுக்கு வாசகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நல்லாதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா
எஸ். எஸ். பப்ளிகேஷன்ஸ்



Friday, January 3, 2020

நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு! - ஹமீதா



தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!
நலம் தானே நட்புகளே!
'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' - ஹமீதா
சென்னை புத்தகக் கண்காட்சியில்...
ஆதித்யன் அருணாச்சலம் அனாயாசமாகக் கையாளும் கூடைப்பந்தைப் போலவே, இக்கதையை வாசிக்கவிருக்கும் வாசகர்களும், மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல இக்கதையினுள் நுழைந்து வெளியே வர என்னுடைய அன்பான வாழ்த்துகள்!
===========================================
“ரோஜா! ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு! கொஞ்ச நேரம் விளையாடினா தான் என் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். நாம பேசலாம்... ஜஸ்ட் டென் மினிட்ஸ்!” என்று சொல்லிவிட்டு கோர்ட்டை நோக்கி ஓடினான்.
மிகுந்த காதலுடன் அந்த ஆரஞ்சு வண்ணப் பந்தை கையில் எடுத்துக் கொண்டான். அவனுடலின் ஒவ்வொரு செல்லிலும் உற்சாகம் ததும்பி வழிந்ததை அவளால் தரிசிக்க முடிந்தது.
“ஜீசஸ்! ஹவ் மச் ஹி லவ்ஸ் தி கேம்!” அவளுடைய உதடுகள் தன் போக்கில் முணுமுணுத்தன.
அந்தப் பந்து அவனுடைய கைகளில், அவன் சொன்ன சொல்லைத் தட்டாமல், சமத்துக் குழந்தையைப் போல அடிபணிவதையும், கிட்டத்தட்ட ஒரு செப்பிடு வித்தைக்காரனைப் போல அவன் அதனை ஆட்டி வைப்பதையும் வழக்கமான ஆச்சர்யத்துடனே பார்த்திருந்தாள் மெலனி.
அனாயசமாக பாலை ட்ரிபிள் (dribble) செய்தபடியே தன்னுடைய நீளமான கால்களால் ஓடியவன், க்ஷண நேரத்தில் நூற்றெண்பது டிகிரி கோணத்தில் திரும்பி சட்டென்று பந்தை, கூடையை நோக்கி வீசினான். அது ஏதோ மயக்கத்திலிருக்கும் வஸ்துவைப் போல கூடைக்குள் நுழைந்து வெளிவந்தது.
===============================================
'எல்லாப் புகழும் இறைவனுக்கே!'
என்றென்றும் அன்புடன்
ஹமீதா

Sunday, April 14, 2019

ஹமீதாவின் நாவல்கள் - முழுத் தொகுப்பு

வாசக நெஞ்சங்களுக்கு, இனிய வணக்கங்கள்!
முகநூல், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி வாயிலாக, தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே வரும் வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நவம்பர், 2015-ல் உங்கள் அனைவரது அன்பின் அடைமழையோடு துவங்கிய என்னுடைய எழுத்துப் பயணம், கடந்த மூன்றாண்டுகளில் மறக்கவியலா எண்ணற்ற மகிழ்ச்சிகளை உள்ளடக்கியவாறு ‘மறப்பேன் என்றே நினைத்தாயோ!’ போன்ற அர்த்தமுள்ள கேள்விகள் பலவற்றையும் எழுப்பியபடியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இனிமையான தருணத்தில், இதுவரை நான் எழுதிய எட்டு படைப்புகளை உள்ளடக்கிய முழுத் தொகுப்பை, அமேசான் வாசகர்களுக்கு அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
வாசகர்களது ஈடுஇணையற்ற நல்லாதரவையும், ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் shameeda0203@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
14.04.2019 ஞாயிறு தமிழ் புத்தாண்டு தினத்தன்று, இந்திய நேரம் பிற்பகல் 1.30 மணி துவங்கி, 15.04.2019 திங்கள் பிற்பகல் 1.29 மணி வரை, இந்த முழுத் தொகுப்பை 90% கழிவில் அமேசான் கிண்டிலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனும் நற்செய்தியையும் இப்பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 மலர்ந்திருக்கும் தமிழ் புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் மகிழ்வையும் மலர்ச்சியையும் ஒருசேர மலரச் செய்திட என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்!
‘எல்லா புகழும் இறைவனுக்கே!’
அன்புடன்
ஹமீதா

