Monday, January 28, 2019

மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா - மின்னூல் வடிவம்







வணக்கம் நட்புகளே!

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் வாசகர்களின் தொடர் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு,  'மறப்பேன் என்றே நினைத்தயோ!' அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனும் தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்களின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் என்றென்றும் எனது அன்பும் நன்றிகளும்!

அன்புடன்,
S. ஹமீதா.

https://www.amazon.in/dp/B07N47WKPS?fbclid=IwAR2iGu0BR0uDqerrT0t8pWu2isfIsD5iLabGhqvlABAhJt8y-EDDFevQ9n4

Friday, January 4, 2019

42வது சென்னை புத்தகக் கண்காட்சி


 தோழமைகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
04.01.2019 - 20.01.2019 வரை, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நிகழவிருக்கும் 42வது சென்னை புத்தகக் கண்காட்சியில், எஸ்.எஸ் பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட அரங்கங்களில் கிடைக்கப்பெறும் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்!
ப்ரியா நிலையம் ஸ்டால் எண் - 74
அருண் பதிப்பகம் ஸ்டால் எண் - 545
வி கேன் ஷாப்பிங் ஸ்டால் எண் - 164
எஸ்.எஸ் பதிப்பகத்தின் புத்தம் புதிய வெளியீடு...
'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'
எமது அனைத்து வெளியீடுகளுக்கும் வாசகர்கள் தொடர்ந்து நல்கி வரும் நல்லாதரவு, இன்று போல என்றும் தொடர்ந்திடும் என்ற நம்பிக்கையுடன், தங்கள் நல்வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்!
இனிமையான வாசிப்பு, அனைவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை நிறைக்க எஸ்.எஸ் பதிப்பகத்தின் நல்வாழ்த்துகள்!
அன்புடன்,
S.ஹமீதா
எஸ்.எஸ் பப்ளிகேஷன்ஸ்.













முன்னோட்டம் - 3



முன்னோட்டம் 1 மற்றும் 2-ஐ வாசித்த பலரும், 'யமுனா பாவம்' என்று பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். உள்பெட்டிக்கு வந்த தோழிகள் பலரும் அவ்வாறே கருத்துத் தெரிவித்தீர்கள்!
குட்டியாக இரண்டு சாம்பிள் காட்சிகளைப் பதிவிட்டிருக்கிறேன்!
யமுனா நிஜாமாகவே பாவம் தானா?
வாசித்துச் சொல்லுங்கள் நட்புகளே!
'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'
முன்னோட்டம் - 3
============================================
“எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?”
“வாட்?”
