Friday, November 9, 2018

Download All Six Titles From Amazon Kindle Absolutely Free

வணக்கம் நட்புகளே!
எல்லோரும் மிக இனிமையாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!
பண்டிகையை முன்னிட்டு கிண்டிலில் எனது படைப்புகளை முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கொடுக்கப்பட்டிருந்த சலுகையை, பலரும் பயன்படுத்திக் கொண்டது அறிந்து மிக மிக மகிழ்ச்சி.
மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து, உள்பெட்டியில் வந்து தங்களது மேலான கருத்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட வாசகிகள் அனைவரின் அன்பும் என்னை மனம் நெகிழச் செய்தது.
அனைவரின் அன்புக்கும், என்மீதான நன்மதிப்பிற்கும், எனது படைப்புகளின் மீதான உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் இறைவனுக்கு எனது நன்றிகள்!
பலர் இச்சலுகையைப் பயன்படுத்திக்கொண்ட போதிலும், ஒரு சிலர் கிண்டிலை பயன்படுத்தத் தெரியவில்லை என்றும்; ஒரு சிலர் பண்டிகை வேலைகளில் மறந்து விட்டதாகவும்; ஒருசிலர் இலங்கை போன்ற நாடுகளில் தரவிறக்கம் செய்ய முடியவில்லையென்றும் தெரிவித்திருந்தீர்கள்.
ப்ளாகிலும் மின்னஞ்சலிலும் முகநூல் உள்பெட்டியிலும் இது குறித்து விசாரித்த நட்புகள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே பதிலளிக்க முடியவில்லை. மன்னியுங்கள்! அதற்காகவே இந்தத் தனிப் பதிவு!
இந்த வாய்ப்பைத் தவறவிட்ட வாசகர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, இச்சலுகையை மீண்டும் வழங்க உத்தேசித்துள்ளோம்.
நாளை சனிக்கிழமை (10.11.2018) - இந்திய நேரம் பிற்பகல் 1:30 மணி முதல் ஞாயிறு (11.11.2018) பிற்பகல் 1:29 மணி வரை கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள என்னுடைய ஆறு படைப்புகளையும் வாசகர்கள் முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மகிழ்ச்சி தானே நட்புகளே!
கிண்டில் உபயோகப்படுத்தும் முறை குறித்து நண்பர்கள் சிலர் பகிர்ந்திருந்த பதிவை இங்கே copy/paste செய்கிறேன்.
______________________________________________
1. அமேசானில் உங்களுக்கு என்று ஒரு கணக்கை ஆரம்பித்துக் கொள்ளுங்கள் .
2. கிண்டில் ஆப்பை உங்கள் போனிலோ , டேப்லெட்டிலோ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கிண்டில் அன்லிமிடட் என்பது லைப்ரரியை போன்றது .
4. நீங்கள் மாத சந்தா செலுத்தி் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துவிட்டு ரிட்டன் கொடுப்பீர்களே அது போலத்தான் இதுவும் .
5. இங்கே ஒரு மாதம் , ஆறு மாதம் , ஒரு வருடம் என சந்தாக்கள் உண்டு .
ஒரு மாதம் - 199 ரு
ஆறு மாதம் - 999 ரு
ஒரு வருடம் - 1799 ரு.

