Monday, March 20, 2017

கலைந்து போன மேகங்கள் - 14

Image result for bmw car launch images 

மேகம் – 14

விஷயம் சொல்லிவிட்டு அவளின் முகம் பார்த்தான். அவளின் உதடுகள் மெலிதாகத் துடித்துக் கொண்ருந்தது. குடித்து முடித்த காபி கோப்பையை சைடு டேபிளில் வைத்தவன், மனைவியை அருகில் இழுத்துக் கொண்டான்.

அவளின் அழகு முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்...

“இப்ப இதுக்கு என்ன வேணுமாம்?? இந்தத் துடி துடிக்குது...” கட்டை விரல் கொண்டு மெல்ல அந்த துடித்துக் கொண்டிருந்த இதழ்களை நிரவியபடி ரசனையாய்  வினவ...

“ம்ம்ச்... விடுங்க... அதுக்கு இப்போதைக்கு ரெஸ்ட் வேணுமாம்.” அவள் விலகினாள்.

“என்ன சொல்ற... போய் தான் ஆகணும். நாமும் ஒன் ஆப் தி சப்ளையர்ஸ்.” அவன் அவளின் பதிலுக்கு விடாப்பிடியாக நின்றான்.

அவள் அவனை தீர்க்கமாகப் பார்த்தாள். அவளுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஆர்டருக்காக அவன் எந்த அளவுக்கு முயன்றான் என்பது. இன்னமும் ஆர்டர் கிடைத்த விஷயத்தை அப்பா அண்ணனிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை. மிக முக்கியமான அந்தத் தருணத்தில், அவள் அவனருகில் இருப்பதை அவன் மனம் மிக மிக எதிர்பார்க்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

அவளைப் பொறுத்த வரை சந்தீப் எங்கோ எப்போதோ முந்திய ஜென்மத்தில் சந்தித்த ஒரு கதாபாத்திரம் எனும் அளவுக்கு அவளின் நினைவுகளில் பின்னுக்குப் போயிருந்தான். என்றாலும் அவனுடன் சமகாலத்தில் விளையாடிய பல வீரர்கள் தங்கள் முகவரியைத் தொலைத்திருக்க, இன்றளவிலும் அவன் அணியுடன் தொடர்பில் இருப்பதும், அவன் மிக நேசித்த விளையாட்டுடன் தொடர்புள்ள துறையின் உச்சத்தில் இருப்பதும் அவளை மகிழ்ச்சியடையவே செய்தது. அவனை மீண்டும் சந்தித்தாலும் தன் மனம் அந்த சூழ்நிலையைக் கையாளும் பக்குவத்தில் இருக்கிறது என்று அவள் தீர்க்கமாக நம்பினாள்.

தன்னுடைய பதிலுக்காக கணவன் காத்திருப்பது புரிய, அவனை நெருங்கி அணைத்து சற்றே எம்பி அவனின் கீழ்த்தாடையில் இதழ் பதித்தாள்.

“கண்டிப்பா போகலாம் நரேன்! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.” அவள் மிகத் தெளிவாக உரைக்க, அவளின் தெளிவில்... உறுதியில் அவனின் காதல் கிளறி விடப்பட்டது.

“தட்ஸ் மை கேர்ள்! இன்றைக்கு பியூர்லி பெர்சனல் வொர்க் ஒன்லி.” அவளின் காதுக்குள் கிசுகிசுத்தான்.

அன்று அவர்கள் இருவரின் நாளும், பன்னிரண்டரை மணியளவில் மிக அயர்ச்சியாக... மிக நிறைவாக... மிக மிகக் காதலாக நிறைவுக்கு வர... அவர்களின் நெருக்கத்துக்கு மௌன சாட்சியாய் விளங்கும் காதல் மிகப் பெருமிதமாய் தனக்குத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டது.

காலை ஐந்தரை மணியளவில் ஒலித்த அலாரத்தின் இன்னிசையில், வழக்கமாக அடித்துப் பிடித்து எழுந்து விடும் நேஹா அன்று அடித்துப் போட்டாற் போல உறங்கிக் கொண்டிருக்க... எப்போதும் அடித்துப் போட்டாற் போல உறங்கும் நரேனுக்கு சட்டென்று விழிப்புத் தட்டியது.
கையணைப்பில் இருந்த மனைவியின் முடி  கோதியவன், அவளின் காதுக்குள் முணுமுணுத்தான்.

“அலாரம் அடிச்சிடுச்சு...”

“என்னால எழும்பவே முடியல... ப்ளீஸ்... ஒரு பத்து நிமிஷம்.” வழக்கத்தை விட தாமதமாக உறங்கியதால் அவளால் நிஜமாகவே எழ முடியவில்லை.

“சரி... நான் நேற்று சீக்கிரமே தூங்கிட்டேன். பிள்ளைகளை நான் பார்த்துக்கறேன். நீ கொஞ்சம் நேரம் படு...” என்றுவிட்டு மனமில்லாமல் விலகினான்.

‘பிள்ளைகளை எழுப்ப இன்னும் நேரம் இருக்கு. குளிச்சிட்டு காபி குடிச்சிட்டே எழுப்பிக்கலாம்...’

எண்ணியபடி குளித்துவிட்டுக் கீழே வந்தான்.

சமையலறைக்குள் எட்டிப் பார்க்க...

