Friday, August 31, 2018

வெளிநாட்டுவாழ் வாசகர்களுக்காக...

வாசக நெஞ்சங்களுக்கு,

அன்பு வணக்கம்.

நலம் தானே நட்புகளே!

"உந்தன் அலாதி அன்பினில்" என்ற என்னுடைய புதிய நாவலுக்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெளிநாட்டு வாழ் வாசகிகள் பலரும் உள்பெட்டியிலும் மின்னஞ்சலிலும் ப்ளாகிலும் 'எப்போது கிண்டிலில் பதிவேற்றம் செய்வீர்கள்?' என்று அன்புடன் விசாரித்த வண்ணமிருக்கிறீர்கள்.

எனவே இப்பதிவு எனதன்பு வெளிநாட்டு வாசகர்களுக்கானது.

மிக விரைவில்... இன்னமும் ஓரிரு நாட்களில் amazon.com இல் மட்டும் "உந்தன் அலாதி அன்பினில்..." பதிவேற்றம் செய்யப்படும் எனும் தகவலை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

வாசகர்களின் அன்பும் ஆதரவும் இன்று போல் என்றும் தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா

வாசகி அமிர்தா சேஷாத்ரி அவர்களின் விமர்சனம்

உந்தன் அலாதி அன்பினில் - ஹமிதா

இந்நாவலில் சரக்கு கப்பலில் வேலை செய்யும் ஆட்களையும், அவர்களின் வேலை, சந்திக்கும் இன்னல்கள், அதனால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஆங்கில நாவலாசிரியர் ஆர்தர் ஹெய்லின் ஏர்போர்ட், ஹோட்டேல் போன்றவற்றை படித்தால் கிட்டத்தட்ட அத்துறை பற்றிய விஷயங்களை 80% தெரிந்து கொள்ளலாம். இதில் சரக்கு கப்பலின் செயல்பாடுகள்.

ஒரு சில ஆங்கில நாவலாசிரியர்கள் கடந்த காலம், நிகழ் காலம் என மாறி மாறி பயணித்து ஒரு இடத்தில் கதை நேர் கோர்வையாக வரும். அதே பாணி இங்கும்.

நாயகன் தமிழ் கோமாவில் இருக்கும்போது அவனின் ஆழ்மன எண்ணங்களையும், நடப்பு கதையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து வருகிறது.

ஆனால் இதில் அசோக்கின் மன அழுத்தம், அவனின் முடிவு பற்றி முதலில் வருகிறது. பின்னர் ஆயில் நிரப்பும் இடத்தில் அவரின் பணிகள் பற்றி வரும். அதே போல் தான் யுஜின் பற்றியும். ஒரு வேளை ஆழ்மனத்தின் நினவுகள் என்பதால் முன்னுக்கு பின் முரணாக வருகிறதோ? மற்றபடி இரண்டு நிலைகளும் அழகாக வந்து ஒரு மையத்தில் இணைகிறது

ஐஸ்வர்யா, கீர்த்தி, மதுரா இவர்களின் நட்பில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டு கொடுக்கும் மனப்பாங்கு.

ஐஸ்வரியா- கொஞ்சம் சுயநலம் இருந்தாலும், பொறாமை குணம் சிறிதும் இல்லாத பெண். தமிழை மதுராவிற்கு விட்டு கொடுக்கும் இடம், தமிழ் கோமாவில் இருக்கும்போது மதுராவை அவள் செலவில் அவனை பார்க்க அழைத்து செல்லும் இடம் , டமில் 😀😀😀 அனைத்தும் அருமை
கீர்த்தி- ஐஸ், மது. இருவரையும் புரிந்து அந்த நட்பை பாலன்ஸ் செய்யும் அழகு

ஷோபா- தமிழின் தங்கை. அந்த பருவத்திற்கே வரும் ஈர்ப்பையும் ,தடுமாற்றங்களை மதுராவின் வழிகாட்டுதலில் அவற்றை கடந்து வருவது.
தமிழ்/டமிழ்-- பார்த்தவுடன் ஐஸ்வர்யா விடம் கவிழ்ந்தாலும், பழகியபின் மதுராவின் குணத்தால், பேச்சாலும் ஈர்க்கப்படுகிறான். அதே சமயம் ஐஸ்வர்யா வின் மனம் புண்படாமல் தான் வேறு பெண்ணை (மது) காதலிப்பதையும். திருமணத்தை தவிர்ப்பதும், அப்பா,அம்மா கவனிக்க தவறியதை ஒரு அண்ணனாக ஷோபாவை தன் அன்பாலும், கண்டிப்பாலும், மது,கீர்த்தி இவர்களின் உதவியால் அவளை நல்வழிப்படுத்துவதும் என எல்லாமே அழகுதான்

மதுரா- தமிழின் பால் ஈர்க்கப்பட்டாலும், ஐஸ்வர்யாவிற்கு பேசி முடித்து இருப்பதால், தன் மனதை மறைத்து அவளை பற்றி நல்லவைகள மட்டுமே தமிழிடம் பேசும் பெண். பின் தமிழின் மனம் அறிந்த பின் அவனின் துறையை நன்கு புரிந்து அவனுக்கு துணை நிற்பதும்,

இக்கட்டான தருணத்தில் தமிழ் சொன்னதை 'A Queen should always hold her head high, and a sailor wife is called Queen'  என்பதை நினைவில் அடுத்து நடக்க இருப்பதை எதிர்கொள்ளும் பாங்கு.

மொத்தத்தில் நல்ல கதை.

