சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் மிக அதிக
அளவிலான நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளைப் பெற்ற இத்திரைப்படத்தின் மீதான
என்னுடைய பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.
பள்ளிப்பருவக் காதல் – இதைக் கேட்டால்
கட்டையைத் தூக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பதை, இவ்விமர்சனத்தை
வாசிப்பவர்களுக்கு முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் படித்ததெல்லாம் பெண்களுக்கு மட்டுமேயான
பள்ளியில்; கல்லூரிப் படிப்பும் அவ்விதமே! லாடம் கட்டிய குதிரை போல கவனம் சிதறாமல்
படித்து முடித்து, பெற்றோர் பார்த்து வைத்த திருமண பந்தத்தில் இணைந்ததில் எனக்கு
இன்று வரை தலை கொள்ளா பெருமை உண்டு. இந்தப் படத்தைப் பார்த்த பிறகும்
அப்பெருமையில் எள்ளளவும் சேதாரம் இல்லை. இப்போதும் நான் பள்ளிப்பருவக் காதலுக்கு
எதிரானவள் தான். நம்புங்கள்!
காதல் – இவ்வுணர்வின் தாக்கம் என்பது நபருக்கு
நபர் வித்தியாசப்படும்; அவரவரின் எமோஷனல் லெவல்ஸ் இதில் பெரும்பங்கு வகிக்கும்
என்று எண்ணுகிறேன்.
பொதுவாக, பெரும்பாலான பள்ளிப்பருவக் காதல்கள்
தோல்வியில் முடிவதாகவே நான் அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் அனைவருமே அதே இடத்தில் தேங்கி
நின்றுவிடாமல், ஒரு சில மாதங்களில் அல்லது வருடங்களில் அவ்வுணர்வுகளை வென்று
கடந்து விடுவர். They just move forward; and they have to do so!
மிகச்சிலருக்கு இது போன்ற இனிமைகள்
அவர்களுக்குள்ளே உன்னதக் காவியங்களாக நிலைத்துப் போவதும் உண்டு.
அவ்வாறான உன்னத நினைவுகளைச் சுமந்தலைபவனைப் பற்றிய கதை இது. கடந்து செல்ல முயன்று, தனது
முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டதாக நிம்மதி கொண்டிருந்த ஒரு பெண்ணின்
உணர்வுக் குவியல் இது.
விஜய் சேதுபதி – கே. ராமச்சந்திரன்
பாத்திரத்திற்கு கனகச்சிதம். (இங்கே ‘கன’ என்ற பதத்தை விஜய் சேதுபதி கவனத்தில்
கொள்க...)
திரிஷா – ஜானகிதேவி பாத்திரத்திற்கு பேரழகு
சேர்த்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. உணர்வுகளின் வெளிப்பாடு... மிக
மென்மையாய் மனம் வருடிச் செல்கிறது.
பலருக்கும் இத்திரைப்படம் கலவையான உணர்வுகளைக்
கிளறிச் சென்றதில் வியப்பேதுமில்லை! காரணம் – ஆங்காங்கே நமது மனத்தை மீட்டும்
இளையராஜாவின் மெலடிகளின் பூந்தூறல். Evergreen and refreshing memories!
பள்ளிப்பருவத்தில் நமது வகுப்புகளில், நிச்சயம்
அது போன்ற இனிமையான பாடல்கள் பாடும் ஒரு ஜானகி தேவி இருந்திருப்பார்.
இருவரின் மனங்களும் ஒன்றையொன்று
இருபத்தியிரண்டு வருடங்களாய் தேடிக்கொண்டே இருந்திருக்கின்றன. அதற்கான அடித்தளமான
பள்ளிகால காட்சிகளில் அழுத்தமான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. சாதரணமாக
இருவருக்கும் அந்த வயதில் ஏற்படக்கூடிய இனம்புரியாத ஈர்ப்பு மட்டுமே
காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வயதில் ஏற்படக்கூடிய ஈர்ப்பிற்கு அழுத்தமான
காரணங்கள் ஏதும் அவசியமில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
படம் துவங்கிய முதல் அரைமணி நேரத்தில் தோன்றிய
இதுபோன்ற கலவையான எண்ணங்களைத் தாண்டி, பலவருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக்
கொள்ளும் அந்த நொடியில், கதையில் நம்மையுமறியாமல் ஒன்றத் துவங்குகிறோம்.