“நரேன்! அதிசயமா ஆறு மணிக்கு நீ வந்திருக்க... நேஹா எங்கே?” என்று சுசீலா ஆச்சர்யப் பட...

“தூங்கறா மா! எனக்கு என்னவோ முழிப்பு வந்துடுச்சு... அதான்...” லேசாக முகம் சிவந்து தடுமாறினான்.

“பாவம் டா! தினமும் ஓட்டம் தான் அவளுக்கு. அப்பாவும் அண்ணனும் சிட் அவுட்ல இருக்காங்க. இதோ நான் காபி எடுத்துட்டு வரேன்.” என...

டைனிங் அறையின் பக்கவாட்டில் அமைந்திருந்த சிட் அவுட்டுக்கு வந்தான். தோட்டத்தைப் பார்த்தது போல அமைந்திருந்த அந்த இடம் காலை வேளையின் ரம்யத்தை தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்க, மிக இதமாக உணர்ந்தான்.

யோகனும் ஜெயச்சந்திரனும் காலை தினசரிகளை மேய்ந்தபடி அமர்ந்திருக்க...

“அப்பா! வெதர் ஃபோர்காஸ்ட் பாருங்க... இடியுடன் கூடிய மழைன்னு நிச்சயமா போட்டிருக்கும்.” தம்பியை அவ்வளவு காலையில் பார்த்த யோகன் கிண்டலடிக்க...

சிரித்தபடி.. ”மார்னிங் பா...” என்று அவர் முன்னே அமர்ந்தான்.

அதற்குள் சுசீலாவும் வந்துவிட, காபியை கையில் எடுத்துக் கொண்டான்.

“ஒரு குட் நியூஸ் வெச்சிருக்கேன் எல்லோருக்கும்...” கையிலிருந்த தினசரியைக் கீழே வைத்துவிட்டு எல்லோரும் ஆர்வமாக...

“ஜெர்மன் கார் கம்பனியோட அடுத்த சீரிஸ்க்கு ஆக்சிலும் டோர் பானலும் ஆர்டர் கிடைச்சிருக்கு.” அவன் குரலில் மகிழ்ச்சி இருந்தது... ஆனாலும் வெகு சாதரணமாகவே சொன்னான்.

“வாட்???” தந்தையும் தமையனும் ஒருசேரக் கூவினர்.

“யு டிட் இட் நரேன்!” யோகன் தம்பியை எழுப்பிக் கட்டிக் கொண்டான்.

அப்பா... “ரொம்ப சந்தோஷம் நரேன்....” என்று கை குலுக்க... சுசீலா அவனின் முகம் தடவி நெற்றியில் முத்தமிட்டார்.

அப்பாவுடன் ஒரு அர்த்தமுள்ள பார்வையை பரிமாறிக் கொண்டான். அவனுக்கு தெரியும், அவருக்கு ஏற்கனவே விஷயம் வந்திருக்கும் என்பது...

“ஆட்டோகார் இந்தியாலயும்(Autocar India) பிபிசி டாப்கியர்லயும்(BBC Topgear) இண்டர்வியு எடுத்துட்டு போயிருக்காங்க. அடுத்த எடிஷன்ல வரும்.” அவை இரண்டும் அவன் மிக விரும்பி வாசிக்கும் ஆட்டோமொபைல் செய்திகளுக்கான இந்தியாவின் முன்னணி மாத இதழ்கள்.    

“என்னடா இப்படி சர்வ சாதரணமா சொல்ற...” யோகனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை...

“எனக்கு இது ரொம்ப சின்ன விஷயமா தான் படுது. எப்ப என்ஜின், கியர்பாக்ஸ் சப்ளை பண்றேனோ... அது தான் நிஜமான அச்சீவ்மென்ட்.”

இது தான் நரேன்! தொழில் பொறுத்தவரை... பேராசைப் பட்டுக் கொண்டே இருப்பவன் தான் உயர உயரப் பறக்க முடியும் என்ற உண்மை புரிந்தவன்.

“இந்த வருஷம் தான் இப்படி லோக்கலைஸ் பண்ணிருக்காங்க. போன வருஷம் வரை ரெண்டே ரெண்டு லோகல் சப்ளையர்ஸ் தான். இந்த வருஷம் மொத்தம் எட்டு. அதில் நம்ம ஜேசி யும் ஒன்னு.” அவன் மெல்ல சொல்லிக் கொண்டிருக்க... தந்தைக்கும் யோகனுக்கும் புரிந்தது... இது சாதாரண விஷயமே இல்லை என்பது.

மூன்று வருடங்களுக்கு முன்பு... இந்திய அளவிலான உற்பத்தியாளர் கூட்டமைப்பின் ACMA விருது (Automotive components manufacturers association) வென்ற பிறகும், கடந்த இரண்டு வருடங்களாக விடாப் பிடியாக அவ்விருதை தக்க வைத்துக் கொள்ளும் போதும் அவனுடைய வெளிப்பாடு இப்படியானதாகத் தான் இருந்தது. இது போல இன்னும் சில விருதுகள்... இந்திய அளவிலான ஆட்டோ எக்ஸ்போக்களில் பங்கேற்பு... அது சம்பந்தமான அவார்டுகள் என்று அவனின் பயணம் அவன் திட்டமிட்ட திசையில்... அவன் தயாரிக்கும் உலகத் தரம் வாய்ந்த ஆட்டோமோடிவ் காம்போனென்ட்ஸின் சீரான சிறப்பான வேகத்தைப் போலவே அமைந்திருந்தது.