Saturday, March 30, 2019

எழுத்தாளர் மதுஹனி அவர்களின் விமர்சனம்

யாரைக் கேட்டது இதயம் - ஹமீதா
கதைகளில் பல வகை (genre) உண்டு.
நிகழ்கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சமுதாயத்தின் கட்டமைப்பு, மனிதர்கள், அவர்தம் வாழ்வியல் முறைகள், சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சமூகம் சார்ந்த கதைகளில் உண்மைத் தன்மை மிகவும் அவசியம்.
The facts should be true and clear.
The author should have a profound knowledge about the subject she/ he is dealing with.
யாரைக் கேட்டது இதயம் பொறுத்தவரையில் ஹமீதா அவர்கள் முழு வெற்றியை அடைந்திருக்கிறார் என்பது எனது கருத்து.
அடிஆழம் வரை தான் எடுத்துக் கொண்ட கருவை நன்றாக அறிந்து புரிந்து அழகாக கதையை வடித்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் நடுநிலையான ஒரு பெரிய செய்தி நிறுவனத்தை இளம் வயதில் ஒருவன் வெற்றிகரமாக நடத்த அவனுக்குத் தகுந்த background இல்லாமல் அவ்வளவு எளிதல்ல.
மிகப் பெரிய அரசியல்வாதியின் ஒரே மகன் this background gives complete justification of the career heights of the male lead.
சத்யநாராயணன் போன்ற அரசியல்வாதிகளாலும் தேவராஜன் போன்ற நேர்மையற்ற அதிகாரிகளாலும் முதலில் பாதிக்கப்படுவது அவர்தம் குடும்பங்களே.
அந்தக் குடும்பத்தினரே, அவர்கள் வாரிசுகளே அவர்களின் அநியாயங்களை எதிர்க்கிறார்கள். ஆனால் தான் கற்ற கல்வியின் பலம் கொண்டு மிக சமயோசிதமாக சாதுர்யமாக வியூகம் அமைத்து அவர்களை அதில் வீழ்த்துவது தான் கதையின் ஹைலைட்.
"கத்தி முனையை விட பேனா முனை வலியது" ஒரே வரியில்.
நியூஸ் சேனல், அரசியல், மருத்துவக்கல்வி ஊழல்கள், நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் பாதிப்புகள், HPV, keyblogger etc etc
கதை முழுவதும் precise facts and information. என் தனிப்பட்ட பிடித்தம் அது.
சுமந்த் ஸ்ரேயா இருவரின் காதலும் திருமணம் குறித்த புரிதலும் உணர்வுகளும் எந்த வித அலங்காரப் பூச்சுகளும் இல்லாமல் உள்ளது உள்ளபடியாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கதையைப் பற்றி கதாபாத்திரங்கள் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் கதையைப் படித்து நான் உணர்ந்தது இது தான்.
எங்கேயும் EMPTY WORDS இல்லை MISLEADING FACTS இல்லை MISSING LINKS இல்லை.
Everything was perfectly scripted.
கடினமான சூழ்நிலையையையும் பலமாக ஆக்கிக் கொண்ட சுமந்த் ஸ்ரேயா அவர்களின் smart thinking, positive attitude and social responsibility இக்கதை என் மனதில் ஒரு நல்ல பாதிப்பை ஏற்படுத்த காரணம்.
உங்களுடைய எழுத்துப்பயணத்தில் This story is pathbreaker and a genuine masterpiece.
நான் என் முந்தைய பதிவில் கூறியது போல வாசகரின் ரசனையும் தனித்தன்மை வாய்ந்தது.
என் சிந்தனைக்கும் ரசனைக்கும் இக்கதை மிகுந்த நிறைவைக் கொடுத்தது.
Thanks for the great reading experience.
நன்றி ஹமீதா.

Monday, January 28, 2019

மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா - மின்னூல் வடிவம்







வணக்கம் நட்புகளே!

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் வாசகர்களின் தொடர் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு,  'மறப்பேன் என்றே நினைத்தயோ!' அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனும் தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்களின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் என்றென்றும் எனது அன்பும் நன்றிகளும்!