6. உங்கள் தேவைக்கேற்ற ப்ளானை தேர்ந்தெடுத்து உங்கள் கார்டின் மூலமாகவோ , இன்டர்நெட் பேங்கின் மூலமாகவோ பணத்தை செலுத்துங்கள்.
7. முதன் முதலாக கணக்கு ஆரம்பிப்பவர்களுக்கு 169 ரு என்ற ஆபர் உண்டு .
8. உங்களது அபிமான நாவலை க்ளிக் செய்து ரீட் நவ் ( read now ) என அழுத்தினால் இரண்டே நிமிடங்களில் நாவல் உங்கள் போனில் டவுன்லோட் ஆகிவிடும் .
9. நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம் .இடையில் விட்டுப் போனீர்களென்றாலும் நாவல் அதே பக்கத்தில் உங்களுக்காக காத்திருக்கும் .பிறகு நீங்கள் தொடரலாம் .
10. ஒரே நேரத்தில் பத்து நாவல்களை நீங்கள் இது போல் டவுன்லோட் செய்து உங்கள் கிண்டில் லைப்ர்ரியில் வைத்துக் கொள்ளலாம்.
11. பதினொன்றாவதை டவுன்லோட் செய்யும் போது ஒரு புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாக வேண்டும் .
12. இந்த பத்து புத்தகங்களை வாசித்து முடிக்க உங்களுக்கு பதினைந்து நாட்கள் டைம் .பிறகு புத்தகங்கள் தானே ரிட்டர்ன் ஆகிவிடும் .
13. இப்படி அல்லாமல் புத்தகங்களை சொந்தமாக தங்கள் போனில் எப்போதும் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் , பை நவ்( buy now )ஆப்சனை அழுத்தி புத்தகத்திற்கான விலையை உங்கள் கார்டு மூலம் செலுத்திவிட்டால் நீங்கள் விரும்பும் புத்தகங்கள் நினைக்கும் போதெல்லாம் படிக்க தோதாக உங்கள் போனிலேயே இருக்கும் .
_________________________________________________
அன்புடன்,
S. ஹமீதா.

Wednesday, November 7, 2018

'96 - எனது பார்வையில்



சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் மிக அதிக அளவிலான நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளைப் பெற்ற இத்திரைப்படத்தின் மீதான என்னுடைய பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.

பள்ளிப்பருவக் காதல் – இதைக் கேட்டால் கட்டையைத் தூக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்பதை, இவ்விமர்சனத்தை வாசிப்பவர்களுக்கு முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் படித்ததெல்லாம் பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியில்; கல்லூரிப் படிப்பும் அவ்விதமே! லாடம் கட்டிய குதிரை போல கவனம் சிதறாமல் படித்து முடித்து, பெற்றோர் பார்த்து வைத்த திருமண பந்தத்தில் இணைந்ததில் எனக்கு இன்று வரை தலை கொள்ளா பெருமை உண்டு. இந்தப் படத்தைப் பார்த்த பிறகும் அப்பெருமையில் எள்ளளவும் சேதாரம் இல்லை. இப்போதும் நான் பள்ளிப்பருவக் காதலுக்கு எதிரானவள் தான். நம்புங்கள்!  

காதல் – இவ்வுணர்வின் தாக்கம் என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும்; அவரவரின் எமோஷனல் லெவல்ஸ் இதில் பெரும்பங்கு வகிக்கும் என்று எண்ணுகிறேன்.

பொதுவாக, பெரும்பாலான பள்ளிப்பருவக் காதல்கள் தோல்வியில் முடிவதாகவே நான் அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் அனைவருமே அதே இடத்தில் தேங்கி நின்றுவிடாமல், ஒரு சில மாதங்களில் அல்லது வருடங்களில் அவ்வுணர்வுகளை வென்று கடந்து விடுவர். They just move forward; and they have to do so!

மிகச்சிலருக்கு இது போன்ற இனிமைகள் அவர்களுக்குள்ளே உன்னதக் காவியங்களாக நிலைத்துப் போவதும் உண்டு.

அவ்வாறான உன்னத நினைவுகளைச் சுமந்தலைபவனைப்  பற்றிய கதை இது. கடந்து செல்ல முயன்று, தனது முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டதாக நிம்மதி கொண்டிருந்த ஒரு பெண்ணின் உணர்வுக் குவியல் இது.

விஜய் சேதுபதி – கே. ராமச்சந்திரன் பாத்திரத்திற்கு கனகச்சிதம். (இங்கே ‘கன’ என்ற பதத்தை விஜய் சேதுபதி கவனத்தில் கொள்க...)

திரிஷா – ஜானகிதேவி பாத்திரத்திற்கு பேரழகு சேர்த்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. உணர்வுகளின் வெளிப்பாடு... மிக மென்மையாய் மனம் வருடிச் செல்கிறது.