“ஜாப்பனீஸ் கம்பெனியோட மிட் சைஸ் எஸ்யுவி க்கு ஹைட்ராலிக் ப்ரேக்ஸ் அப்புறம் ஷாக் அப்சார்பெர்ஸ் ரெண்டும் அடுத்த வாரம் ஓகே ஆகிடும்...” அடுத்த குண்டைப் போட்டான்.

அப்பாவும் அண்ணனும் ஒருவர் முகத்தை மற்றவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர். அவன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்டது அவர்களுக்குப் புரிந்தது. 

நேஹா... எழுந்து குளித்து... மகனைக் கிளப்பி கீழே அனுப்பிவிட்டு... மகளை இடுப்பில் வைத்துக் கொண்டு கீழே வர...

அங்கிருந்த சூழ்நிலை பார்த்தே அவன் விஷயம் சொல்லி விட்டது ஊகித்துக் கொண்டாள்.

“ஒஹ்...சொல்லியாச்சா...?” மெல்லிய சிரிப்புடன் கேட்க...

துவட்டியும் துவட்டாத ஈரக் கூந்தலுடன் சாதாரண காட்டன் சல்வாரில், பனியில் நனைந்த பன்னீர் ரோஜா போல் கண்களை நிறைத்த மனைவியை கண்டும் காணாமல் ரசித்துக் கொண்டான்.

“நீ அவளைக் கொடு...” மகளை வாங்கி மடியில் இருத்திக் கொண்டான்.

“நீ தூங்கு... நான் பிள்ளைகளை பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு இங்கே வந்து உட்காந்துட்டார் அத்தை....” அவள் சுசீலாவிடம் மெல்லிய குரலில் புகார் படித்தாள்.

பொதுவாக இரவு இரண்டு மணி வரை வேலை செய்யும் நரேன்... காலை எட்டு மணிக்கு முன்பு எழவே மாட்டான். அவன் எழும்போது மகன் பெரும்பாலும் கிளம்பி இருப்பான். நேரம் இருந்தால் மகளை ப்ளே ஸ்கூலில் கொண்டு விடுவான். அதிலும்... அவனே அசெம்பிள் செய்து வைத்திருந்த புல்லட்டில் மகளை முன்புறம் அமர வைத்துக் கொண்டு செல்வது என்றால் அவனுக்கும் சரி மகளுக்கும் சரி... குஷி கிளம்பிவிடும்.  
“நரேன்...ட்ரீட் எப்போ?” ஜோவும் வந்துவிட... பிடுங்கி எடுத்தாள்.

"புருஷனும் பொண்டாட்டியும் மகா அழுத்தம். எல்லா பிசினஸ் மாகசினுக்கும் இண்டர்வியூ குடுத்துட்டு அப்புறம் தான் வீட்டுல சொல்லுவீங்களோ...?” உரிமைக் குரல் எழுப்ப... கொண்டாட்டத்தில் வீடு ரெண்டு பட்டுக் கொண்டிருந்தது.
அடுத்த சனிக்கிழமை... இந்த வருஷத்துக்கான சீரிஸ் லான்ச் சென்னைல பண்றாங்க. அதில தான் அஃபிஷியலா அனௌன்ஸ் பண்ணுவாங்க. அதற்குப் பிறகு ட்ரீட் வெச்சுக்கலாம்.” அவன் வழக்கம் போல நேர்த்தியாகத் திட்டமிட்டான்.

அதன் பிறகு யாருக்கும் அங்கே நிற்கவும் நேரமில்லாமல் போனது.
மகனைக் கிளப்பி பள்ளிக்கு அனுப்பி விட்டு வந்தவளிடம் கேட்டான்.

“நேஹா! இன்றைக்கு நீ மார்னிங் கொஞ்ச நேரம் ஃப்ரீ பண்ணிக்க முடியுமா? உங்க அப்பாவைப் பார்த்து விஷயம் சொல்லிட்டு வரலாம்.” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

பொதுவாக அவன் அவரிடம் தன் தொழில் விஷயங்களைத் தானாகப் பகிர மாட்டான். அவனுடைய கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் போது அவராகவே அறிந்து பிரமித்துக் கொள்வார். அதை நேஹாவிடம் பகிர்ந்து கொள்வார். அவனை சில சந்தர்பங்களில் அவராகவே பாராட்டுவார். ஆனால் அவன் அதையும் ஒரு சின்ன சிரிப்பிலும் நன்றியிலும் புறம் தள்ளி விடுவான்.

நேஹாவுக்குத் தோன்றும்... அவன் இன்னமும் பழசை மறக்கவில்லையோ என்று?

மனம் நினைத்ததை சட்டென்று கேட்டு விட... அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான்.

“ஹேய்! என்ன நீ? எனக்கு அதையெல்லாம் நினைக்க ஏது நேரம்? உனக்குத் தெரியாதா... நான் பொதுவாவே... என்ன செய்யறேன்... எப்படி செய்யறேன் என்பதையெல்லாம் யாரிடமும் டிஸ்கஸ் பண்ண மாட்டேன். அவர் ஒரு அப்பாவா தன் கடமையை சரியா தான் செய்தார். ஆரம்பத்தில் அவரோடான உறவில் கொஞ்சம் சுணக்கம் இருந்தது தான். ஆனா நம்ரூ பிறந்த  பிறகு... என்னால் அவரை இன்னும் நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சுது.” என்று விளக்கியவன்...