அன்புடன்,
S. ஹமீதா.

https://www.amazon.in/dp/B07N47WKPS?fbclid=IwAR2iGu0BR0uDqerrT0t8pWu2isfIsD5iLabGhqvlABAhJt8y-EDDFevQ9n4

Friday, January 4, 2019

42வது சென்னை புத்தகக் கண்காட்சி


 தோழமைகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
04.01.2019 - 20.01.2019 வரை, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நிகழவிருக்கும் 42வது சென்னை புத்தகக் கண்காட்சியில், எஸ்.எஸ் பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட அரங்கங்களில் கிடைக்கப்பெறும் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்!
ப்ரியா நிலையம் ஸ்டால் எண் - 74
அருண் பதிப்பகம் ஸ்டால் எண் - 545
வி கேன் ஷாப்பிங் ஸ்டால் எண் - 164
எஸ்.எஸ் பதிப்பகத்தின் புத்தம் புதிய வெளியீடு...
'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'
எமது அனைத்து வெளியீடுகளுக்கும் வாசகர்கள் தொடர்ந்து நல்கி வரும் நல்லாதரவு, இன்று போல என்றும் தொடர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன், தங்கள் நல்வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்!
இனிமையான வாசிப்பு, அனைவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை நிறைக்க எஸ்.எஸ் பதிப்பகத்தின் நல்வாழ்த்துகள்!
அன்புடன்,
S.ஹமீதா
எஸ்.எஸ் பப்ளிகேஷன்ஸ்.













முன்னோட்டம் - 3



முன்னோட்டம் 1 மற்றும் 2-ஐ வாசித்த பலரும், 'யமுனா பாவம்' என்று பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். உள்பெட்டிக்கு வந்த தோழிகள் பலரும் அவ்வாறே கருத்துத் தெரிவித்தீர்கள்!
குட்டியாக இரண்டு சாம்பிள் காட்சிகளைப் பதிவிட்டிருக்கிறேன்!
யமுனா நிஜாமாகவே பாவம் தானா?
வாசித்துச் சொல்லுங்கள் நட்புகளே!
'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'
முன்னோட்டம் - 3
============================================
“எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?”
“வாட்?”
“ஒரு பொண்ணுக்கு வசதியான இடத்துல வாழ்க்கை அமையுதுன்னா, அதைக் கெடுக்க நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் செய்வாங்கன்னு நான் கேள்விப் பட்டிருக்கேன். அதை இப்பத்தான் நேர்ல பார்க்கிறேன்!”
அவள் சொல்லச் சொல்ல, அவன் அவளை நம்ப முடியா பார்வை பார்த்தான்.