பலருக்கும் இத்திரைப்படம் கலவையான உணர்வுகளைக் கிளறிச் சென்றதில் வியப்பேதுமில்லை! காரணம் – ஆங்காங்கே நமது மனத்தை மீட்டும் இளையராஜாவின் மெலடிகளின் பூந்தூறல். Evergreen and refreshing memories!

பள்ளிப்பருவத்தில் நமது வகுப்புகளில், நிச்சயம் அது போன்ற இனிமையான பாடல்கள் பாடும் ஒரு ஜானகி தேவி இருந்திருப்பார்.

இருவரின் மனங்களும் ஒன்றையொன்று இருபத்தியிரண்டு வருடங்களாய் தேடிக்கொண்டே இருந்திருக்கின்றன. அதற்கான அடித்தளமான பள்ளிகால காட்சிகளில் அழுத்தமான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. சாதரணமாக இருவருக்கும் அந்த வயதில் ஏற்படக்கூடிய இனம்புரியாத ஈர்ப்பு மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வயதில் ஏற்படக்கூடிய ஈர்ப்பிற்கு அழுத்தமான காரணங்கள் ஏதும் அவசியமில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

படம் துவங்கிய முதல் அரைமணி நேரத்தில் தோன்றிய இதுபோன்ற கலவையான எண்ணங்களைத் தாண்டி, பலவருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த நொடியில், கதையில் நம்மையுமறியாமல் ஒன்றத் துவங்குகிறோம்.

எவர் முன்னிலையிலும் ஜானுவுடன் பேசவும் தயங்கும் ராம், யாருமற்ற தனிமையில் அவளுடன் கழிக்கும் அந்த ஓரிரவின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு வகையான இனிமையை நம்முள் கடத்துகிறது. இனிமையை மட்டுமல்ல – தவறாக எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற ஆரம்பநிலை பதைபதைப்பையும், நிச்சயம் அது போன்ற தவறான முன்னுதாரணமாக இருவரும் இருக்க வாய்ப்பேயில்லை என்பது போன்ற அவர்களின் உடல்மொழிகளையும் சேர்த்தே கடத்தியது இயக்குனரின் சாமர்த்தியம் என்பேன்.

இருபக்கமும் கூர்முனைகளைக் கொண்ட கத்தியின் மீது நடக்கும் கதைக்களத்தை மிக லாவகமாகக் கையாண்ட இயக்குனருக்கு ஒரு சபாஷ்! Kudos to Director Premkumar!

முதல் முதலாக அவளிடம் மனம் விட்டுப் பேசும் ராம் – புடவையில் முதல் முதலாக அவளைப் பார்த்த காட்சியை விவரித்த விதம் – அடி தூள் (அங்கே நிற்கிறார் விஜய் சேதுபதி)

தன்னை மனதினுள் வைத்துக் கொண்டாடிய - தான் விரும்பிய ஆண்மகனின் மொழிகளை, “எங்கே... இன்னொரு தரம் சொல்லு!” என்று சற்றே தாமதமாகக் கொண்டாடி மகிழ்ந்த பெண்மை...

பள்ளிகாலத்திலிருந்து ராம் அவளிடம் நேயர் விருப்பமாகக் கேட்டுக் கொண்டிருந்த ‘யமுனையாற்றிலே’ பாடலை, மின்தடை ஏற்பட்டு அவன் மெழுவர்த்தியையோ டார்சையோ தேடும் நேரத்தில் அவள் பாட, அதைப் பாடிமுடிக்குமுன் அவளது முகபாவனைகளை அவதானித்து விடும் பரபரப்பில் அவன் விளக்கை அடித்துப் பிடித்துத் தேடுமிடத்தில், நமது மனமும் சேர்ந்து துடிப்பதும், அந்த மெல்லிய விளக்கொளியில் அவனது பார்வையின் வாயிலாக நமக்குள் ஏறும் அவளது பாவங்களும் – கண்களைக் கலங்க வைத்த மென்சோகக் கவிதை.