“இந்த விஷயம் போன்ல சொல்றது சரியில்லை. நேர்ல போய் சொல்லி ப்ளெசிங்க்ஸ் வாங்கிக்கிட்டா தான் மரியாதையா இருக்கும்.”

“அப்புறம் அப்படியே... நம்ம பீச் ஹௌஸ் விஷயமும் சொல்லிடலாம். இந்த கார் லான்ச் முடிஞ்ச பிறகு அங்கே ஒரு கெட் டுகெதர் வைத்து எல்லோருக்கும் ட்ரீட் கொடுத்துடலாம். நீ என்ன நினைக்கற?” அவனின் திட்டங்களுக்கு அவளிடம் அப்ரூவல் கேட்டான்.

தன்னுடைய பெற்றோரையும் அவன் மிக முக்கியமாக கருதுவது எப்போதுமே அவளுக்குத் தெரியும் என்றாலும் இந்தத் தருணத்தில் மிக நிறைவாக உணர்ந்தாள்.

நரேன், தன்னுடைய வருமானத்தை தொழிலைப் பெருக்கவே அதிகம் பயன் படுத்தினான். தனக்கென்று சொத்து வாங்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு இருக்கவே இல்லை. ஆனால் சமீபமாக அவர்களுக்கென்று ஒரு ஹாலிடே ஹோம் போல ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற... புதிதாகக் கட்டி முடிக்கப் பட்ட ஒரு பீச் ஹௌஸ் விலைக்கு வர... அதை வாங்கி சில மாறுதல்களை செய்து கொண்டிருந்தனர்.

“என்னன்னு தெரியல... உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கு நரேன்! நான் காலேஜ்க்கு லீவ் சொல்லிடறேன். அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு இன்றைக்கு ரெஸ்ட் எடுத்துக்கறேன்...” 

அவள் பொதுவாக இப்படிச் சொல்லுபவள் இல்லை.

“ஹேய்...என்னாச்சு?” அருகில் வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். முகம் லேசாக சிவந்து கண்கள் சுரந்தது போல இருப்பதைக் கண்டு கொண்டவன்...

“சாரி டா! உன்னை ரொம்ப படுத்தறேன். லேட்டா வர்றது... அலம்பல் பண்றது... பிள்ளைகளைப் பார்த்துக்கறதுல ஒரு ஹெல்பும் பண்றதில்லை... ஷுட் சேஞ் மைசெல்ஃப். நீ ஒரு பாரசிடமால் போட்டுக்கோ. அப்பாவைப் பார்த்துட்டு வந்துட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ. சரியாகிடும்.” அவனின் குரலின் அக்கறை அவளை நெகிழ வைத்தது.

இருவரும் கிளம்பி நேஹாவின் வீட்டுக்கு வந்தபோது... ஏற்கனவே போனில் தகவல் சொல்லியிருந்த படியால் ராகவேந்திரன் அலுவலகம் செல்லாமல் காத்துக் கொண்டிருந்தார்.

பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு மெல்ல விஷயம் சொன்னான். எழுந்து அருகில் வந்து லேசாக அணைத்து கைகுலுக்கி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகள் தானாகவே அவரின் அருகின் வர... அவளின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நரேன்.” அவர் அவனை மாப்பிள்ளை என்று அழைப்பதை விட நரேன் என்று உரிமையாக அழைப்பதையே விரும்புவார்.

பத்து வருடங்களுக்கு முன்பு எஃகின் உறுதியுடன்  அவன் சொன்ன வார்த்தைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

“சொன்ன மாதிரியே பத்து வருஷத்து டார்கெட் அச்சீவ் பண்ணிட்டீங்க. அடுத்த பத்து வருஷத்துக்கு என்ன டார்கெட்?” அவர் ஆடிட்டராய் கொக்கி போட... அவன் ரசித்துச் சிரித்தான்.

“அடுத்து... ஃபாரின் கொலாபரேஷன்ல சென்னைல ஒரு பிளான்ட் போடணும். ஆனா அது  மூணு வருஷ டார்கெட்” அவன் அடுத்த திட்டத்தை விவரிக்க அவர் பெருமிதமாகக்  கேட்டுக் கொண்டார்.

மகளும் மருமகனும் வருகிறார்கள் என்றவுடனே ஸ்வீட் செய்யச் சொல்லி தயாராக இருந்த மாலினி... அதைக் கிண்ணங்களில் எடுத்துக் கொண்டு வந்து பரிமாறி மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்.

“நம்ரூவை தூக்கிட்டு வந்திருக்கலாமில்ல. ஒரு நாள் ப்ளே ஸ்கூலுக்கு லீவ் போட்டா குறைஞ்சா போயிடப் போகுது...” அலுத்துக் கொண்டார்.

பள்ளி விடுமுறைக் காலங்களில் நிஷாந்த்தும் அஷ்வினும் இங்கேயும் ஜோவின் அம்மா வீட்டிலும் சில நாட்கள் ஒன்றாக சென்று தங்கி வருவர். நரேனைப் பொறுத்த வரை நேஹாவை அனுப்பத் தான் ரொம்ப யோசிப்பான். அதில் மாலினிக்கு மிகப் பெருமையும் உண்டு... கொஞ்சம் மனத் தாங்கலும் உண்டு.