“என்ன? தண்ணியடிக்கிறான்... பொண்ணுங்க கூட சுத்துறான்னு ஏதாவது சொல்லுவ! இந்தக் காலத்துல தண்ணியடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பணக்காரப் பையன்னா தம்மு தண்ணி பொண்ணுங்க எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் உன்னை மாதிரியே பழமா இருக்க முடியுமா? வசதி வந்துட்டா நீயும் இப்படிப் பழமா இருக்க மாட்ட! அப்புறம்... ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்... நான் ஒண்ணும் உன்னளவு சாதாரணக் குடும்பம் கிடையாது. எங்கப்பா ஒரு பெரிய லெதர் கம்பெனில நல்ல போஸ்ட்ல இருக்கார்!”
அவனுடைய தோற்றத்தை மிக ஏளனமாக மேலும் கீழுமாகப் பார்த்தபடி அவள் சொல்ல, கேட்டிருந்த ஜீவா திகைத்துப் போனான்.
****
“அவங்க பொண்ணு பார்க்க வர்றப்போ நான் எந்தப் புடவை கட்டிக்கிறது? எங்கிட்ட இருக்கிறதெல்லாம் விலை குறைவான ஃபேன்சி புடவை. ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன்ஸுக்கு வேணும்னா கட்டிக்கலாம்!” என்று தொடங்கினாள்.
“இது என்னடீ அநியாயமா இருக்கு உன்னோட? பொண்ணு பார்க்கிறதுக்கே புதுப் பட்டுப்புடவை வாங்குறதுக்கு நாம எங்கே போறது?” - வெகுண்டு விட்டார் சிவகாமி.
“ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன், பொறந்தநாளு, ஃப்ரெண்ட்ஸ் வீட்ல விசேஷம்னு போகணும்னா புது ட்ரெஸ் கேட்டு அடம் பிடிப்ப. அப்பாவோட தோள்ல சாஞ்சுட்டு செல்லம் கொஞ்சியே சாதிப்ப. கேட்குறதுலயும் ஒரு நியாயம் வேணாமாடீ! நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க... இன்னைக்கு பட்டுப்புடவை கேட்கிற!” ஆற்றாமை தாளாமல் ‘பிலுபிலு’வென்று பிடித்துக் கொண்டார் சிவகாமி.
“ஏன்மா! நான் என்ன அந்த ‘நீயா நானா’ல வந்த பொண்ணுங்க மாதிரி அம்பது பவுன் போடுங்க எண்பது பவுன் போடுங்க, அஞ்சு லட்ச ரூபா ஏஸி ஹால் புக் பண்ணுங்க... ஹெலிகாப்டர்ல வந்து மணவறையில இறங்குறேன்னா சொன்னேன்? சிம்பிளா ஒரு பட்டுப்புடவை... அதுக்குப் போய் இந்தக் குதி குதிக்கிறீங்க! சொல்லப்போனா நீங்க எல்லோரும் என்னைப் பாராட்டணும். அப்பாவுக்கு செலவு வைக்காம, அதே சமயத்துல கண்ட கழிசடையை லவ் பண்ணி மானத்தை வாங்காம, உங்க மரியாதையைக் காப்பாத்திக் குடுத்திருக்கேன். அது புரியல உங்களுக்கு!” என்று பதிலுக்கு எகிறினாள் யமுனா.
==============================================
அன்புடன்,
S.ஹமீதா.