இப்படிக் கவிதையாய் பல காட்சிகள்!

வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து சுகித்திருக்க  வேண்டிய அனுபவங்களை, ஓரிரவில் ஒரு துளி மட்டுமே பருகி தாகம் தணிக்க முயன்ற இரு உள்ளங்கள்...

மெட்ரோ ரயிலில் பயணித்து; மழையில் நனைந்து; கபேயில் காபியருந்தி; அவளுக்கு அவன் தேநீர் தயாரித்து, அவனுக்கு அவள் உணவு தயாரித்து, இருசக்கர வாகனத்தில் பட்டும் படாமல் பயணிக்கும் பொழுதுகளில் – இருவரின் முகங்களிலும் கவிந்து கிடக்கும் ஏக்கம் மனம் பிசைகிறது.

விமான நிலையத்தினுள் கார் நுழையும் அந்த இறுதிக்காட்சியில், அவளது கரத்தின் மீது தனது கரம் வைத்து அவன் கியர் போடும் காட்சியில், கண்ணீர் வழிய இமைக்கவும் மறந்து பார்த்திருந்தது நிஜம். அவனுடைய கண்கள் மீது தனது கரத்தை வைத்து அவள் வெடித்து அழும் காட்சியில்... இத்தனை கனத்திற்கு, இவர்கள் வாழ்வில் ஒன்றிணைந்திருக்கலாமே என்ற ஆதங்கம் கேவலாய் வெளிப்பட்டதும் நிஜம்.

அவள், மணமாகி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவள் என்பதும், அவன் அவள் நினைவாக மணம் புரியாமல் மத்திம வயதை எட்டியிருப்பவன் என்பது போன்ற நினைவுகள் நம் மனங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இருவரிடையே நிலவும் அன்பும் ஆராதனையும் மட்டுமே அக்கணத்தில் உச்சம் பெறுகிறது.

இப்படத்திற்கான பல விமர்சனங்களை, பல வகையான கண்ணோட்டங்களை நான் வாசித்தேன். 

காதல் – இது ஒரு நிகழ்வு. எவரும் வற்புறுத்தி எவர் மீதும் திணிக்கக் கூடிய விஷயமல்ல காதல். மலரானது இயற்கையாய் இதழ் விரிப்பதைப் போல இயல்பாய் முகிழ்ப்பதுவே உண்மைக் காதல். அப்படியான காதல் ஒரு பெண்ணின்/ஆணின் மனதில் கடத்தும் சிலிர்ப்பான உணர்வுகள் அலாதியானவை. அவ்வாறாக முகிழ்த்த காதல் கைகூடாமல் போகும் பட்சத்தில், எத்தனை நிறைவான வாழ்க்கை அமைந்தாலும், மீண்டும் அதுபோன்ற சிலிர்ப்பான காதல் உணர்வுகள் தனது வாழ்க்கைத் துணை மீது ஏற்படாமலே போகக்கூடும் என்பதும் நிதர்சனம். இது brutal reality! இதை துரோகம் என்ற பழிச்சொல் கொண்டு அளவிடுவது என்னைப் பொறுத்தவரை மிக வன்மையான சொற்பிரயோகம் என்பேன். Love has to happen! அது நிகழவில்லையெனில் அது இயற்கையின் குற்றமே தவிர பெண்ணின்/ஆணின் குற்றமல்ல!

உண்மைக் காதலுக்கு அழிவில்லை. இயற்கையாய் முகிழ்த்த அவ்வகையான உணர்வுகளுக்கு மரணமில்லை. அவை, முகிழ்த்த மனங்களில் அடியாழத்தில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். இவை மேலோட்டமாக அல்லாமல் சற்றே ஆழமாக உளவியல் ரீதியிலான பார்வையுடன் நோக்க வேண்டியவை.

Friendship may and often grows into love;
But love never subsides into friendship.

என்று எப்போதோ படித்த ஒரு quote ஞாபகம் வருகிறது.