எவர் முன்னிலையிலும் ஜானுவுடன் பேசவும்
தயங்கும் ராம், யாருமற்ற தனிமையில் அவளுடன் கழிக்கும் அந்த ஓரிரவின் ஒவ்வொரு
நொடியும், ஒவ்வொரு வகையான இனிமையை நம்முள் கடத்துகிறது. இனிமையை மட்டுமல்ல – தவறாக
எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற ஆரம்பநிலை பதைபதைப்பையும், நிச்சயம் அது போன்ற
தவறான முன்னுதாரணமாக இருவரும் இருக்க வாய்ப்பேயில்லை என்பது போன்ற அவர்களின்
உடல்மொழிகளையும் சேர்த்தே கடத்தியது இயக்குனரின் சாமர்த்தியம் என்பேன்.
இருபக்கமும் கூர்முனைகளைக் கொண்ட கத்தியின்
மீது நடக்கும் கதைக்களத்தை மிக லாவகமாகக் கையாண்ட இயக்குனருக்கு ஒரு சபாஷ்! Kudos to Director
Premkumar!
முதல் முதலாக அவளிடம் மனம் விட்டுப் பேசும்
ராம் – புடவையில் முதல் முதலாக அவளைப் பார்த்த காட்சியை விவரித்த விதம் – அடி தூள்
(அங்கே நிற்கிறார் விஜய் சேதுபதி)
தன்னை மனதினுள் வைத்துக் கொண்டாடிய - தான் விரும்பிய ஆண்மகனின்
மொழிகளை, “எங்கே... இன்னொரு தரம் சொல்லு!” என்று சற்றே தாமதமாகக் கொண்டாடி
மகிழ்ந்த பெண்மை...
பள்ளிகாலத்திலிருந்து ராம் அவளிடம் நேயர்
விருப்பமாகக் கேட்டுக் கொண்டிருந்த ‘யமுனையாற்றிலே’ பாடலை, மின்தடை ஏற்பட்டு அவன்
மெழுவர்த்தியையோ டார்சையோ தேடும் நேரத்தில் அவள் பாட, அதைப் பாடிமுடிக்குமுன்
அவளது முகபாவனைகளை அவதானித்து விடும் பரபரப்பில் அவன் விளக்கை அடித்துப்
பிடித்துத் தேடுமிடத்தில், நமது மனமும் சேர்ந்து துடிப்பதும், அந்த மெல்லிய
விளக்கொளியில் அவனது பார்வையின் வாயிலாக நமக்குள் ஏறும் அவளது பாவங்களும் –
கண்களைக் கலங்க வைத்த மென்சோகக் கவிதை.
இப்படிக் கவிதையாய் பல காட்சிகள்!
வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து
சுகித்திருக்க வேண்டிய அனுபவங்களை,
ஓரிரவில் ஒரு துளி மட்டுமே பருகி தாகம் தணிக்க முயன்ற இரு உள்ளங்கள்...
மெட்ரோ ரயிலில் பயணித்து; மழையில் நனைந்து;
கபேயில் காபியருந்தி; அவளுக்கு அவன் தேநீர் தயாரித்து, அவனுக்கு அவள் உணவு
தயாரித்து, இருசக்கர வாகனத்தில் பட்டும் படாமல் பயணிக்கும் பொழுதுகளில் – இருவரின்
முகங்களிலும் கவிந்து கிடக்கும் ஏக்கம் மனம் பிசைகிறது.
விமான நிலையத்தினுள் கார் நுழையும் அந்த
இறுதிக்காட்சியில், அவளது கரத்தின் மீது தனது கரம் வைத்து அவன் கியர் போடும்
காட்சியில், கண்ணீர் வழிய இமைக்கவும் மறந்து பார்த்திருந்தது நிஜம். அவனுடைய
கண்கள் மீது தனது கரத்தை வைத்து அவள் வெடித்து அழும் காட்சியில்... இத்தனை
கனத்திற்கு, இவர்கள் வாழ்வில் ஒன்றிணைந்திருக்கலாமே என்ற ஆதங்கம் கேவலாய்
வெளிப்பட்டதும் நிஜம்.
அவள், மணமாகி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவள் என்பதும்,
அவன் அவள் நினைவாக மணம் புரியாமல் மத்திம வயதை எட்டியிருப்பவன் என்பது போன்ற
நினைவுகள் நம் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இருவரிடையே நிலவும் அன்பும்
ஆராதனையும் மட்டுமே அக்கணத்தில் உச்சம் பெறுகிறது.
இப்படத்திற்கான பல விமர்சனங்களை, பல வகையான
கண்ணோட்டங்களை நான் வாசித்தேன்.