“ஒரு பொண்ணுக்கு வசதியான இடத்துல வாழ்க்கை அமையுதுன்னா, அதைக் கெடுக்க நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் செய்வாங்கன்னு நான் கேள்விப் பட்டிருக்கேன். அதை இப்பத்தான் நேர்ல பார்க்கிறேன்!”
அவள் சொல்லச் சொல்ல, அவன் அவளை நம்ப முடியா பார்வை பார்த்தான்.
“என்ன? தண்ணியடிக்கிறான்... பொண்ணுங்க கூட சுத்துறான்னு ஏதாவது சொல்லுவ! இந்தக் காலத்துல தண்ணியடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பணக்காரப் பையன்னா தம்மு தண்ணி பொண்ணுங்க எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் உன்னை மாதிரியே பழமா இருக்க முடியுமா? வசதி வந்துட்டா நீயும் இப்படிப் பழமா இருக்க மாட்ட! அப்புறம்... ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்... நான் ஒண்ணும் உன்னளவு சாதாரணக் குடும்பம் கிடையாது. எங்கப்பா ஒரு பெரிய லெதர் கம்பெனில நல்ல போஸ்ட்ல இருக்கார்!”
அவனுடைய தோற்றத்தை மிக ஏளனமாக மேலும் கீழுமாகப் பார்த்தபடி அவள் சொல்ல, கேட்டிருந்த ஜீவா திகைத்துப் போனான்.
****
“அவங்க பொண்ணு பார்க்க வர்றப்போ நான் எந்தப் புடவை கட்டிக்கிறது? எங்கிட்ட இருக்கிறதெல்லாம் விலை குறைவான ஃபேன்சி புடவை. ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன்ஸுக்கு வேணும்னா கட்டிக்கலாம்!” என்று தொடங்கினாள்.
“இது என்னடீ அநியாயமா இருக்கு உன்னோட? பொண்ணு பார்க்கிறதுக்கே புதுப் பட்டுப்புடவை வாங்குறதுக்கு நாம எங்கே போறது?” - வெகுண்டு விட்டார் சிவகாமி.
“ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன், பொறந்தநாளு, ஃப்ரெண்ட்ஸ் வீட்ல விசேஷம்னு போகணும்னா புது ட்ரெஸ் கேட்டு அடம் பிடிப்ப. அப்பாவோட தோள்ல சாஞ்சுட்டு செல்லம் கொஞ்சியே சாதிப்ப. கேட்குறதுலயும் ஒரு நியாயம் வேணாமாடீ! நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க... இன்னைக்கு பட்டுப்புடவை கேட்கிற!” ஆற்றாமை தாளாமல் ‘பிலுபிலு’வென்று பிடித்துக் கொண்டார் சிவகாமி.
“ஏன்மா! நான் என்ன அந்த ‘நீயா நானா’ல வந்த பொண்ணுங்க மாதிரி அம்பது பவுன் போடுங்க எண்பது பவுன் போடுங்க, அஞ்சு லட்ச ரூபா ஏஸி ஹால் புக் பண்ணுங்க... ஹெலிகாப்டர்ல வந்து மணவறையில இறங்குறேன்னா சொன்னேன்? சிம்பிளா ஒரு பட்டுப்புடவை... அதுக்குப் போய் இந்தக் குதி குதிக்கிறீங்க! சொல்லப்போனா நீங்க எல்லோரும் என்னைப் பாராட்டணும். அப்பாவுக்கு செலவு வைக்காம, அதே சமயத்துல கண்ட கழிசடையை லவ் பண்ணி மானத்தை வாங்காம, உங்க மரியாதையைக் காப்பாத்திக் குடுத்திருக்கேன். அது புரியல உங்களுக்கு!” என்று பதிலுக்கு எகிறினாள் யமுனா.
==============================================
அன்புடன்,
S.ஹமீதா.