முன்னோட்டம் - 2




மறப்பேன் என்றே நினைத்தயோ! - ஹமீதா
முன்னோட்டம் - 2
===========================================
இருவரும் கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக் பகுதியில், ஒருவர் மேல் மற்றவர் இழைந்தபடி நடந்து கொண்டிருந்தனர். யமுனா மிக அழகாக மாம்பழ வண்ண கிரேப் சில்க் புடவை அணிந்திருந்தாள். அடித்துக் கொண்டிருந்த இளம் வெயில், மிக மிக இதமாக இருக்க, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துவந்திருந்த பச்சை வண்ணச் சால்வை, அவளது தோளின் ஒரு புறமாகச் சரிந்திருந்தது. சுடச்சுட கையில் பிடித்திருந்த வேகவைத்த மசாலா கடலைப் பொட்டலத்திலிருந்தது கடலையை எடுத்து, ஊதி ஊதி வாயில் போட்டுக் கொண்டிருந்தாள்.
“அங்கே உட்காரலாமா?”
பேசியபடி பாறையோரமாக அமர்ந்து கொண்டனர்.
“நானே சாப்ட்டுட்டு இருக்கேன்! இந்தாங்க உங்களுக்குக் கொஞ்சம்!”
சிறிது கடலையை ஊதி, அவனுடைய வாயில் போடப் போனாள்.
“ரோட் சைட்ல விற்கிற ஐட்டமெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்!” சொல்லியபடி அவள் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், அவளது கையைத் தட்டிவிட்டான் கிஷோர்.
“ஓஹ் சாரி!”
அவளது உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன. ஆசையாய் உண்ட சுவையான மசாலா கடலை, நொடியில் வேப்பங்காயாய் கசந்து தொண்டை வழியே இறங்கியது. அவனுடன் மனசு விட்டுப் பேசும் தன்னுடைய முயற்சிகள் எல்லாம் இதுபோலக் கசப்பாகவே முடிவது, அவளுக்கு ஒரு வித நெருடலைத் தோற்றுவித்தது.
‘இது ரொம்ப சின்ன விஷயம்! இதுக்கெல்லாம் அசரக் கூடாது!’ அவள் சுதாரித்துக் கொண்டு கையிலிருந்த கடலைப் பொட்டலத்தை பள்ளத்தாக்கில் விட்டெறிந்தாள்.
“ஓஹ்! உங்களுக்குப் பிடிக்காதா? அப்ப இனிமே எனக்கும் பிடிக்காது. உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க... நானும் இனிமே அதை ஒதுக்கிடுவேன்!”
கணவனை நோக்கி உளப்பூர்வமாகச் சொன்னாள் யமுனா.
“அப்படியா!” என்று ஆச்சர்யம் போலக் கேட்டவன், “சொல்றேன் கேட்டுக்கோ!” என்றுவிட்டு, தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.
“நான் கூப்பிடும்போது மட்டும் வரணும்! பெர்மிஷன் கேட்காம ரூமுக்குள்ள வரக்கூடாது! அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! ‘தொண தொண’ன்னு பேசக் கூடாது! இங்கே கூட்டிட்டு போ அங்கே கூட்டிட்டு போன்னு இன்னைக்கு நச்சின மாதிரி நச்சக் கூடாது! முக்கியமா என்னோட ஃபோன் லேப்டாப் இதெல்லாம் தொட்டா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!” என்று பட்டியலிட்டான்.
“அப்புறம்... நீ இப்படி ஒல்லியா இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை... உங்கக்கா, உங்கம்மா மாதிரி நல்லா 'தள தள'ன்னு இருக்கா! உனக்கும் உங்கம்மா தானே சாப்பாடு போட்டு வளர்த்தாங்க! அப்புறம், நீ மட்டும் ஏன் இப்படி பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி இருக்க?” என்றவன், “அதோ அங்கே வர்றாங்க பாரு ஒரு ஆன்ட்டி... அந்த மாதிரி... அப்படிக் கொஞ்சம் பூசின மாதிரி...” என்று சொல்ல, அவன் கண்களைக் காட்டிய திசையில் பார்த்தாள்.
அங்கே சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க வட இந்தியப் பெண்மணி, ஒரு சிறுமியைக் கையில் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்.
யமுனாவைப் போலவே இளம் வெயிலை அனுபவிக்கும் பொருட்டு, சால்வையை மடித்துக் கைவளைவில் போட்டிருந்தார். புடவை தான் அணிந்திருந்தார். ஆனால், அதை அணிந்திருந்த விதம் அவரது உடலழகை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
“அந்த மாதிரி இருந்தா செம கிக்கா இருக்கும்!”
மிக ரசனையாகச் சொன்னான் கிஷோர்.
தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் பொருட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் யமுனா. அதே வேளையில் அப்பெண்மணி இவர்களைக் கடந்து செல்ல, அவருடைய இடப்புறப் பக்கவாட்டுத் தோற்றத்தை ஜூம் செய்து கிளிக்கினான் கிஷோர்.
=============================================
முன்னோட்டம் - 2, உங்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்!
இக்கதைக்களம் எதைப் பற்றியது என்ற சிறு அனுமானம்... எதிர்ப்பார்ப்பு... உங்களுக்குள் தோன்றியிருக்கக் கூடுமென்று எண்ணுகிறேன்!

அன்புடன்,
S. ஹமீதா.

'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'