காதல் – இது ஒரு நிகழ்வு. எவரும் வற்புறுத்தி
எவர் மீதும் திணிக்கக் கூடிய விஷயமல்ல காதல். மலரானது இயற்கையாய் இதழ் விரிப்பதைப்
போல இயல்பாய் முகிழ்ப்பதுவே உண்மைக் காதல். அப்படியான காதல் ஒரு பெண்ணின்/ஆணின்
மனதில் கடத்தும் சிலிர்ப்பான உணர்வுகள் அலாதியானவை. அவ்வாறாக முகிழ்த்த காதல்
கைகூடாமல் போகும் பட்சத்தில், எத்தனை நிறைவான வாழ்க்கை அமைந்தாலும், மீண்டும்
அதுபோன்ற சிலிர்ப்பான காதல் உணர்வுகள் தனது வாழ்க்கைத் துணை மீது ஏற்படாமலே
போகக்கூடும் என்பதும் நிதர்சனம். இது brutal reality! இதை துரோகம் என்ற பழிச்சொல்
கொண்டு அளவிடுவது என்னைப் பொறுத்தவரை மிக வன்மையான சொற்பிரயோகம் என்பேன். Love has to happen! அது நிகழவில்லையெனில் அது இயற்கையின் குற்றமே
தவிர பெண்ணின்/ஆணின் குற்றமல்ல!
உண்மைக் காதலுக்கு அழிவில்லை. இயற்கையாய்
முகிழ்த்த அவ்வகையான உணர்வுகளுக்கு மரணமில்லை. அவை, முகிழ்த்த மனங்களில்
அடியாழத்தில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். இவை மேலோட்டமாக
அல்லாமல் சற்றே ஆழமாக உளவியல் ரீதியிலான பார்வையுடன் நோக்க வேண்டியவை.
Friendship may and
often grows into love;
But love never subsides
into friendship.
என்று எப்போதோ படித்த ஒரு quote ஞாபகம்
வருகிறது.
இங்கு ராம்-ஜானகி இருவரும் தங்கள் உணர்வுகளை
எந்தப் பொய்மையுமின்றி நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டதாகவே நான் கருதுகிறேன்.
அதையும் கண்ணியமான ஒரு கோட்டிற்குள் நின்றே வெளிப்படுத்துகின்றனர்.
மலரும் அனைத்துக் காதல்களும் திருமண உறவில் முடிவதில்லை.
தனக்குக் கிடைக்காத பெண் எவருக்கும் கிடைக்கக் கூடாது எனும் எண்ணத்தில், காதலித்த
பெண்ணைக் கொலை செய்யும் கொடூர ஆண்களை இப்போது அதிகமதிகம் காண்கிறோம். தான், தன்
சுகம் என்று குறுகிய சுயநலக் கண்ணோட்டத்தில், பெற்ற பிள்ளைகளையும் குடும்ப
உறவுகளையும் எண்ணிப் பார்க்காமல் வழிதவறும் பெண்களையும் பார்க்கிறோம்.
கொண்ட காதல் கைகூடா விட்டாலும், அதைப்
புனிதப்படுத்துவதும் போற்றிக் கொள்வதும் மட்டுமே அந்தக் காதலுக்குச் செய்யப்படும்
மரியாதையாகிறது. நிறைவேறா காதலையும் போற்றிக்கொள்ளும் ஒரு அறிவுறுத்தலாகவே நான்
இப்படத்தைக் காண்கிறேன்.
அவளுடைய திருமண வாழ்வு சிறக்க வேண்டும் என்று,
அவளுடைய மாங்கல்யத்தை அவன் கும்பிட்டுக் கொள்வதும், அவன் இன்னமும் மணம் புரிந்து
கொள்ளாமல் தனித்திருக்கிறான் என்பதறிந்து அவள் பதைபதைத்துப் போவதும், ஒருவர் மீதான
மற்றவரின் அக்கறையின் வெளிப்பாடுகள்.
இவை அனைத்தையும் தாண்டி ஒரு சில காட்சிகள் மிக
மிக நெருடல் – என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு நெருடல் – கபேயில் அவனுடைய
மாணவிகள் மத்தியில், அவள் அவனுடைய மனைவியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட, அதை
இருவருமே மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுமிடம்.
அவனுடைய வீட்டில், அவனையும் அவள் கட்டிலிலேயே
படுத்துக்கொள்ளச் சொல்லுமிடம். (இதை டைப் செய்கையில் என்னுடைய விரல்கள் ஒருவித
அசூயையில் கூசியது நிஜம்)
மற்றொரு இடத்தில், அவன் திருமணமின்றி தனித்திருக்கிறான்
என்பதே அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விளக்கப் போதுமானதாக இருக்க, அது குறித்து
அவள் ஆச்சர்யத்துடன் எழுப்பும் கேள்வி...