நேஹாவைப் பார்த்ததுமே அவளின் முகம் சற்றே சோர்ந்திருப்பதைக் கண்டு கொண்டார் மாலினி. அவளிடமும் கேட்டு அறிந்து கொண்டவர்...

“இங்கே அம்மாவோட கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேண்டா. முகம் ரொம்ப சோர்வா இருக்கு.” என்றவர் மருமகனிடம் மெல்ல விண்ணப்பம் போட்டார்.

“மதியத்துக்கு மேல எப்போதும் காலேஜ்ல இருந்து திரும்பிப் போற நேரத்துல அனுப்பி விட்டுடறேன் நரேன்.” என...

முன்பு ஒருமுறை, தான் அவரிடம் விண்ணப்பம் போட்டது நினைவுக்கு வர... மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.

நரேன் மனைவியின் முகம் பார்த்தான்.

“நீ இருந்துட்டு வா. நான் கிளம்பறேன்.” என்றபடி புன்னகை முகமாய் கிளம்பினான்.

“லஞ்ச் எங்கே அனுப்ப சொல்லட்டும்  நரேன்...” அவனின் பின்னோடு வந்தவள் மெல்லிய குரலில் வினவினாள். அவன் பாக்டரி... அலுவலகம்... மீட்டிங் என்று சுற்றி சுழன்று கொண்டே இருந்தாலும் பெரும்பாலும் மதிய உணவு அவனிருக்கும் இடம் சென்று சேரும்படி பார்த்துக் கொள்வாள்.

“தொடர்ந்து ரெண்டு ஷிப்ட் ப்ரொடக்ஷன் போயிட்டு இருக்கு. நான் பாக்டரி போறேன். லஞ்ச் முடிச்சிட்டு ட்ரேட் சென்டர் போகணும். இன்னும் நாலு நாள் தான் இருக்கு... குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் க்கு... பொலிடிகல் ப்ரெஷர்” அவன் பேசியபடி அவசரமாகக் கிளம்பினான்.

அம்மாவுக்கு ஃபோனடித்து நேஹாவின் உடல்நிலை பற்றியும், அவள் அவளின்  அம்மா வீட்டிலிருந்து மாலையில் திரும்பி விடுவாள் என்பதையும் தெரிவிக்க... சுசீலா ஒரு நிமிடம் ஒன்றுமே பேசவில்லை.

“நரேன் நான் சொல்றேன்னு நீ தவறா எடுத்துகிட்டாலும் பரவாயில்லை. நீ நேஹாவை சிரமப் படுத்திட்டு இருக்க. உன்னோட தொழில் லட்சியம் எல்லாம் எனக்குப் புரியுது. ஆனா அவளோட சௌகர்யம் தூக்கம் இதுக்கெல்லாமும் நீ முக்கியத்துவம் கொடுக்கணும். பெண்கள் உடல் நிலை எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. நீ அவளை அம்மா வீட்டுக்கு அனுப்பறதே இல்லை. பெண்களுக்கு எப்பவுமே அம்மா வீடு... அம்மா கை சாப்பாடு  என்பதெல்லாம்  சுகமான விஷயங்கள் தான்.” அவர் அடுக்கிக் கொண்டே போக...

“மா... இது என்ன... நான் என்னவோ அவளைக் கொடுமைப் படுத்துற மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க....” பொறுமையிழந்தான் நரேன்.

“சரி... விடுங்க... இனிமேல் பார்த்து நடந்துக்கறேன்...” என்று கட் செய்தான்.

அம்மா சொல்வதில் உள்ள உண்மை அவனுக்கும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அது போல உரிமையாய் அவளை அலைக்கழிப்பதில் அவனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதில் உள்ள சுகங்களை அவன் பெரிதும் விரும்பினாலும்... நாள் முழுவதும் வேலையாட்களும் பெரியவர்களும் நடமாடிக் கொண்டிருக்க... சில சின்னச் சின்ன இன்பங்களை இழக்க வேண்டியதாகத் தான் இருந்தது.

‘சரி... அந்த பீச் ஹௌஸ் ரெடி ஆகிட்டா... அடிக்கடி அவளையும் பிள்ளைகளையும் அங்கே கடத்திட்டுப் போய்ட வேண்டியது தான்.’ மனதுக்குள் சுகமாக திட்டமிட்டுக் கொண்டான்.

‘சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமே வந்து அவளை டாக்டர்ட்ட அழைச்சிட்டு போய்டணும்.’

நேஹா, தானே காரை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் சென்று வருவாள். பிள்ளைகளின் பள்ளி விஷயங்கள் அவளின் கல்லூரி மற்றும் சென்று வரவேண்டிய முக்கியமான நிகழ்வுகள் என்று எதற்கும் அவனை எதிர்பார்க்கவும் மாட்டாள் தொந்தரவு செய்யவும் மாட்டாள். ஆனால் அவளுக்கு ஒன்று என்றால்... அவன் வந்தாக வேண்டும். முக்கியமாக இது போல உடல் நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துச் செல்ல அவன் மட்டுமே வேண்டும்.

அவளின் நினைவில் அவன் மனதில் சுகந்தம் வீசியது.

கார் ஓட்டக் கற்றுக் கொள்ள அவள் படுத்திய பாடு நினைவுக்கு வந்தது.