இங்கு ராம்-ஜானகி இருவரும் தங்கள் உணர்வுகளை எந்தப் பொய்மையுமின்றி நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டதாகவே நான் கருதுகிறேன். அதையும் கண்ணியமான ஒரு கோட்டிற்குள் நின்றே வெளிப்படுத்துகின்றனர்.

மலரும் அனைத்துக் காதல்களும் திருமண உறவில் முடிவதில்லை. தனக்குக் கிடைக்காத பெண் எவருக்கும் கிடைக்கக் கூடாது எனும் எண்ணத்தில், காதலித்த பெண்ணைக் கொலை செய்யும் கொடூர ஆண்களை இப்போது அதிகமதிகம் காண்கிறோம். தான், தன் சுகம் என்று குறுகிய சுயநலக் கண்ணோட்டத்தில், பெற்ற பிள்ளைகளையும் குடும்ப உறவுகளையும் எண்ணிப் பார்க்காமல் வழிதவறும் பெண்களையும் பார்க்கிறோம்.

கொண்ட காதல் கைகூடா விட்டாலும், அதைப் புனிதப்படுத்துவதும் போற்றிக் கொள்வதும் மட்டுமே அந்தக் காதலுக்குச் செய்யப்படும் மரியாதையாகிறது. நிறைவேறா காதலையும் போற்றிக்கொள்ளும் ஒரு அறிவுறுத்தலாகவே நான் இப்படத்தைக் காண்கிறேன்.

அவளுடைய திருமண வாழ்வு சிறக்க வேண்டும் என்று, அவளுடைய மாங்கல்யத்தை அவன் கும்பிட்டுக் கொள்வதும், அவன் இன்னமும் மணம் புரிந்து கொள்ளாமல் தனித்திருக்கிறான் என்பதறிந்து அவள் பதைபதைத்துப் போவதும், ஒருவர் மீதான மற்றவரின் அக்கறையின் வெளிப்பாடுகள்.

இவை அனைத்தையும் தாண்டி ஒரு சில காட்சிகள் மிக மிக நெருடல் – என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு நெருடல் – கபேயில் அவனுடைய மாணவிகள் மத்தியில், அவள் அவனுடைய மனைவியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட, அதை இருவருமே மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுமிடம்.

அவனுடைய வீட்டில், அவனையும் அவள் கட்டிலிலேயே படுத்துக்கொள்ளச் சொல்லுமிடம். (இதை டைப் செய்கையில் என்னுடைய விரல்கள் ஒருவித அசூயையில் கூசியது நிஜம்)

மற்றொரு இடத்தில், அவன் திருமணமின்றி தனித்திருக்கிறான் என்பதே அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விளக்கப் போதுமானதாக இருக்க, அது குறித்து அவள் ஆச்சர்யத்துடன் எழுப்பும் கேள்வி...

இருபத்தியிரண்டு ஆண்டுகள் கழித்து சந்திக்கும் தோழிகள், இப்போதும் அண்ணியாரே நாத்தனாரே என்று பேசிக்கொண்ட காட்சி...

இது போன்ற சில காட்சிகள் இப்படத்தில் நிச்சயம் தவிர்த்திருக்கப் பட வேண்டியவை!

இவை தவிர்த்து, கொண்ட காதலுக்கு ராம் துணிந்து போராட வில்லை – திருமணமான பெண் ஜானகி, பழைய காதலனுடன் இரவில் தனியே ஊர் சுற்றுகிறாள் என்பது போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள்.

