அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சிறிய அளவிலான பார்ட்டி ஹால், தற்கால
நவீன யுவதியாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தது. ஹோட்டல் மேனேஜ்மென்ட்
படித்து பெருங்கனவுகளுடன் இத்துறையில் காலடி எடுத்து வைத்த இளைஞர்களும் யுவதிகளும்,
பெரிய அளவிலான கேக்கை டேபிளில் செட் செய்வதிலும், பப்பே
முறையிலான இரவுணவுக்கான ஏற்பாடுகளை கவனிப்பதிலும் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர்.
“ராஜ்! எங்கே இருக்கீங்க? டைம்க்கு வந்துடுவீங்க தானே! கெஸ்ட் எல்லாம்
வர ஆரம்பிச்ச பிறகும் உங்களுக்காக நான் வெயிட் பண்ற மாதிரி பண்ணிடாதீங்க...” –
மதியம் மூன்று மணி அளவிலேயே தான் பணியாற்றும் பன்னாட்டு வங்கியிலிருந்து கிளம்பி,
அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பியூட்டி சலூனில் கடந்த இரண்டு மணிநேரமாக
அலங்காரத்தில் ஈடுபட்டிருந்த மாலதி ரங்கராஜன் தனது கணவரை கீழ்ஸ்தாயியில் கொஞ்சமே
கொஞ்சம் அதட்டிக் கொண்டிருந்தார்.
“இல்லல்ல ஹனி! ஐ வில் பி ஆன் டைம்... நீட் நாட் வொர்ரி...” என்று
மறுமுனையில் ரங்கராஜன் உறுதியளிக்க...
“பெரிய கார்பொரேட்டோட சிஈஓ... பொண்டாட்டி பர்த்டே பார்டிக்கு சாரோட
அப்பாயின்ட்மென்ட் கிடைப்பதே பெருசு...” லேசாகக் கிண்டலடித்தபடி இணைப்பைத்
துண்டித்தார்.
அப்படியே இரு மகன்களையும் அழைத்து கணவருக்கு நினைவு படுத்தியது போலவே
அவர்களுக்கும் நினைவு படுத்தினார். மூத்தவன் மெகானிகல் எஞ்சினியரிங் இறுதியாண்டிலும்
இளையவன் ப்ளஸ் டூவிலும் இருந்தனர்.
கண்ணாடியில் இப்படியும் அப்படியுமாகத் திரும்பி அலங்காரத்தை ஒரு முறை ரசித்துக்
கொண்டார். சீராய் கலர் செய்யப்பட்டு நேராக்கப்பட்ட கூந்தல் காற்றடித்தால் கூட
கலையாத அளவில் தோள் வரை படர்ந்திருக்க, ஐவரி வண்ண சில்க் உடையும் கோல்டன் டிஷ்யூ ஷாலும்
பொருத்தமான அணிகலன்களுமாய் பத்து வயது குறைந்தாற்போன்ற தோற்றத்தில் மிகத்
திருப்தியாய் உணர்ந்தார்.
தனது செயலாளர் அஞ்சனாவுடன் கம்பீரமாக மாலதி அந்த பார்டி ஹாலில்
நுழைந்த போது, அனைத்தும் அவரது திருப்திக்கு ஏற்ற வகையில் தயாராக இருந்தன.
பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் அவரைக் கண்டதும் விரைந்து அருகில் வர,
அவருடன் ஓரிரு வார்த்தைகள் உரையாடிக் கொண்டார்.
விருந்தினர் ஒவ்வொருவராய் வரத்துவங்க பார்டி களைகட்டியது. இருமகன்களும்
வந்துவிட, ரங்கராஜன் கேக் வெட்டுவதாக சொல்லப்பட்டிருந்த நேரத்திற்கு ஐந்து
நிமிடங்கள் முன்னதாக ஆஜராகி விட்டார். மகன்களும் சரி கணவரும் சரி பார்டி உடையில்
கண்கம்பீரமாய் காட்சியளிப்பதை மிகப் பெருமையாய் உள்வாங்கிக் கொண்டார் மாலதி.
“ஐ ம் ஆன் டைம் ஹனி! அடுத்த ஒரு வருஷத்துக்கு நீ என்னை குத்திக்
காண்பிக்க வழியில்லாம பண்ணிட்டேன்...” நண்பர்கள் முன்னிலையில் மனைவியை லேசாக
கலாய்த்தபடி நாகரீகமாய் அணைத்து விடுவித்தார்.