“நரேன்! நான் கார் ஓட்டினா சைக்கிள் கூட என்னை ஓவர் டேக் பண்ணிட்டு போய்டும். ரோட்டுல போற வர்றவனெல்லாம் திட்டுவான். நீங்க வேற பெரிய ஆட்டோமோடிவ் என்ஜினியர். நான் கார் ஓட்டி உங்க பேர் ரிப்பேர் ஆகிடப் போகுது.” அவளும் என்னென்னவோ சொல்லித் தப்பிக்கப் பார்த்தாள்.

“ஒரு காரை என் கையில் கொடுத்தா அரை மணி நேரத்துல பிரிச்சுப் போட்டு மறுபடி அசெம்பிள் பண்ணிடுவேன். சோ என் மனைவி கண்டிப்பா கார் ஓட்டியே ஆகணும்.” அவனும் வழக்கம் போல விடாப்பிடியாக நின்று கற்றுக் கொடுத்தான்.    

மனைவியின் நினைவில் மனம் கொள்ளை போனது போல உணர்ந்தான் நரேன். உதடுகள் புன்னகையில் விரிந்தது.

“எஸ்... ஷீ சிம்ப்ளி ஸ்டோல் மை ஹார்ட்.” மொத்தமாய்க் களவு கொடுத்ததில் இத்தனை நிறைவு தோன்றுமா என்ன...?? அவன் மனம் ஆச்சர்யத்தில் ஆட்பட்டுக் கிடந்தது.

மகனிடம் ஃபோனில் பேசிய பிறகு சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டார் சுசீலா. நேஹா மீது அவருக்கு தனிப் பிரியம் உண்டு. ஜோ வேறு விதம். விளையாட்டுத் தனம் அதிகம். ஆனால் நேஹா... கலகலப்பானவளாக இருந்தாலும்... வீட்டின் பழக்கவழக்கங்கள்... நாள் கிழமைகளில் செய்யவேண்டிய நல்ல காரியங்கள் என்று அனைத்திலும் பங்கெடுத்துக் கொள்வாள். கவனமாகக் கற்றுக் கொள்வாள். சுசீலாவுக்கு நன்றாகத் தெரியும்... ஜோ அவருடைய மூத்த மருமகளாக இருக்கலாம்.... ஆனால் குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு, அந்த வீட்டின் தலைமைப் பொறுப்புக்கு நேஹா தன்னை இயல்பாகவே பொருத்திக் கொள்வாள் என்பது. ஜோவும் அதை இயல்பாகவே எடுத்துக் கொள்வாள் என்பதும் அவருக்குத் தெரியும்.

‘அதிசயமா அம்மா வீட்டில் விட்டு வந்திருக்கான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலமா வரட்டும்.’ மருமகளை மனதுக்குள் சீராட்டிக் கொண்டார்.

அனைவரும் வெகுவாக எதிர்பார்த்திருந்த கார் லான்ச் தினமும் வந்தது.

மாலையில் நரேன் பரபரப்பாகக் கிளம்பிக்  கொண்டிருந்தான்.

“நேஹா! நான் ஷோரூம் போயிட்டு லான்ச்சிங் செரிமனி முடிஞ்சதும் அப்படியே ஹோட்டல் போய்டுவேன். நீ ஏழு மணிக்கு ஹோட்டல் வந்துடு. செகண்ட் ப்ளோர்ல ஹால் நம்பர் சிக்ஸ்ல பிரஸ் மீட் இருக்கு. அதுக்கு முக்கியமானவங்களை  மட்டும் தான் அலோவ் பண்ணுவாங்க. நீ ஹால் நம்பர் எய்ட்க்கு போய்டு. அங்கே உனக்கு சீட் நம்பர் 21.  அங்கே இந்த ப்ரோக்ராம் ஸ்க்ரீன் பண்ணுவாங்க. இந்தா அந்த ஹால்க்கு போறதுக்கு பாஸ்.” என்றபடி அதற்கான நுழைவு அனுமதி பாசைக் கொடுத்தான்.

“மிசஸ் மல்ஹோத்ரா... மிசஸ் சுக்லா... அப்புறம் மனிஷோட சிஸ்டர் இவங்கெல்லாம் வருவாங்க. பட் சீட் நம்பர்ஸ் தள்ளித் தள்ளி போட்டிருக்காங்க. பார்த்துக்கோ. பிரஸ் மீட் முடிஞ்சதும் நான் வந்து உன்னை பாங்குவெட் ஹாலுக்கு அழைச்சிட்டு போறேன். அது வரை அங்கேயே இரு. அப்புறம்..... நீ டிரைவ் பண்ண வேணாம். டிரைவரை வரச் சொல்லி இருக்கேன்.” பர பரவென்று கிளம்பியபடி பொரிந்து கொண்டிருந்தான்.

என்ன சாரி... என்ன ஜ்வெல்ஸ்...?? என்று அதை வேறு ஒரு பார்வை பார்த்தான்...

“குட்...சூப்பர்...கலக்கு....” என்று விட்டுக் கிளம்ப...

“நரேன்! ஒரு நிமிஷம்... சந்தீப்போட பேச வேண்டியிருக்குமா?” மெல்லக் கேட்டாள்.

ஒரு நிமிடம் அவளை ஆழப் பார்த்தான். அவளே தொடர்ந்தாள்...

“மோஸ்ட்லி அவனுக்கு என்னை ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை. எனக்கு எதையும் ஞாபகப் படுத்த விருப்பமில்லை. பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் ஜஸ்ட் மிசஸ் நரேந்திரன்னு அறிமுகப் படுத்துங்க... போதும்.”