இருபத்தியிரண்டு ஆண்டுகள் கழித்து சந்திக்கும்
தோழிகள், இப்போதும் அண்ணியாரே நாத்தனாரே என்று பேசிக்கொண்ட காட்சி...
இது போன்ற சில காட்சிகள் இப்படத்தில் நிச்சயம்
தவிர்த்திருக்கப் பட வேண்டியவை!
இவை தவிர்த்து, கொண்ட காதலுக்கு ராம் துணிந்து
போராட வில்லை – திருமணமான பெண் ஜானகி, பழைய காதலனுடன் இரவில் தனியே ஊர்
சுற்றுகிறாள் என்பது போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள்.
ராம் – நாம் கதைகளில் சினிமாக்களில் பார்க்கும்
ஹீரோ அல்ல! அவன் எதார்த்த நாயகன். எதார்த்த வாழ்வில் காதலைத் தாண்டிய பல
பிரச்சனைகள் உண்டு. இயல்பில் சற்று கூச்ச சுபாவியான ராம், இயல்பான தாழ்வு
மனப்பான்மைகள் கொண்ட கல்லூரிப் பருவ
முதிர்ச்சியற்ற ராம் – என்று அவனுடைய கதாப்பாத்திரம் தெளிவாக
சித்தரிக்கப்பட்டுள்ளது.
“நீ விட்டுட்டு போன அதே இடத்துல தான் இன்னும்
இருக்கேன்” என்ற ராமின் டயலாக், அவனுடைய மனவோட்டத்தை வெளிப்படுத்தி விட, தன் மீது
அன்பு கொண்டு அந்த அன்பை மனதினுள் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆண்மகனின்
மீதான அவளது நம்பிக்கை தான், அவள் அவனுடன் செலவு செய்யும் நேரம். தன்னுடைய
கண்ணியத்திற்கு அவனால் சிறு பாதிப்பும் நேர்ந்து விடாது என்ற நம்பிக்கையை அவளில் விதைத்த
ராம் கதாப்பாத்திரத்தின் உயர்வு மட்டுமே, அவள் அவனுடன் செலவு செய்யும் நேரத்தில்
எனக்குத் தெரிகிறது. என்றாலும், நிச்சயமாக இயல்பு வாழ்க்கையில் இவ்விஷயம்
சாத்தியமேயில்லை.
உண்மைக் காதல்கள் அருகிவிட்ட சூழ்நிலையில்,
சரி-தவறு என்பவை நிமிடத்துக்கு நிமிடம், நபருக்கு நபர் மாறுபடும் இன்றைய
காலகட்டத்தில், இது போன்ற ஆழமான நேசங்கள் புரிந்து
கொள்ளப்படாமல் போவதிலும், எதிர்மறையான விமர்சனங்களைப் பெறுவதிலும் எனக்கு பெரிய
ஆச்சர்யங்கள் ஏதுமில்லை!
’96 – கள்ளக்காதல் யுகத்தில், அத்தி பூத்தாற்போலத்
தோன்றிய கள்ளமில்லா நல்ல காதல் கதை! திறந்த மனத்துடன், அன்பு என்ற அளவுகோல் கொண்டு
நோக்கினால், உணர்வுகளைப் புரட்டிப் போடும் அளவிலான அருமையான திரைப்படம்!
பி.கு: ‘இதற்குப் பிறகு என்ன நடக்கும்?’ என்ற
கேள்வியும் ஒரு சிலரால் முன்வைக்கப் படுகிறது.
ராம், அவள் சொன்னதற்காக திருமணம் செய்து
கொள்வான். அல்லது, அவளது நினைவுகளுடன் தனித்தே இருப்பானேயொழிய, அவளது வாழ்வில் ஒரு
போதும் குறுக்கிட மாட்டான். ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவளும் ஒருபோதும் பாதை மாற
மாட்டாள். நாம் நேசித்த அளவே நேசிக்கப்பட்டோம் என்ற புரிதலைத் தந்த அந்த ஓரிரவின்
நிகழ்வுகளே அந்த அன்பு மனங்களை அமைதியடையச் செய்து விடும் என்பதே என்னுடைய
கணிப்பு.
பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
Nice review akka
ReplyDeleteThank you dear!
DeleteExcellent review ji....chance e illa.crystal clear...ithai padichittu padam paarthaa padathai sariya ulvaangipaanganu thonuthu...kavithai ji
ReplyDeleteThank you so much for your wonderful words Sivaranjani!
Deleteawesome review! This has to be sent to the director and the film crew. very neutral. I did not see the movie. But I can completely understand by your review.
ReplyDeleteThank you so much mini. Kindly watch the movie whenever time permits and let me know your thoughts ma. Thanks again.
Delete