“லுகிங் கார்ஜியஸ்...” உதட்டுக்குள் முணுமுணுத்தார்.
கொண்டாட்டமாய் கேக் வெட்டி, நாசூக்காக ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி,
நண்பர்களுடன் அளவளாவி, எண்ணிலடங்காத அளவில் செல்பி எடுத்து... என்று அனைத்தும் நேரம்
பிசகாது நடந்தேறியது.
“ஃபாரின் டெலிகேட்சை ரிசீவ் பண்ண போகணும்னு சொல்லிருந்தேன் இல்ல... யு
கைஸ் கேரிஆன்...” என்றபடி மனைவியை கடமையாய் அணைத்து முத்தமிட்டுவிட்டு
விடைபெற்றுப் போனார் ரங்கராஜன்.
“மாம்! என்னோட கேர்ள்பிரண்டை டிராப் பண்ணிட்டு நான் அப்படியே
வீட்டுக்கு போய்டுவேன்...” என்று விடைபெற்றான் மூத்தவன். இளையவனும் தனது நண்பர்களை
டிராப் செய்துவிட்டு வீட்டுக்கு செல்வதாக ஏற்கனவே சொல்லிச் சென்றுவிட்டான்.
அனைவரும் விடைபெற்றுக் கிளம்பிய பிறகு, அஞ்சனாவிடம் கார்டைக் கொடுத்து
மிகுதித்தொகையை கணக்கு பார்த்து செட்டில் செய்து காரில் ஏறினார். கைப்பழக்கமாய்
போனை ஆன் செய்து முகநூலில் நுழைந்து பார்டி போடோக்களை பதிவேற்றம் செய்து...
“இன்று நான் அடைந்திருக்கும் உயர்வு உங்களால்... உங்களால் மட்டுமே
ராஜ்! என்று ஸ்டேடஸ் தட்டினார்.
அப்படியே முகநூலில் உலாவ... அனைவரும் ‘#அவனும் நானும்’ என்று பதிவு
போட்டுக் கொண்டிருப்பது புரிந்தது.
#அவனும் நானும்...
நாகரிகமும் தனிமையும்...
தாமரைஇலையும் தண்ணீரும்...
என்று முரண்பாடாய் ஏதேதோ தோன்ற... அவர் பதிவு செய்த போட்டோக்களும்
ஸ்டேடசும் விருப்பங்களையும் வாழ்த்துக்களையும் அள்ளிக் குவிக்கத் துவங்கியிருந்தன.
மாலதி மேடம் காரிலேரியதும் அவசரம் அவசரமாய், சற்றே எரிச்சலுடன் டூ
வீலரை ஸ்டார்ட் செய்து காத்திருந்த கணவன் சதீஷுடன் இணைந்து கொண்டாள் அஞ்சனா.
“இனிமே இந்த பார்டி கீர்டிகெல்லாம் ஒத்துக்காதே. ஆபிஸ்ல இருந்து
வீட்டுக்கு போயிட்டு மறுபடி கிளம்பி லேட் நைட்ல உன்னை அழைச்சிட்டு போக வேண்டியிருக்கு. எப்படியோ வந்து சேரட்டும்னு விட்டுத் தொலைக்கவும் மனசு வரல... பிள்ளைங்க
இந்நேரம் தூங்கியிருக்கும்.” வெடுவெடுத்தபடியே வண்டியை ஓட்டினான்.
“சாரி சாரி! இனிமேல் இல்லை...” அவனின் கோபம் புரிந்தாலும் அதிலிருந்த
அக்கறை அவளைத் தாலாட்ட, மெல்ல அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள். நேரம் கிட்டத்தட்ட
இரவு பதினொரு மணியைத் தொட்டிருக்க, சென்னையின் சாலைகள் வெறிச்சோடத்
துவங்கியிருக்க... அவளின் செய்கை அவனின் கோபத்தை வெகுவாகக் குறைத்து அப்பயணத்தை
இனிமையாக்கியது.
வீடு வந்து சேர்ந்து அது இருக்கும் நிலையைப் பார்த்ததும், அதுவரை
இருந்த இனிமை முற்றிலுமாய் மறைந்து போனது அஞ்சனாவுக்கு.