ராம் – நாம் கதைகளில் சினிமாக்களில் பார்க்கும் ஹீரோ அல்ல! அவன் எதார்த்த நாயகன். எதார்த்த வாழ்வில் காதலைத் தாண்டிய பல பிரச்சனைகள் உண்டு. இயல்பில் சற்று கூச்ச சுபாவியான ராம், இயல்பான தாழ்வு மனப்பான்மைகள் கொண்ட  கல்லூரிப் பருவ முதிர்ச்சியற்ற ராம் – என்று அவனுடைய கதாப்பாத்திரம் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

“நீ விட்டுட்டு போன அதே இடத்துல தான் இன்னும் இருக்கேன்” என்ற ராமின் டயலாக், அவனுடைய மனவோட்டத்தை வெளிப்படுத்தி விட, தன் மீது அன்பு கொண்டு அந்த அன்பை மனதினுள் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆண்மகனின் மீதான அவளது நம்பிக்கை தான், அவள் அவனுடன் செலவு செய்யும் நேரம். தன்னுடைய கண்ணியத்திற்கு அவனால் சிறு பாதிப்பும் நேர்ந்து விடாது என்ற நம்பிக்கையை அவளில் விதைத்த ராம் கதாப்பாத்திரத்தின் உயர்வு மட்டுமே, அவள் அவனுடன் செலவு செய்யும் நேரத்தில் எனக்குத் தெரிகிறது. என்றாலும், நிச்சயமாக இயல்பு வாழ்க்கையில் இவ்விஷயம் சாத்தியமேயில்லை.

உண்மைக் காதல்கள் அருகிவிட்ட சூழ்நிலையில், சரி-தவறு என்பவை நிமிடத்துக்கு நிமிடம், நபருக்கு நபர் மாறுபடும் இன்றைய காலகட்டத்தில், இது போன்ற ஆழமான நேசங்கள் புரிந்து கொள்ளப்படாமல் போவதிலும், எதிர்மறையான விமர்சனங்களைப் பெறுவதிலும் எனக்கு பெரிய ஆச்சர்யங்கள் ஏதுமில்லை!

96   கள்ளக்காதல் யுகத்தில், அத்தி பூத்தாற்போலத் தோன்றிய கள்ளமில்லா நல்ல காதல் கதை! திறந்த மனத்துடன், அன்பு என்ற அளவுகோல் கொண்டு நோக்கினால், உணர்வுகளைப் புரட்டிப் போடும் அளவிலான அருமையான திரைப்படம்!

பி.கு: ‘இதற்குப் பிறகு என்ன நடக்கும்?’ என்ற கேள்வியும் ஒரு சிலரால் முன்வைக்கப் படுகிறது.

ராம், அவள் சொன்னதற்காக திருமணம் செய்து கொள்வான். அல்லது, அவளது நினைவுகளுடன் தனித்தே இருப்பானேயொழிய, அவளது வாழ்வில் ஒரு போதும் குறுக்கிட மாட்டான். ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவளும் ஒருபோதும் பாதை மாற மாட்டாள். நாம் நேசித்த அளவே நேசிக்கப்பட்டோம் என்ற புரிதலைத் தந்த அந்த ஓரிரவின் நிகழ்வுகளே அந்த அன்பு மனங்களை அமைதியடையச் செய்து விடும் என்பதே என்னுடைய கணிப்பு.
  
பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

Thursday, October 25, 2018

தீபாவளிப் பரிசு #2



தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

என்னதான் ஆன்லைனில் கிண்டிலில் நாவல்கள் வாசித்தாலும், புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி... அதன் புத்தம் புதிய வாசனையின் இனிமையில் லயித்தபடி, மனதிற்கினிய நாவல்களை வாசிப்பதன் சுகம் என்பது அலாதியானது!

அப்படித்தானே நட்புகளே!

உங்கள் அனைவரின் புத்தக வாசிப்பு ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு இனிய அறிவிப்புடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துள்ளேன்.
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நமது SS பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் இன்று முதல், அதாவது 23/10/2018 முதல் 7/11/2018 வரையிலான பதினாறு நாட்களுக்கு 25% கழிவில் கிடைக்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

23/10/2018 to 07/11/2018 Disc @ 25%

கீழ்க்கண்ட இணைப்புகளை சொடுக்கி உங்கள் அபிமான நாவல்களை சலுகை விலையில் வாங்கி மகிழுங்கள்!

http://www.marinabooks.com/category?pubid=0550

http://www.wecanshopping.com/

எமது வெளியீடுகளுக்கு வாசகர்கள் நல்கி வரும் நல்லாதரவுக்கு என்றென்றும் எனது நன்றிகள்.