முன்னோட்டம் - 2




மறப்பேன் என்றே நினைத்தயோ! - ஹமீதா
முன்னோட்டம் - 2
===========================================
இருவரும் கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக் பகுதியில், ஒருவர் மேல் மற்றவர் இழைந்தபடி நடந்து கொண்டிருந்தனர். யமுனா மிக அழகாக மாம்பழ வண்ண கிரேப் சில்க் புடவை அணிந்திருந்தாள். அடித்துக் கொண்டிருந்த இளம் வெயில், மிக மிக இதமாக இருக்க, எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துவந்திருந்த பச்சை வண்ணச் சால்வை, அவளது தோளின் ஒரு புறமாகச் சரிந்திருந்தது. சுடச்சுட கையில் பிடித்திருந்த வேகவைத்த மசாலா கடலைப் பொட்டலத்திலிருந்தது கடலையை எடுத்து, ஊதி ஊதி வாயில் போட்டுக் கொண்டிருந்தாள்.
“அங்கே உட்காரலாமா?”
பேசியபடி பாறையோரமாக அமர்ந்து கொண்டனர்.
“நானே சாப்ட்டுட்டு இருக்கேன்! இந்தாங்க உங்களுக்குக் கொஞ்சம்!”
சிறிது கடலையை ஊதி, அவனுடைய வாயில் போடப் போனாள்.
“ரோட் சைட்ல விற்கிற ஐட்டமெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்!” சொல்லியபடி அவள் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், அவளது கையைத் தட்டிவிட்டான் கிஷோர்.
“ஓஹ் சாரி!”
அவளது உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன. ஆசையாய் உண்ட சுவையான மசாலா கடலை, நொடியில் வேப்பங்காயாய் கசந்து தொண்டை வழியே இறங்கியது. அவனுடன் மனசு விட்டுப் பேசும் தன்னுடைய முயற்சிகள் எல்லாம் இதுபோலக் கசப்பாகவே முடிவது, அவளுக்கு ஒரு வித நெருடலைத் தோற்றுவித்தது.
‘இது ரொம்ப சின்ன விஷயம்! இதுக்கெல்லாம் அசரக் கூடாது!’ அவள் சுதாரித்துக் கொண்டு கையிலிருந்த கடலைப் பொட்டலத்தை பள்ளத்தாக்கில் விட்டெறிந்தாள்.
“ஓஹ்! உங்களுக்குப் பிடிக்காதா? அப்ப இனிமே எனக்கும் பிடிக்காது. உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க... நானும் இனிமே அதை ஒதுக்கிடுவேன்!”
கணவனை நோக்கி உளப்பூர்வமாகச் சொன்னாள் யமுனா.
“அப்படியா!” என்று ஆச்சர்யம் போலக் கேட்டவன், “சொல்றேன் கேட்டுக்கோ!” என்றுவிட்டு, தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.
“நான் கூப்பிடும்போது மட்டும் வரணும்! பெர்மிஷன் கேட்காம ரூமுக்குள்ள வரக்கூடாது! அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! ‘தொண தொண’ன்னு பேசக் கூடாது! இங்கே கூட்டிட்டு போ அங்கே கூட்டிட்டு போன்னு இன்னைக்கு நச்சின மாதிரி நச்சக் கூடாது! முக்கியமா என்னோட ஃபோன் லேப்டாப் இதெல்லாம் தொட்டா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!” என்று பட்டியலிட்டான்.
“அப்புறம்... நீ இப்படி ஒல்லியா இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை... உங்கக்கா, உங்கம்மா மாதிரி நல்லா 'தள தள'ன்னு இருக்கா! உனக்கும் உங்கம்மா தானே சாப்பாடு போட்டு வளர்த்தாங்க! அப்புறம், நீ மட்டும் ஏன் இப்படி பஞ்சத்துல அடிபட்டவ மாதிரி இருக்க?” என்றவன், “அதோ அங்கே வர்றாங்க பாரு ஒரு ஆன்ட்டி... அந்த மாதிரி... அப்படிக் கொஞ்சம் பூசின மாதிரி...” என்று சொல்ல, அவன் கண்களைக் காட்டிய திசையில் பார்த்தாள்.
அங்கே சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க வட இந்தியப் பெண்மணி, ஒரு சிறுமியைக் கையில் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்.
யமுனாவைப் போலவே இளம் வெயிலை அனுபவிக்கும் பொருட்டு, சால்வையை மடித்துக் கைவளைவில் போட்டிருந்தார். புடவை தான் அணிந்திருந்தார். ஆனால், அதை அணிந்திருந்த விதம் அவரது உடலழகை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
“அந்த மாதிரி இருந்தா செம கிக்கா இருக்கும்!”
மிக ரசனையாகச் சொன்னான் கிஷோர்.
தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் பொருட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் யமுனா. அதே வேளையில் அப்பெண்மணி இவர்களைக் கடந்து செல்ல, அவருடைய இடப்புறப் பக்கவாட்டுத் தோற்றத்தை ஜூம் செய்து கிளிக்கினான் கிஷோர்.
=============================================
முன்னோட்டம் - 2, உங்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்!
இக்கதைக்களம் எதைப் பற்றியது என்ற சிறு அனுமானம்... எதிர்ப்பார்ப்பு... உங்களுக்குள் தோன்றியிருக்கக் கூடுமென்று எண்ணுகிறேன்!

அன்புடன்,
S. ஹமீதா.

'மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா'