அந்த தீப்பெட்டி சைஸ் இரண்டுபடுக்கையறை பிளாட் அலங்கோலமாய்
காட்சியளித்தது. டிவி ஓடியது ஓடியபடி இருக்க... பிள்ளைகள் ஹோம்வொர்க் செய்த பிறகு
புத்தகங்களை அப்படியே போட்டு விட்டு தந்தை ஊட்டிய உணவினை உண்டுவிட்டு
உறங்கியிருந்தனர்.
எரிமலையானாள் அஞ்சனா.
சதீஷ் உடைமாற்ற சென்றுவிட... “அஞ்சாவது படிக்கிற பொண்ணு, ஹோம்வொர்க்
முடிச்சா புக்சை பேக்ல வைக்க தெரியாதா? அம்மாவும் வேலைக்கு போறேன்... நீ தான்
பொறுப்பா தம்பியை பார்த்துக்கணும்னு படிச்சு படிச்சு புத்தி சொல்றேன்...”
அலுப்பில் சற்றே குரலுயர்த்திக் கத்தியபடி, புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டு,
டைனிங் டேபிளில் அப்படியே கிடந்த உணவுப்பாத்திரங்களை ஒழுங்கு செய்தாள்.
“அதெல்லாம் அப்படியே கிடக்கட்டும்... காலைல பார்த்துக்கலாம்...”
மனைவியுடனான பைக் பயணத்தின் இனிமை இன்னமும் கண்களில் மிச்சமிருக்க அறையிலிருந்து
மனைவியை நோக்கி குரல் கொடுத்தான் சதீஷ்.
“அதுசரி... காலைல பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு நீங்க நல்லா ஜாலியா
ஏழு மணி வரை தூங்குவீங்க... எனக்கு தெரியாதாக்கும்...” நொடித்தபடி காலையில்
அவசரமாக தேவைப்படக்கூடிய பாத்திரங்களை பரபரவென தேய்த்துக் கழுவினாள். பிரிட்ஜை
ஆராய்ந்து, காலை சமையலுக்கு தேவையான காய்களை பத்து நிமிடத்தில் நறுக்கி
டப்பர்வேரில் போட்டு பத்திரப்படுத்தினாள்.
‘தேங்காய் மட்டும் காலைல துருவிக்கலாம்... இப்ப இதுக்கு மேல என்னால
முடியவே முடியாது...’ அவளுடல் ஓய்வுக்காய் கெஞ்சிக் கொண்டிருந்தது. படுக்கையில்
சாய்ந்த நிமிடத்தில் ஆசையாய் பற்றிப் படர்ந்த கணவனின் கரங்களை எரிச்சலாய்
தட்டிவிட்டு உறக்கத்தின் பிடிக்குள் பயணித்தாள்.
காலையில் பர பரவென எழுந்து, பிள்ளைகளை எழுப்பிக் கிளப்பி சமையலைப்
பார்த்து என்று ரோபோவாய் அவள் இயங்கிக் கொண்டிருக்க, சதீஷ் அடித்துப் போட்டற்போல
உறங்கிக் கொண்டிருந்தான். ‘கொஞ்சம் தண்ணியை எடுத்து அவன் தலை மேல ஊத்தினா என்ன?’
என்று வந்தது அவளுக்கு.
பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி வேன் வரும் நேரத்தில்
காபி அருந்தியபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.
“நைட்டில இருக்கேன்... ப்ளீஸ் ப்ளீஸ்... பிள்ளைகளை கொஞ்சம் வேன்ல
ஏத்தி விட்டு வந்துடுங்க...” தாஜாவாய் சொன்னால் தான் அவனிடம் காரியம் ஆகும்
என்பதுணர்ந்து தணிவாய் கேட்டாள்.
“போடி! அதெல்லாம் முடியாது...” அவன் நேற்றைய அவளின் நிராகரிப்பை
இன்னமும் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான். மகளின் குட்டிக் கூந்தலில் இரட்டைப்
பின்னலைப் போட்டு கருப்பு ரிப்பனைக் கட்டியபடி...
“ப்ளீஸ் ப்ளீஸ்... பையனுக்கு
ஷூவை மாட்டி விடுங்க...” என்று மீண்டும் சத்தம் கொடுத்தாள்.
அவள் குரலின் பரபரப்பு கலந்த குழைவு அவனைத் தாக்கியது... “ச்சே...