வணக்கம் நட்புகளே!
"மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா"
42 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில், உங்களுடைய உணர்வுகளுடன் நேரடி உரையாடல் நிகழ்த்தக் காத்திருக்கிறது!
ஸ்டால் விவரங்கள் அடுத்த டீஸரில்...
#முன்னோட்டம் - 1
============================================
பெற்றோரிடம் பேசி விட்டதில் உண்மையில் மிக ஆசுவாசமாக இருந்தது. 'அப்பா இருக்கேன் மா!' என்ற தந்தையின் ஆத்மார்த்தமான அன்பு வார்த்தைகள், யானை பலம் தந்தன.
அதற்குள் ஜீவன் லைனில் வந்தான்.
"யமுனா..." என்றான்.
"சொல்லு ஜீவன்! உங்க மாமா கால் பண்ணியிருக்கார். நான் இன்னும் பேசலை! என்ன பேசட்டும்? குழப்பமா இருக்கு ஜீவன்!" என்றாள்.
"குழம்பறதுக்கு ஒண்ணும் இல்ல யமுனா! முன் வெச்ச காலை பின் வைக்க முடியாது. சோ, வி ஹேவ் டு கோ அபவுட் இட்!" என்றவன், "இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பி வரேன். அதுக்குள்ள நீ உன்கிட்ட இருக்கிற எவிடென்ஸ் எல்லாம் அனுஷா கிட்ட சொல்லி பிரிண்ட் அவுட் எடுக்கச் சொல்லு. கமிஷ்னர் ஆபிஸ்ல போய் ஹார்ட் காப்பி எவிடென்ஸ் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு வந்துடலாம்." என்றான்.
"சரி!"
"அப்புறம் கிஷோரை ரிமாண்ட் பண்ணிட்டாங்க. ஒரு செக்ஷன் நான்-பெய்லபிள்! ஒண்ணும் பண்ண முடியல!" என்றான் மெல்ல.
அவள் பதில் பேசாமல் மெளனமாக இருந்தாள்.
"ஃபீல் பண்றயா யமுனா?" அவளின் அமைதி அவனை அவ்வாறு கேட்க வைத்தது.
"நோ நோ... இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு இதைப் பண்ணித்தான் ஆகணும் ஜீவன்." என்றாள் வேகமாக.
"இப்போதைக்கு மாமாவோட பேச வேண்டாம் யமுனா! ரொம்ப பேட் ஸ்டேட் ஆப் மைண்ட்ல இருக்கார்!" என்று அவன் சொல்ல ‘சரி’ என்று கேட்டுக் கொண்டாள்.
“யமுனா!”
“ம்ம்!”
இப்போது அவள் ஜன்னலருகே வந்து நின்றிருந்தாள். ஜன்னல் கிழக்கைப் பார்த்தபடி அமைந்திருந்ததால் இளம் வெயில் இதமாய் மேனியை வருடியது. முகத்தில் பட்ட கதிரவனின் ஒளிக்கீற்று அவளுள் ஏதோ ஒருவகை நம்பிக்கையின் கீற்றையும் சேர்த்தே தோற்றுவித்தது.
“இன்செக்யூர்டா ஃபீல் பண்ணாதே ப்ளீஸ்!" என்றவன் மெலிதாகத் தயங்கினான்.
"நான்… நான் இருக்கேன்! அப்படியெல்லாம் உன்னை அந்தரத்துல விட்டுட்டுப் போக மாட்டேன்!” என்றான் தழைந்த குரலில்.
குரல் தழைந்திருந்தாலும் அதிலிருந்த உறுதியும் நேர்மையும் அவளை அசைத்துப் பார்த்தன.
ஜன்னலின் கம்பிகளைப் பற்றியபடி ஒரு கணம் கண்மூடி நின்றாள் யமுனா. வாழ்வின் எல்லை வரையிலும், இந்த உணர்வு மிகுந்த குரலும், அது தரும் நினைவுகளும், பாதுகாப்புணர்வும், உடன் வரும் என்பது அவளுக்குப் புரிந்தது.
‘இது போதும்!’ என்றிருந்தது.
“தெரியும் ஜீவன்! சில விஷயங்கள் நீ எனக்குச் சொல்லணும்னு அவசியமில்லை. ஐ நோ!” என்றாள்.
அவன் மீதான அவளது நம்பிக்கையில் அவன் மறுமுனையில் திகைத்திருப்பது அவளுக்குப் புரிந்தது.
“சீக்கிரமா கிளம்பி வா!” என்று வழக்கம் போல அவள் மிடுக்காக உரைக்க, அவன் புன்னகையுடன் இணைப்பைத் துண்டித்தான்.
===============================================
உங்கள் அனைவரின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...
அன்புடன்,
S. ஹமீதா.