வணக்கம் நட்புகளே!
"மறப்பேன் என்றே நினைத்தாயோ! - ஹமீதா"
42 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில், உங்களுடைய உணர்வுகளுடன் நேரடி உரையாடல் நிகழ்த்தக் காத்திருக்கிறது!
ஸ்டால் விவரங்கள் அடுத்த டீஸரில்...
#முன்னோட்டம் - 1
============================================
பெற்றோரிடம் பேசி விட்டதில் உண்மையில் மிக ஆசுவாசமாக இருந்தது. 'அப்பா இருக்கேன் மா!' என்ற தந்தையின் ஆத்மார்த்தமான அன்பு வார்த்தைகள், யானை பலம் தந்தன.
அதற்குள் ஜீவன் லைனில் வந்தான்.
"யமுனா..." என்றான்.
"சொல்லு ஜீவன்! உங்க மாமா கால் பண்ணியிருக்கார். நான் இன்னும் பேசலை! என்ன பேசட்டும்? குழப்பமா இருக்கு ஜீவன்!" என்றாள்.
"குழம்பறதுக்கு ஒண்ணும் இல்ல யமுனா! முன் வெச்ச காலை பின் வைக்க முடியாது. சோ, வி ஹேவ் டு கோ அபவுட் இட்!" என்றவன், "இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பி வரேன். அதுக்குள்ள நீ உன்கிட்ட இருக்கிற எவிடென்ஸ் எல்லாம் அனுஷா கிட்ட சொல்லி பிரிண்ட் அவுட் எடுக்கச் சொல்லு. கமிஷ்னர் ஆபிஸ்ல போய் ஹார்ட் காப்பி எவிடென்ஸ் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு வந்துடலாம்." என்றான்.
"சரி!"
"அப்புறம் கிஷோரை ரிமாண்ட் பண்ணிட்டாங்க. ஒரு செக்ஷன் நான்-பெய்லபிள்! ஒண்ணும் பண்ண முடியல!" என்றான் மெல்ல.
அவள் பதில் பேசாமல் மெளனமாக இருந்தாள்.
"ஃபீல் பண்றயா யமுனா?" அவளின் அமைதி அவனை அவ்வாறு கேட்க வைத்தது.
"நோ நோ... இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு இதைப் பண்ணித்தான் ஆகணும் ஜீவன்." என்றாள் வேகமாக.
"இப்போதைக்கு மாமாவோட பேச வேண்டாம் யமுனா! ரொம்ப பேட் ஸ்டேட் ஆப் மைண்ட்ல இருக்கார்!" என்று அவன் சொல்ல ‘சரி’ என்று கேட்டுக் கொண்டாள்.
“யமுனா!”
“ம்ம்!”
இப்போது அவள் ஜன்னலருகே வந்து நின்றிருந்தாள். ஜன்னல் கிழக்கைப் பார்த்தபடி அமைந்திருந்ததால் இளம் வெயில் இதமாய் மேனியை வருடியது. முகத்தில் பட்ட கதிரவனின் ஒளிக்கீற்று அவளுள் ஏதோ ஒருவகை நம்பிக்கையின் கீற்றையும் சேர்த்தே தோற்றுவித்தது.
“இன்செக்யூர்டா ஃபீல் பண்ணாதே ப்ளீஸ்!" என்றவன் மெலிதாகத் தயங்கினான்.
"நான்… நான் இருக்கேன்! அப்படியெல்லாம் உன்னை அந்தரத்துல விட்டுட்டுப் போக மாட்டேன்!” என்றான் தழைந்த குரலில்.
குரல் தழைந்திருந்தாலும் அதிலிருந்த உறுதியும் நேர்மையும் அவளை அசைத்துப் பார்த்தன.
ஜன்னலின் கம்பிகளைப் பற்றியபடி ஒரு கணம் கண்மூடி நின்றாள் யமுனா. வாழ்வின் எல்லை வரையிலும், இந்த உணர்வு மிகுந்த குரலும், அது தரும் நினைவுகளும், பாதுகாப்புணர்வும், உடன் வரும் என்பது அவளுக்குப் புரிந்தது.
‘இது போதும்!’ என்றிருந்தது.
“தெரியும் ஜீவன்! சில விஷயங்கள் நீ எனக்குச் சொல்லணும்னு அவசியமில்லை. ஐ நோ!” என்றாள்.
அவன் மீதான அவளது நம்பிக்கையில் அவன் மறுமுனையில் திகைத்திருப்பது அவளுக்குப் புரிந்தது.
“சீக்கிரமா கிளம்பி வா!” என்று வழக்கம் போல அவள் மிடுக்காக உரைக்க, அவன் புன்னகையுடன் இணைப்பைத் துண்டித்தான்.
===============================================
உங்கள் அனைவரின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...
அன்புடன்,
S. ஹமீதா.