பாவம்... ஒத்தை ஆளா எதை எதைத்தான் பார்ப்பா...?” எண்ணியவனாய் மகனைத் தூக்கி
சோபாவில் அமரவைத்து ஷூவை மாட்டினான்.
மனைவி, பிள்ளைகளுக்கு முத்தமிட்டு வழியனுப்பிய போது சந்தடி சாக்கில்
அவனும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
பிள்ளைகள் இருவரையும் அழைத்துச் சென்று வேனில் ஏற்றி கையசைத்து
பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்த போது... அஞ்சனா புலம்பினாள்.
“மாலதி மேடம் கிட்ட இருந்து மெசேஜ் வந்தாச்சு... அதை ரெடி பண்ணு...
இதை ரெடி பண்ணு... வழக்கமா வர்றதை விட பத்து நிமிஷம் முன்னாடியே வந்துடு-ன்னு... நானென்ன
இவங்களை மாதிரி எல்லா வேலைக்கும் ஆளா போட்டிருக்கேன்...”
“சரி சரி விடு... இன்னைக்கு ஷேர் ஆட்டோல போக வேண்டாம்... நானே டிராப்
பண்றேன்...”
இருவரும் கிளம்பி அலுவலகம் செல்லும் வழியில் மெல்ல அவன் காதருகே
முனகினாள்...
“சாரிங்க... வெரி சாரி...”
“ஹேய் லீவ் இட்... நீ எங்கே போய்ட போற... இல்ல நான் தான் எங்கே போய்ட
போறேன்...” அவன் ஆறுதலாய் சொன்னாலும்... அவள் இறங்கி விடை பெறும்போது...
“இன்னைக்கும் ஏமாத்தினா இந்த சாரி எல்லாம் செல்லுபடியாகாது... ஓகே...”
என்று கண்சிமிட்டினான்.
அலுவலகத்தில் ஆளாளுக்கு, முதல் நாள் மாலதி மேடம் பதிவிட்ட பார்டி
போட்டோக்களைப் பார்த்துக் கொண்டும் ‘#அவனும் நானும்’ ஸ்டேடஸ் பற்றிப் பேசிக்
கொண்டும் இருக்க...
அஞ்சனாவுக்கு சதீஷின் கண்சிமிட்டல் கண்களுக்குள் வந்து போனது.
#அவனும் நானும்...
ஊடலும் கூடலும்...
மெல்லச் சிரித்தபடி தேவையான பைல்களை எடுத்துக் கொண்டு மாலதியின்
அறைக்குள் நுழைந்தாள்.
“வா வா! அஞ்சனா... இங்கே பாரு நிஷாவுக்கும் ஷ்யாம்கும் வெட்டிங்காம்.”
தன்னெதிரே அமர்ந்திருந்த இருவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தபடி சொன்னார்.
“ஆமாம் மேடம்... ரெண்டு மாசமா இவங்க தான் நம்ம பேங்க்ல ஹாட் டாபிக்...”
அஞ்சனாவும் அவரின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டாள்.
புதிதாய் திருமணம் புரியக்காத்திருந்த இருவரின் முகங்களிலும்
நம்பிக்கை ததும்பியது.
“மேடம்! உங்க பார்டி போடோஸ் சூப்பர்...” நிஷா சொல்ல...
“உன்னோட ஸ்டேடஸ் அதை விட சூப்பர்... எப்படி எப்படி?
#அவனும் நானும்
தாபமும் தவிப்பும்
அவனும் நானும்
குளிரும் தணலும்...
இன்னும் என்னென்னமோ எழுதியிருந்தியே... எனக்கு சரியா நினைவு வரலை...”
என்று லேசாக கேலி செய்ய நிஷாவின் முகத்தில் மெல்லிய வெட்கம் கோடு போட்டது.
#அவனும் நானும்
வாழ்க்கையும் நம்பிக்கையும்
அவனும் நானும்
நம்பிக்கையும் வலியும்
அவனும் நானும்
வலியும் வேட்கையும்
அவனும் நானும்
வேட்கையும் தாம்பத்தியமும்
அவனும் நானும்
தாம்பத்தியமும் காமமும்
அவனும் நானும்
காமமும் காதலும்
அவனும் நானும்
காதலும் காதலும்...
அஞ்சனாவும் மாலதியும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.