தெளிவாக உரைத்த மனைவியின் கன்னம் தட்டினான். விடைபெற்றுக் கிளம்பி விட்டான்.

நேஹா, சரியாக ஏழு மணிக்கு ஹோட்டல் வந்து விட்டாள். நிறைய பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் செக்யூரிட்டி செக் என்று ஏக கெடுபிடிகள் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து அவளுடைய சீட்டை வந்தடைந்து அமர்ந்து கொண்டாள். அவன் சொல்லியபடி சில தெரிந்த முகங்கள் தென்பட கையசைத்து ஹாய் சொன்னாள்.

மற்றொரு ஹாலில் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகள் இங்கே நேரலையாக ஒளிபரப்பப் பட... அனைவரும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தலாயினர்.

ஜெர்மன் கம்பெனியின் சென்னை பிளான்ட்டின் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் தொடங்கி புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட எட்டு லோக்கல் சப்ளையர்கள் வரை அனைவரும் உரையாற்றினர். நரேனின் முறை வந்த போது...

தான் தொழில் தொடங்கிய முறை... வளர்ந்த விதம்... தற்போது தயாரிப்பில் இருக்கும் உதிரி பாகங்கள்... அதில் பயன்படுத்தப் படும் புதிய உத்திகள்... இனி மேற்கொள்ளப் போகும் புதிய முயற்சிகள் என்று மிகத் தெளிவாக... மிக மிக சுருக்கமாக தான் தயாரித்திருந்த உரையை வாசித்தான்.

நேஹாவின் கண்கள் கணவனை ஆவலுடன் உள்வாங்கியது. அவனுக்குப் மிகப் பிடித்த அடர் கருப்பு வண்ண சூட்டில் கனகம்பீரமாகத் தான் இருந்தான் என்றாலும் அதையும் தாண்டி அவன் முகத்தில் மிளிர்ந்த அறிவுக் களையில் அவள் தன்னை மறந்தாள். இந்தத் தருணத்தின் ஒரு நொடியையும் இழக்க அவளின் மனம் தயாராக இல்லை. எத்தனை உழைப்பு... எத்தனை திட்டமிடல்... நடுநடுவே சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. அத்தனையும் எதிர்கொண்டு சமாளித்து, எந்த நிலையிலும் தொய்ந்து போகாமல் மனவுறுதியுடனும் நம்பிக்கையுடனும் சவால்களை எதிர்கொண்டு, இன்று அவன் நின்று கொண்டிருக்கும் உயரம் பார்த்து அவளின் மனம் தளும்பிப் போயிற்று. அவனின் அத்தனை நிலைகளிலும் உடன் பயணிக்க, வரமாய் வாழ்க்கை அளித்த இறைவனுக்கு மானசீகமாக நன்றி சொன்னது.

ஒருவாறாக பிரஸ் மீட் முடிந்து அவளை அழைத்துச் செல்ல வந்தான். அவனின் முகமும் கண்களும் வெற்றியின் சந்தோஷத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க... நேஹாவின் கண்கள் அதை மிச்சம் மீதி வைக்காமல் முழுமையாக படம்பிடித்து தன்னகத்தே சேமித்துக் கொண்டது.

மனைவியை நெருங்கி... அவளின் தோளைச் சுற்றிக் கை போட்டு அணைத்துக் கொண்டவன்...

“நேஹா! ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு...” என்றான் அவளின் காதோரமாய். இவ்வளவு மகிழ்ச்சியாய் அவள் அவனைப் பார்த்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல மகிழ்வான தருணங்களை உள்ளடக்கியதாகவே அவர்களின் வாழ்க்கை இருந்திருக்கிறது. என்றாலும், இன்றைய தினத்தில் அவன் முகத்தில் ஒளிரும் மகிழ்வு அவனுக்கு அசாதாரணமான கம்பீரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கண்டாள்.

‘கடவுளே! இவன் முகத்தில் தான் எத்தனை தேஜஸ்.’

பிள்ளைகள் பிறந்த போது... அவர்களை முதன் முதலாக அவன் ஸ்பரிசித்த போது என்று அவனின் பல பிம்பங்கள் அவளின் மனக்கண்ணில் பதிந்து போனதுண்டு. ஆனால் அவனின் இன்றைய ஒளிர்வு, அவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது.

“ஹேய்! லுகிங் மார்வெலஸ்....” கண்கள் ரசனையாய் அவளில் நிலைக்க பாராட்டிக் கொண்டான். அவனின் மகிழ்ச்சியில்... பாராட்டில் அவள் குளிர்ந்து போனாள்.

நேஹா அன்று ஆஃப் வைட்டில் ஒரு புறம் சிவப்பும் மறுபுறம் பச்சையுமாக கரையிட்டு அக்கரைகளில் முத்து வேலைபாடுகள் அமைந்த சேலையும் பொருத்தமான முத்து அணிகலன்களும் அணிந்திருக்க... அப்புடவையின் உடல் முழுவதும் இழையோடிய மெல்லிய ஜரிகை அவளின் முகத்தின் ஒளியைக் கூட்டிக் கொண்டிருந்தது.