அன்புடன்
S. ஹமீதா.
(எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ்)

Tuesday, October 23, 2018

தீபாவளிப் பரிசு #1


வணக்கம் தோழமைகளே!

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகிறது. பண்டிகைக் காலத்திற்கேயுரிய உற்சாகத்துடன் அனைவரும் வளைய வரும் இந்த இனிய வேளையில் உங்களுக்கான தீபாவளிப் பரிசுடன் வந்திருக்கிறேன் நட்புகளே!

நவம்பர் 6, 2018 இந்திய நேரம் பிற்பகல் 1:30 மணி முதல் நவம்பர் 7, 2018 பிற்பகல் 1:29 மணி வரை, கீழ்க்கண்ட லிங்கில் உள்ள எனது நாவல்களை, அமேசான் கிண்டிலில் முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

#InIndianISTTimings: from 06/11/2018 13:30 – to – 07/11/2018 13:29 IST

வாசகர்கள் அளித்துவரும் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் எனது அன்பும் நன்றிகளும்.

SS பதிப்பகம் சார்பில் பண்டிகைக்காலச் சலுகை தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்த பதிவுகளில்...

காத்திருங்கள்!

அன்புடன்
S. ஹமீதா.

Amazon.in: hameeda: Kindle Store 


Wednesday, October 10, 2018

உந்தன் அலாதி அன்பினில் - இப்போது அமேசான் கிண்டிலில்

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.

'உந்தன் அலாதி அன்பினில்' நாவல் Amazon.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. வாசித்து மகிழுங்கள் நட்புகளே!

நன்றி.

Monday, October 8, 2018

Thank you Dears...

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்!

'யாரைக்கேட்டது இதயம் ?' நாவலின் முழு லிங்கை ப்ளாகில் பதிவிட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.

இந்த ஒரு வாரகாலமும் வாசகர்களின் கருத்து மழையில் திக்குமுக்காடிப் போனேன் என்பது நிஜம்.

மின்னஞ்சலில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழிகள் Keerthana B ; Padmavathy Prabhakaran

ரமணிச்சந்திரன் நாவல்ஸ் க்ரூப்பில் விமர்சனம் பதிவிட்ட தோழிகள் Jasha Jasha Rabima Sanofar Esther Joseph

ப்ளாகில் கருத்துகள் பதிவிட்ட தோழிகள் cynthia devi ; Anu MN ; Chithra Venkatesan Sujitha Karthik ; Selva Ganesh ; Surya Priya B

இன்பாக்ஸில் தங்களது விரிவான கருத்துகளைப் பகிர்ந்த தோழிகள் Leena Fahima Risha Mohamed Mukilarasi Vengadesan Fathima Ashfa

மீண்டும் இக்கதையை வாசிக்கப்போவதாகச் சொல்லி ஆர்வமுடன் வாசித்து fb பதிவுகளில் கருத்துகள் பதிவு செய்த தோழிகள் - அனைவரின் அன்புக்கும் அருமையான கருத்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒவ்வொரு கதை வாசித்த பின்னும் இன்பாக்ஸில் வந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி. Sharada Krishnan அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கதையின் லிங்க் வரும் புதனன்று மாலை வரை ஆக்டிவாக இருக்கும் என்பதை இப்பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதையின் முழு லிங்குடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் தோழிகளே!

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா.

வாசகி கீர்த்தி அவர்களின் மின்னஞ்சல் பகிர்வு


யாரைக்கேட்டது இதயம்?

ஆரம்பமே அசத்தல்.. PNA நியுஸ் ஹெட், சுமந்தின் வலைப்பதிவிற்க்கு வருகிறது ஒரு தகவல்.. பாரதி என்ற புனைப் பெயருடன்,     

சில உண்மை சம்பவங்களை மைய்யமாகக் கொண்டு ஒரு தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் முதல், வாரம் இரு பதிவுகள் பதிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்.தனி மனித ஒழுக்க சீர்கேட்டினால் குடும்பம் முதல் சமூகம் வரை எவ்வாறு நேரடி... மறைமுக பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதே இத்தொடரின் மைய்யக் கரு.”