வாழ்த்துகள் ஷாஹி.

தோழி ஊர்மிளா ராஜசேகர் அவர்களின் விமர்சனம்

உந்தன் அலாதி அன்பினில்...

அருமை , அற்புதம் , அட்டகாசம் ...
என்ன சொல்ல , எப்படி சொல்லன்னே எனக்கு வார்த்தை வரலை . தமிழும் , மதுவும் மனசுக்குள்ளயே ரங்கராட்டினம் சுத்துறாங்க .... 😍😍😍😍😍😍

எப்படி உங்க கதையில் எல்லாரும் நல்லவங்களாவே இருக்காங்க . ( உங்க கதை மூணுதான் படிச்சிருக்கேன் .
பேசும் மொழியிலெல்லாம் , நிழல்போலவே நின்றாய்
உந்தன் அலாதி அன்பினில் ... ) இப்படி எழுதுறது உண்மையில் பெரிய விஷயம் அது உங்களுக்கு இயல்பா வருது . வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝

தமிழ்ச்செல்வன் .... செம ஹீரோ ....

இயல்பான குணாதிசயங்கள் கொண்ட ஹீரோ . அம்மா & அப்பாவை புரிஞ்சுக்கிட்டு அவங்களை மதிச்சு , தட்டி கேட்கவேண்டிய இடத்தில் அதை தயங்காமல் செஞ்சு , தங்கச்சியோட இயல்பை புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்தமாதிரி அவள் வழியிலேயே போய் அவளை காப்பாத்துறது , ஐஷீ மேல அந்த பென்சில் டிராயிங் பார்த்து மலைச்சுபோனாலும் ,அவ தன் மனசுக்குள்ள வரலைன்றதை நல்லா புரிஞ்சுக்கிட்டு அவளுக்கும் புரிய வைக்க முயற்சி பண்றது செம ...

மதுவை பார்த்ததிலருந்து ,அவளோட பழகி , அவளை உணர்ந்து , கரைக்டான சமயத்தில் அவளுக்கும் அதை புரியவைக்கிறதும் , அவள் மனசை புரிஞ்சு அவளுக்கு தைரியமூட்டுறதும் , அவளை கொள்ளை கொள்ளையாய் காதலித்து , அவளையும் காதலிக்க வைப்பதும்.... சான்ஸே இல்லை . செம ஹீரோ ♥️♥️♥️♥️♥️

மதுரவள்ளி ....

நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து ,இறுக்காமான குடும்ப பாசத்தில் வளர்ந்து எதையும் ஆய்ந்து அதில் உள்ள பாசிட்டிவ்வான விஷயங்களோடு கலகலப்பாய் வாழும் அழகு ஹீரோயின் . எதையும் ஈஸியாக எடுத்து கொள்வதும் , தன் தன்மானத்தை விட்டுக்குடுக்காமல் இருப்பதும் , நல்ல நட்புக்களை புரிந்துகொண்டு அதற்காக தவிப்பதும் , தன் காதலை ஒரு போராட்டத்தோடே கொண்டாடுவதும் உண்மையில் மதுவைப்போலவே அவளையே சுற்றி வரவைக்கிறாள் .

ஐஷூ , கீர்த்தி , நந்து , சதீஷ் , ஸ்வேதா , ஷோபி எல்லாருமே மனசுக்குள்ளயே நிக்கிறாங்க . ஐஷூ அதுல டாப் . தன் தோழியை சரியா புரிஞ்சுக்கிட்டு அவளை செமயா சீண்டுறது செம ...

கப்பல் பயணம் பத்தி இவ்வளவு விரிவான , புரியும்படியான விளக்கங்கள் உங்கள் உழைப்பை சொல்லுது . ஹாட்ஸ் ஆஃப் டு யூ 🤝🤝🤝🤝🤝

இவ்வளவு அருமையான கப்பல் பயணத்தில் எங்களை ஒரு சிறந்த காதலர்களுடன் பயணிக்கவைத்த உங்களுக்கு எனது அன்பும் மனமார்ந்த வாழ்த்துக்களும் 😘😘😘💐💐💐💐💐

Saturday, August 11, 2018

உந்தன் அலாதி அன்பினில் - ஹமீதா


 'உந்தன் அலாதி அன்பினில்...' - ஹமீதா

அந்நிய தேசத்தில், சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மெரைன் இஞ்சினியர் தமிழ்ச்செல்வன்!

நாயகி மதுராவுடன் முகிழ்க்கும் அலாதி அன்பின் அழகிய தருணங்கள் -ஸ்பெயினின் அல்கேசிராஸ் துறைமுகம் துவங்கி தென்சீனக் கடல் வரையிலுமான, டேங்கர் கப்பல் பயணத்தில் நிகழும், கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் - இயற்கையின் சீற்றங்கள் - தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளென, முன்பின்னாகத் தொடர்ச்சியற்று அவனது ஆழ்மனப் பதிவுகளிலிருந்து  விரியும் காட்சிக் கோர்வைகள்!

அதற்கும் சிலமாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த விடுமுறைக்கால நிகழ்வுகள்!

பதின்பருவத்து மாணவர்களின் இன்றைய சூழலியல் சிக்கல்கள்!

கரையும் கடலுமாக மாறி மாறிப் பயணிக்கும் சுவாரஸ்யமான கதைக்களம்!

“உந்தன் அலாதி அன்பினில்...”

இனிமையான வாசிப்பில் இணைந்து பயணியுங்கள்! 

அன்புடன்,
S. ஹமீதா.