Friday, November 9, 2018

Download All Six Titles From Amazon Kindle Absolutely Free

வணக்கம் நட்புகளே!
எல்லோரும் மிக இனிமையாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!
பண்டிகையை முன்னிட்டு கிண்டிலில் எனது படைப்புகளை முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கொடுக்கப்பட்டிருந்த சலுகையை, பலரும் பயன்படுத்திக் கொண்டது அறிந்து மிக மிக மகிழ்ச்சி.
மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து, உள்பெட்டியில் வந்து தங்களது மேலான கருத்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட வாசகிகள் அனைவரின் அன்பும் என்னை மனம் நெகிழச் செய்தது.
அனைவரின் அன்புக்கும், என்மீதான நன்மதிப்பிற்கும், எனது படைப்புகளின் மீதான உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் இறைவனுக்கு எனது நன்றிகள்!
பலர் இச்சலுகையைப் பயன்படுத்திக்கொண்ட போதிலும், ஒரு சிலர் கிண்டிலை பயன்படுத்தத் தெரியவில்லை என்றும்; ஒரு சிலர் பண்டிகை வேலைகளில் மறந்து விட்டதாகவும்; ஒருசிலர் இலங்கை போன்ற நாடுகளில் தரவிறக்கம் செய்ய முடியவில்லையென்றும் தெரிவித்திருந்தீர்கள்.
ப்ளாகிலும் மின்னஞ்சலிலும் முகநூல் உள்பெட்டியிலும் இது குறித்து விசாரித்த நட்புகள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே பதிலளிக்க முடியவில்லை. மன்னியுங்கள்! அதற்காகவே இந்தத் தனிப் பதிவு!
இந்த வாய்ப்பைத் தவறவிட்ட வாசகர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, இச்சலுகையை மீண்டும் வழங்க உத்தேசித்துள்ளோம்.
நாளை சனிக்கிழமை (10.11.2018) - இந்திய நேரம் பிற்பகல் 1:30 மணி முதல் ஞாயிறு (11.11.2018) பிற்பகல் 1:29 மணி வரை கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள என்னுடைய ஆறு படைப்புகளையும் வாசகர்கள் முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மகிழ்ச்சி தானே நட்புகளே!
கிண்டில் உபயோகப்படுத்தும் முறை குறித்து நண்பர்கள் சிலர் பகிர்ந்திருந்த பதிவை இங்கே copy/paste செய்கிறேன்.
______________________________________________
1. அமேசானில் உங்களுக்கு என்று ஒரு கணக்கை ஆரம்பித்துக் கொள்ளுங்கள் .
2. கிண்டில் ஆப்பை உங்கள் போனிலோ , டேப்லெட்டிலோ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கிண்டில் அன்லிமிடட் என்பது லைப்ரரியை போன்றது .
4. நீங்கள் மாத சந்தா செலுத்தி் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துவிட்டு ரிட்டன் கொடுப்பீர்களே அது போலத்தான் இதுவும் .
5. இங்கே ஒரு மாதம் , ஆறு மாதம் , ஒரு வருடம் என சந்தாக்கள் உண்டு .
ஒரு மாதம் - 199 ரு
ஆறு மாதம் - 999 ரு
ஒரு வருடம் - 1799 ரு.

6. உங்கள் தேவைக்கேற்ற ப்ளானை தேர்ந்தெடுத்து உங்கள் கார்டின் மூலமாகவோ , இன்டர்நெட் பேங்கின் மூலமாகவோ பணத்தை செலுத்துங்கள்.
7. முதன் முதலாக கணக்கு ஆரம்பிப்பவர்களுக்கு 169 ரு என்ற ஆபர் உண்டு .
8. உங்களது அபிமான நாவலை க்ளிக் செய்து ரீட் நவ் ( read now ) என அழுத்தினால் இரண்டே நிமிடங்களில் நாவல் உங்கள் போனில் டவுன்லோட் ஆகிவிடும் .
9. நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம் .இடையில் விட்டுப் போனீர்களென்றாலும் நாவல் அதே பக்கத்தில் உங்களுக்காக காத்திருக்கும் .பிறகு நீங்கள் தொடரலாம் .
10. ஒரே நேரத்தில் பத்து நாவல்களை நீங்கள் இது போல் டவுன்லோட் செய்து உங்கள் கிண்டில் லைப்ர்ரியில் வைத்துக் கொள்ளலாம்.
11. பதினொன்றாவதை டவுன்லோட் செய்யும் போது ஒரு புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாக வேண்டும் .
12. இந்த பத்து புத்தகங்களை வாசித்து முடிக்க உங்களுக்கு பதினைந்து நாட்கள் டைம் .பிறகு புத்தகங்கள் தானே ரிட்டர்ன் ஆகிவிடும் .
13. இப்படி அல்லாமல் புத்தகங்களை சொந்தமாக தங்கள் போனில் எப்போதும் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் , பை நவ்( buy now )ஆப்சனை அழுத்தி புத்தகத்திற்கான விலையை உங்கள் கார்டு மூலம் செலுத்திவிட்டால் நீங்கள் விரும்பும் புத்தகங்கள் நினைக்கும் போதெல்லாம் படிக்க தோதாக உங்கள் போனிலேயே இருக்கும் .
_________________________________________________
அன்புடன்,
S. ஹமீதா.