சுமந்த்தை வாசிக்க சொல்லி அழைப்பு விடுக்கிறாள் பாரதி.. இதிலிருந்து தொடங்குகிறது கதை.. தன் வாழ்வில், நடந்த கசப்பன சில சம்பவங்களை அவந்திகாவின் வாயிலாக கதையைத் துவங்குகிறார் பாரதி.. கதையின் வாயிலாக அவர் கொடுக்கும் சில தகவல்கள், எங்கோ நேர்மையாக பணியாற்றும் ஒருவரின் உயிரை காப்பாற்ற பயன் பட்டதா இல்லையா என்பது தான் மீதிக் கதை….

பாரதி, அவந்திகா, ஷ்ரேயா மூவரும் யார்..??அந்த அதிகாரிக்கும், சுமந்திற்க்கும் என்ன தொடர்ப்பு, சுமந்த் எவ்வாறு ஷ்ரேயாவையும், அவள் குடும்பத்தினரையும் சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதில் இருக்கிறது கதையின் ஸ்வாரஸ்யம்

எந்த இடத்திலும் சிறு தொய்வின்றி நகற்கிறது கதைஆண் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், இந்த சமூகப் பார்வையில் அதை சுலபமாக கடந்து விடுகிறான். ஆனால்  பாதிப்பு என்னவோ அந்த ஆணின் குடும்பத்திற்க்கும் அவன் மனைவிக்கும் தான் என்பதை சுமதியின் வாயிலாக அறியலாம்..

தனி மனித ஒழுக்கத்தின் தரம் தாழ்ந்ததற்க்கு இன்றைய திரைத்துறையும் காரணமென்பதை ஆழமாக பதிவிட்டிருக்கிறார்.. வாழ்க்கை எப்போது எவ்வாறு வேண்டுமானலும் மாறும் , பாதை மாறும் போது அதை எதிர் கொள்ள கற்ற கல்வியை விட மிகச் சிறந்த துணை வேறு எதுவும் இல்லை .. தவறு செய்தவர்கள், தண்டனை பெற்றே ஆகவெண்டும் என்பதை  தன் அறிவால் ஷ்ரேயா நிடத்திக் காட்டுகிறாள்..

ஹீரோ சுமந்த்எப்பொழுதும் போல உங்கள் அன்பான எனர்ஜடிக் ஹீரோ.. என்ன தான் தவறான வழியில் தந்தை அரசியலில் சம்பாதித்த பணத்தை மூலதனமாக கொண்டு தன் லட்சிய கனவான ஊடகத்துறையில் கால் பதித்தாலும் , நான் மக்களுக்கு நன்மையைத் தான் செய்கிறேன் என்று கூறும் யதார்த்த மனப்பான்மை கொண்டவன்.. ஷ்ரேயாவின் அன்புக் காதலன்… “காதலித்துப் பார்……..” என்று கண்ணியமாய் காதல் புரிபவன்….         நியாயவாதி( ஆளை கடத்தியும்  நிரூபிப்பான்).. நேர்மையான விவேக்கின் அபிமானி. மொத்ததில் எனக்கு பிடிச்ச ஹீரோங்க..

ஹீரொயின் ஷ்ரேயா.. அழகான அன்பான அறிவான (கல்யாண மாலை விளம்பரம் மாதிரி இருக்கோ !!) ஹீரொயின்.. தம்பியை தடம் மாராமல் வழிநடத்தும் ஆசான். அன்னையை கொடும் துயரில் இருந்து மீட்டெத்துதவள்.. சமூக நல கொள்கைகள் கொண்டவள். தன் உறவே தவறு செய்தாலும் தண்டனை பெற்றுத் தரும் நேர்மையானவள்..  சுமந்தின் மனம் கவர்ந்தவள்.

மற்றொரு மனம் நிறைந்த நாவல்.  மொத்ததில் FEEL GOOD..

With luv,
Keerthi.