“சோ ஹாப்பி ஃபார் யு நரேன்....” அவளின் வார்த்தைகளில் அவனும் குளிர்ந்து போனான். அவளின் முகத்தில் வழிந்து கொண்டிருந்த உணர்வுகள் அவளின் வார்த்தைகளை விட நூறு மடங்கு வீரியமிக்கது என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான்.

“வா! டின்னர் ஹாலுக்கு போய்டலாம்.” கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

“அங்கே பாரு... இப்பவும் சந்தீப்பைச் சுற்றி பெண்கள் கூட்டம் தான்...” என்று சிரித்தவன்...

“இன்ட்ரோட்யூஸ் பண்ணாங்க. ‘யு லுக் சோ யங். க்ரேட் அச்சீவ்மென்ட்...’
என்று பாராட்டினான்.”

“வா போய் ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாம்.” என்று அழைக்க...

“எதுக்கு நரேன்... தேவையில்லாம....” இவள் தயங்க... அவன் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

இன்னும் சில இளம் கிரிகெட் வீரர்களும் வந்திருக்க... கூட்டம் அவர்களைச் சுற்றிக் கொள்ள... சற்றுத் தனியாக நின்றிருந்த சந்தீப்பிடம் அழைத்துச் சென்றே விட்டான்.

சந்தீப்... காதோரத்தில் லேசாக நரை வாங்கியிருந்தான். ரிம்லெஸ் கண்ணாடி அணிந்து அடர் நீல வண்ண சூட்டில் மிக மரியாதைக்குரிய தோற்றத்தில் இருந்தான்.

“மீட் மை வைப்....” என்று இவன் ஆரம்பிக்க...

“மிசஸ் நரேந்திரன்?” என்று கேள்வியாய் வினவியபடி அவளின் முகம் பார்த்த சந்தீப் ஒரு நிமிடம் திகைத்தான்...

“மிசஸ் நேஹா நரேந்திரன்... ரைட்...” குரல் ஆச்சர்யத்தை வெளிப்படுத்த... அவன் முகத்தில் ஏற்கனவே இருந்த புன்னகை மேலும் விரிய...
இப்போது திகைத்துப் போவது இவர்களின் முறையாயிற்று.

“ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. யு ரிமெம்பர் ஹெர்....?” நரேனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நேஹாவுக்கு வார்த்தையே வெளிவர வில்லை... சிலையாகிப் போனாள்.

“எப்படி மறக்க முடியும்? மறந்தால் நான் நன்றி கெட்டவன் ஆகி விடுவேன்.” என்றவன்...

“என்றேனும் ஒரு நாள் சந்திப்பேன் என்று தெரியும். ஆனால் இன்று வெரி ஸ்வீட் சர்ப்ரைஸ். சோ ஹாப்பி. யு போத் லுக் ஆப்சல்யூட்லி கார்ஜியஸ்.” அவனின் கண்களின் சந்தோஷம் வார்த்தைகளில் வழிந்தது.

“வெயிட். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்.” என்றுவிட்டு... மற்றொரு புறத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனின் மனைவியை கையாட்டி அழைத்தான். அவனின் மனைவி ஒரு அழகிய பத்துப் பனிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை அழைத்தபடி அருகில் வர...

“ஒஹ்! இஸ் தேட் யுவர் டாட்டர்?” ஆவலை அடக்க மாட்டாமல் நேஹா கேட்க... அதற்குள் அவர்கள் இருவரும் அருகில் வந்துவிட்டனர்.
மனைவியை அறிமுகப் படுத்தினான்.

அவள்... ”ஓஹ! நேஹா...” என்று மிக அறிமுகமானவள் போல பிரியமாய் அணைத்து நாகரீகமாய் அவளின் கன்னத்துடன் கன்னம் வைத்தாள்.

மகளைப் பார்த்து... “இன்ட்ரோட்யூஸ் யுவர்ஸெல்ப்...” மெல்லிய பெருமிதத்துடன் புன்னகை முகமாய் சொன்னான் சந்தீப்.

வெள்ளை நிற முழுநீள ஸ்லீவ்லெஸ் உடையில், தேவதை போன்ற அழகுடன்... வயதுக்கு மீறிய உயரத்துடன் இருந்த அச்சிறுமி...

“ஹாய்! ஐ ஆம் நேஹா... நேஹா ரத்தோர்” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள். 

மேகம் இன்னும் கலையும்...


4 comments:

 1. நல்ல அத்தியாயம் ஹமீதா
  இந்த அத்தியாயத்துல நேஹா, நரேனை விட சந்தீப்பை தான் எனக்கு மிகவும் பிடித்தது
  அவன் நேஹாவை என்னவாக பார்த்திருக்கான் என புரியுது
  இறுதி அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. சந்தீப்பை மிக பிடித்தது என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி சித்ரா. இக்கதை பொறுத்தவரை அவனும் ஒரு ஹீரோ தான். இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன்... உங்களுடைய கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

   Delete
 2. Hi hameeda
  Update super ma thiitamittu uzhaithal saathanai padaikalam yendra varikaluku udharanam intha Kathai Sandhepai marupadiyum parthathil so happy ma waiting for u r next episode 😀😀😀

  ReplyDelete
  Replies
  1. அழகான பதிவுக்கு மிக்க நன்றி மதி. எஸ்... கதை சொல்ல வர்ற விஷயம் அது தான்... நிறைவுப்பகுதியில் சந்தீப் இன்னும் கொஞ்சம் வருவான். வாசித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்... காத்திருக்கிறேன்.

   Delete